திருவள்ளூர், அக். 14 - திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள ஆயிலச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிலி குப்பம் கிராமத்தில் தனியார் நிலத்தில் 1962-ல் ஓலைக் குடிசையில் துவங்கப்பட்ட பள்ளி 1982 பிறகு இடமே காணாமல் போனது. பின்னர் அருகில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்த ஆர்.ராமநாத நாயுடு என்பவர் 1.62 ஏக்கர் நிலத்தை பள்ளிக் கூடம் கட்ட 1981ல் தானமாக வழங்கினார். வெறும் 40செண்ட் நிலத்தில் தான் தொடக்கப்பள்ளி, சத்துணவு கூடம், அங்கன்வாடி, மகளிர் சுய உதவி குழு போன்ற கட்டிடங்கள் உள்ளன. மற்ற நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குறுகிய இடத்தில் கட்டப்பட்ட தொடக்கப்பள்ளியும் பாழடை ந்துள்ளதால் 2007 முதல் மூடிக்கிடக் கிறது. இதனால் மாணவர்கள் படிக்க இடமில்லாமல் தவிர்த்து வந்தனர். பள்ளிக் கட்டிடம் இல்லாததால் மகளிர் சுய உதவி கட்டிடத்தில் தற்போது அரசுப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்நிலையில் 2010-பிறகு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஏ.பாஸ்கரன் என்பவர் குழந்தைகளின் கல்வி மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டார்.உடைந்துபோன ஓடுகளை அகற்றி, பொது மக்கள், முன்னாள் மாணவர்கள் பங்களிப்போடும் சொந்த பணத்தையும் செலவு செய்து 1400 சதுர அடி பரப்பளவில் இரண்டு வகுப்பறைகளைக் கட்டினார். வகுப்பறை களை நவீனமாக்கும் வகையில் தொடு திரை வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது 45மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் தலைமை ஆசிரியர் பாஸ்கரின் செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திங்களன்று (அக்-14) சிங்கிலிகுப்பத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். குழந்தைகளுடன் பேசினார்.ஆர்வமுடன் செயல்படும் தலைமை ஆசிரியர் பாஸ்கரின் சமுக பணியைப் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளை மூடினால் இலவச கல்வித் தர முடியாது. அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது ஏழை குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் மாற்றுகிறது என்றார்.