tamilnadu

img

ஊரடங்கால் முடங்கிய விசைத்தறி தொழில்-  பட்டினியால் வாடும் தொழிலாளர்கள்

தருமபுரி, ஏப்.25-

தருமபுரி மாவட்டத்தில் ஊரடங்கால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளதால், அதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியால் வாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், முக்கல்நாய்கன்பட்டி , பாரதிபுரம், இலளிகம், ஜருகு, வெள்ளக்கல், பாளையம்புதூர், தேவரசம்பட்டி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி தொழிலை நம்பி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுக தொழிலாளர்களாகவும்  வேலை செய்து வருகின்றனர். விசைத்தறியில் துண்டு, வேஷ்டியும் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு தயாரிக்கும் வேஷ்டி, துண்டுகளை ஈரோடுக்கு கொண்டுசென்று மொத்தமாக விற்கின்றனர்.

தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கல் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதால் இங்கு தாயரிக்கப்பட வேஷ்டி,துண்டுகள் விற்கமுடியாமல் விசைத்தறி தொழிலாளர் வீட்டில் குவிந்து கிடக்கிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியால் வாடும் அலவநிலைக்கு அவர்களது குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அன்னசாகரத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் பரதன் என்பவர் கூறுகையில்,
நான் 10 விசைத்தறிகளை வைத்துள்ளேன். என்னிடம் 50 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாதத்தில் ஒரு தொழிலாளிக்கு 10 ஆயிரம் ருபாய்  வரை கூலி கிடைக்கும். தற்போது ஊரடங்கு,போக்குவரத்து முடக்கத்தால் சுமார் 25 லட்சம் மதிப்பிலான வேஷ்டி, துண்டுகள் தயாரிக்கப்பட்டு விற்கக முடியாமல் வீட்டில் வைத்துள்ளேன். இதனால் வாங்கிய கடனை திருப்பி தரமுடியவில்லை தொழிலாளர்களுக்கு கூலியை கொடுக்க முடியவில்லை என வேதனையுடன் குறிப்பிட்டார்.

சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.பி.சாமிநாதன் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் இருந்து வருகிறது.  மாவட்டம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30,ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு மாதகாலமாக விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். போக்குவரத்து முடங்கியதால் ஏற்கனவே தாயரிக்கப்பட்ட வேஷ்டி துண்டுகள் சுமார் ரூ.50 கோடிக்கு அவரவர் வீடுகளிலும் குடோன்களிலும் தேங்கியுள்ளது.
வட்டிக்கு வாங்கி தொழில் நடத்தியவர்கள் திருப்பி செலுத்த முடியவில்லை தொழிலாளர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை இதனால் பட்டினிகிடக்கும் நிலை உள்ளது.
விசைத்தறி தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ 1000, வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. இது போதுமானதாக இல்லை. எனவே பதிவு பெற்ற ஒருவருக்கு தலா ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும். 35 கிலோ அரசி வழங்க வேண்டும். அரசு வழங்கும் ரூ 500 தொகுப்பு பொருளை விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும்.ஊரடங்கு உள்ள காலங்களில் விசைத்தறி தொழில் கூடங்களுக்கு மின்சார கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.