tamilnadu

img

தரம் குறைந்த நூல் கொள்முதல்: விசாரணைக்கு உத்தரவு

சென்னை,ஜன.2- இலவச வேட்டி-சேலைக்கு கொள்முதல் செய்யப்படும் நூல் முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு ஒரு  கோடியே 25 லட்சம் இலவச வேட்டி, சேலைகள் வழங்க அரசு முடிவு  செய்துள்ளது. இதற்கான நூலை கைத்தறி, ஜவுளித்துறை கொள்முதல்  செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. இதில் ஒரு சேலைக்கு, ரூ.260 கூலியாக வழங்கப்படுகிறது.  இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், ரூ.21 கோடியே 31 லட்சத்து 21 ஆயி ரத்து 250 அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த  நூல்களை நெய்வதால் அவை அடிக்கடி அறுந்து விடுகிறது. இதனால்  ஒரு நாளைக்கு 3 சேலைகள் மட்டுமே நெய்யப்படுகிறது. நெசவாளர்க ளின் தொழிலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து தமிழக  லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு வியாழனன்று(ஜன.2) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நூல் கொள்முதல்  முறைகேடு தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்ச  ஒழிப்புத்துறை காவலர்கள் 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி சட்டப்படி  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

;