tamilnadu

img

மக்கள் எழுச்சி பெறும்போது அரசியலுக்கு வருவேன் : நடிகர் ரஜினிகாந்த்

சென்னை, மார்ச் 12- தமிழகத்தில் மக்கள் எழுச்சி பெறும்போது தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் வியாழனன்று  செய்தியாளர்களிடம் பேசுகையில், 1996ஆம் ஆண்டு முதல் நான் அரசியலுக்கு வருவதாக பலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிதான் அரசியலுக்கு வருவதாக கூறினேன். அப்போது நான் சிஸ்டம் சரியில்லை. முதலில் அதை சரி செய்ய வேண்டும். மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினேன். சிஸ்டத்தை சரி செய்யாமல், அரசியல் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி மாற்றம் என்பது மீன் சட்டியை கழுவாமல் சர்க்கரை பொங்கல் செய்வது போன்றது என்றார். திமுக, அதிமுகவில் உள்ளது போல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி பதவிகளை தேர்தலுக்கு பிறகு நான் வைத்துக் கொள்ளாமல், கட்சிக்கு தேவைப்படும் முக்கியமான பதவிகளை மட்டும் வைத்துக்கொள்வேன். தேர்தலுக்கு பிறகும் பல பதவிகள் நீடிக்குமானால் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது என்றார்.

மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களாக 50, 55 வயதைக் கடந்தவர்களே அதிகமாக உள்ளனர். நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கி இருக்காமல் அரசியலில் ஈடுபட வேண்டும். எனது கட்சியில் 50 வயதிற்கு கீழே உள்ள கண்ணியமானவர் என பெயரெடுத்தவர்களுக்கு 65 விழுக்காடு வரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். 35 விழுக்காடு பிற கட்சியில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அவர்களாக விருப்பப்பட்டு நமது கட்சியில் சேர்ந்தால் அவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். இவர்கள் அதிகார சூத்திரத்தை கையிலெடுத்துக் கொள்ள நான் பாலமாக இருக்க வேண்டும். இதற்கு எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கை பயன்படும் என நம்புகிறேன் என்றார். ஒரு சில கட்சியைப் போல் கட்சித் தலைவரும், ஆட்சித் தலைவரும் ஒன்றாக இருப்பது போல் இங்கு இருக்காது. அதேபோல் கட்சி சார்ந்த விழாக்கள், கல்யாணம் போன்ற நிகழ்வுகளில் ஆட்சியாளர்கள் பங்கேற்க வேண்டியதில்லை. கட்சித் தலைவர் பங்கேற்றால் போதுமானது என்றார். முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது. நான் வலிமையான கட்சி பொறுப்பை மட்டுமே வகிப்பேன். ஒரு படித்த இளைஞரையோ அல்லது ஒரு பெண்ணையோ கூட முதல்வராக்குவேன். ஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது. இதுதான் நான் விரும்பும் மாற்று அரசியல் என்றார்.

மிகப்பெரிய கட்சியான திமுக, அதிமுகவை எதிர்க்க வேண்டும். மிகப்பெரிய ஆளுமை கருணாநிதி இறந்து விட்டார் அவரது வாரிசு வாழ்வா சாவா என்ற நிர்ப்பந்தத்தில் உள்ளார். ஆளும் கட்சியோ பண பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது. இவர்களை எதிர்த்து வெற்றிபெற முடியுமா என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதாவிற்காக விழுந்த வாக்குகள் 70 விழுக்காடு. அந்த இரண்டு கட்சிகளுக்கான வாக்கு என்பது வெறும் 30 விழுக்காடு மட்டும்தான். மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் எழுச்சி வர வேண்டும். 50 விழுக்காடு பெண்களில் 30 விழுக்காடு பெண்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அறிவில்லாமல் இருக்கிறார்கள். மக்களிடையே, பாமரர்களிடையே நீங்கள் (பத்திரிகையாளர்கள், அறிவு ஜீவிகள்) விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த எனது கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும். அரசியல் புரட்சி வெடிக்க வேண்டும். இல்லையென்றால் நான் அரசியலுக்கு வந்து என்ன பயன்? 15, 20 விழுக்காடு வாக்கு வாங்க நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?

எனக்கு 71 வயது ஆகிறது. நான் பிழைத்து வந்திருக்கிறேன். இதைவிட்டால் 2026இல் எனக்கு 76 வயதாகி விடும். எனவே இப்போது ஆட்சிக்கு வரவில்லை என்றால் அடுத்து 2026இல் ஆட்சிக்கு வர முடியாது. மூலை முடுக்கெல்லாம் போய் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள், ரஜினிகாந்த் ஆட்சிக்கு வர வேண்டும் என்று, அந்த எழுச்சி எனக்கு தெரியட்டும், அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன். கட்சி வேறு, ஆட்சி வேறு என்ற நிலை வர வேண்டும். அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் தற்போது ஏற்படவில்லை என்றால் இனி எப்போதும் ஏற்படாது என்றார். மேலும் செய்தியாளர்கள் யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்று தவிர்த்து விட்டார். ஆனால் இறுதிவரை தான் எப்போது கட்சி ஆரம்பிப்பேன் என்றோ, தான் மக்களிடையே சென்று அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றோ கூறவில்லை. வழக்கம் போல் அவர் குழப்பத்தில் உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

;