பிபின் சந்திர பால் நினைவு நாள்
1886- ல் காங்கிரஸில் சேர்ந்தார். அசாம் தோட்டத் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்தும் சிலசமயம் அடித்தே கொல்லப்படுவது குறித்தும் 1896-ல் பிபின் போராடியதால் காங்கிரஸ் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது. அப்போதைய அசாம் கமிஷனர் சர் ஹென்றி காட்டன் முயற்சியால் இந்த தீமைகள் விலகின. வங்கப் பிரிவினையை எதிர்த்துத் தீவிரமாகச் செயல்பட்டார். 1907-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினார்.
அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு, சுதேசிப் பொருட்கள் பயன்படுத்துதல், பிரிட்டிஷ் தொழிற்சாலைகளில் இருந்து வெளிநடப்பு, தேசியக்கல்வி ஆகியவற்றை வலியுறுத்தி வந்தார். சுதேசிப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் ஏழ்மையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் நீக்கலாம் என்றார். வந்தே மாதரம் இதழைத் தோற்றுவித்தவர்களில் பிபின் சந்திர பாலும் ஒருவர். வந்தே மாதரம் இதழில் ஆட்சியாளரை எதிர்த்து எழுதிய வழக்கில் அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்ததால் ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது விடுதலை நாளைக் கொண்டாட முற்படும் போதுதான் வ. உ. சிதம்பரம்பிள்ளையும் சுப்ரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர்.
1908-லிருந்து 1911 வரை அவர் நாட்டைவிட்டு வெளியில் வசிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அதனால் லண்டனில் தங்கினார். அங்கிருந்து ‘ஸ்வராஜ்’ இதழை வெளியிட்டார். 1916-ல் திலகரின் ஹோம் ரூல் இயக்கத்தில் இணைந்தார். முதலாம் உலகப்போரின் போது காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்து சென்றார். ரஷ்யாவில் நடந்த போல்ஷ்விக் புரட்சி அவரை மிகவும் கவர்ந்தது. 1921-ல் பாரிசாலில் நடைபெற்ற வங்காள மாகாண மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.
இளமையிலேயே இந்து சமூகத்தில் உள்ள கொடுமைகளை எதிர்த்தார். இவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் புரட்சி வீரராகவே திகழ்ந்தார். இவரது இரு மனைவியரும் விதவைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. முதல் மனைவியின் அகால மரணத்திற்குப் பிறகு பிராஜ்மோஹினி தேவி என்பவரை 1891-ல் மணந்தார்.
பெண் கல்வியை ஆதரித்தார். 1891-ஆம் ஆண்டு திருமண வயது அதிகரிக்கச் செய்த சட்டத்துக்கு பிபின் மிகுந்த ஆதரவு அளித்தார். அதனால் பழமைவாதிகளின் விரோதத்தைப் பெற்றார். அவரது உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
பிபின் சந்திர பாலர் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் கல்கத்தாவில் மறைந்தார். அவர் இந்தியாவிற்கு அந்நியரிடம் இருந்து சுதந்திரம் கிடைப்பதுடன் ஆன்மீக விழிப்புணர்ச்சியும் தேவை என்று எண்ணினார். அதனால் தேசிய கல்வி குறித்து மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டார். பெண் மறுமணம் குறித்து ஒரு முன்னோடியாக வழிகாட்டினார்.
பெரணமல்லூர் சேகரன்