tamilnadu

img

முன்னாள் காவல் அதிகாரியின் கடிதம் உணர்த்துவது என்ன?

“வடகிழக்கு தில்லியில் கலவரங்களை முடுக்கி விடுவதற்கு வெறுப்பை உமிழ்ந்த பாஜகவைச் சார்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது, கைது செய்வதற்குரிய குற்றங்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. ஆனால், உண்மையான தேச பக்தர்களை கிரிமினல் வழக்குகளில் சிக்க வைப்பதற்கு தில்லி காவல் துறை அடாவடியான நடவடிக்கை எடுத்திருக்கிறது. அமைதியான முறையில் போராடி வந்த சிறுபான்மை மக்கள் மீதே பொய் வழக்கு தொடுத்துள்ளது” என தில்லி காவல் துறை ஆணையருக்கு ஒருவர் 12.9.2020 அன்று கடிதம் எழுதியிருக்கிறார்.

கடிதம் எழுதியவர் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த தலைவர் அல்ல. சமூக ஆர்வலர் அல்ல. அரசியல்வாதியும் அல்ல. இந்தியாவின் மும்பை மாநகர காவல்துறை ஆணையராகவும், பல மாநிலங்களில் டிஜிபியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜூலியோ ரிபைரோ என்ற அதிகாரி தான் அவர். 1953 ல் இருந்து 89 வரை பல மாநிலங்களில் காவல்துறை அதிகாரியாக செயல்பட்டிருக்கிறார் ரிபைரோ. அவருடைய பணிக்காக பத்மபூஷண் விருது உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார். இத்தகைய ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியே கடுமையாகக் குற்றம் சாட்டக்கூடிய அளவுக்கு, மத்திய அரசின்  நேரடிப் பொறுப்பில் உள்ள தில்லி மாநிலக் காவல்துறைதான் இத்தகைய பொய் வழக்குகளைப் புனைந்துள்ளது. காவல்துறை அதிகாரி ஜூலியோ ரிபைரோவின் கடிதத்தை ஆதரித்து திங்களன்று, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் எட்டு பேர் அறிக்கை விடுத்துள்ளனர். மிகவும்  வேதனை தெரிவித்து, காவல்துறை புலனாய்வு வரலாற்றிலேயே இது மிகவும் துயரமான நாள் என்று நாங்கள் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம் என அந்த அதிகாரிகள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவினுடைய தூண்டுதலின் பெயரில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, புகழ்மிக்க பொருளாதார வல்லுனர் ஜெ.ஏன்.யு. பேராசிரியர் ஜெயாதி கோஷ், தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ், ஆவணப்பட இயக்குனர் ராகுல் ராய் உள்ளிட்டு பலர் மீது காவல்துறை தேசப் பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு முகமைச் சட்டங்களின் அடிப்படையில் பிணையில் வெளிவராத அளவுக்கு மத்திய அரசின் உள்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை பொய் வழங்கு புனைந்திருக்கிறது.

மக்களைப்பற்றி கவலைப்படாத மத்திய அரசு 

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இன்று இந்திய மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளைப் பற்றிக் கவலை கிடையாது. உலக அளவில் கொரோனா தொற்றிலும், கொரோனாமரணத்திலும் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒரு நாளைக்கு தொற்றால் சுமார் ஒரு லட்சம்பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு நாளும் உயிரிழந்து வருகின்றனர். உலகத்திலேயே கொரோனா வேகமாகப் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பத்து லட்சத்தை எட்டிட 169 நாட்கள் ஆனது; ஆனால் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்திலிருந்து 40 லட்சத்தை பதிமூன்றே நாட்களில் எட்டிவிட்டது. அந்த அளவுக்கு இந்தியாவில் தொற்றுப் பரவல் அதிவேகத்தில் இருக்கிறது, அதனால், தொற்று எண்ணிக்கையில் இந்தியா அமெரிக்காவையும் விஞ்சி உலகத்தில் முதலிடத்திற்கு வந்துவிடும் அபாயம் உள்ளது எனச் சுகாதார வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 

இவ்வளவு மோசமான சூழலிலும், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதற்கு மத்திய அரசு முன்வரவில்லை. கொரோனா தொற்றால் மக்கள் கொத்துக்கொத்தாக மரணிப்பதைப் பற்றி மோடி-ஷா அரசுக்கு எந்தவிதக் கவலையும் இல்லை. இந்த ஆறு மாதக் காலத்தில் பொதுச் சுகாதாரத்துக்கு கூடுதல் நிதியும் மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவில்லை. கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு நேரடியாக நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு நிதி உதவி செய்யவும் குறிப்பாக ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை அளிப்பதற்கும் மத்திய அரசு மறுத்து வருகிறது.

ஜனநாயகத்தை நசுக்கும் போக்கு

எந்த முன் தயாரிப்பும் இன்றி ஊரடங்கு அறிவித்ததோடு, நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை வேகவேகமாக அமலாக்குவதால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 24 சதவிகிதம் சரிந்துள்ளது. 

இதன் பொருள் என்ன? 

கோடானுகோடி முறைசாரா தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டதோடு, இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட மாதச் சம்பளம் வாங்குவோரும் வேலையிழந்து வீதிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் பிரதமர் மோடியோ பொருளாதாரம் வளர்ந்து வருவதாகப் பேசி ஊரை ஏமாற்ற முயற்சிக்கிறார். ஒரு புறம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாலும் , மறுபுறம் சரிந்து வரும் பொருளாதாரத்தாலும் மக்களுடைய வாழ்வாதாரம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிற போது, மோடி அரசு பல்வேறு வடிவங்களில் மக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. 

பீமா கொரேகான் வழக்கில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போராடி வரும் சமூக ஆர்வலர்கள் மீது, தேசிய புலனாய்வு மையம் மேற்கொண்டு வரும் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள் பாஜக அரசின் ஜனநாயகத்தை நசுக்கும் போக்குக்கு சான்றாக இருக்கின்றன. வணிகமயமாக்கும், காவி மயமாக்கும் புதிய கல்விக் கொள்கை, எண்ணெய் எரிவாயு இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க அனுமதிப்பதோடு சுற்றுச் சூழலை அழித்து, மக்களுடைய வாழ்க்கையை சீர்குலைக்கக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை 2020 அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நலிந்து வரும் விவசாயத்தை உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பனிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல, பல சட்டங்களைக் கொண்டு வரத் துடிக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், ஏற்கனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு, வேலை நேரத்தை எட்டு மணியில் இருந்து 12 மணி நேரமாக்கியிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்கூட கேள்வி நேரத்தை ரத்து செய்து ஜனநாயகத்தை மறுத்துள்ளது. 

பாசிசத் தன்மை கொண்ட செயல்பாடு
மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் நாசமாகிக் கொண்டிருக்கிறபோதும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், ‘1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, அன்னியர் ஆட்சி மட்டுந்தான் அகற்றப்பட்டது. இந்தியாவிற்கு உண்மையான விடுதலை என்பது ராமர் கோவிலுக்கு பூமி பூஜை போடப்பட்ட, ஆர்டிகில் 370 ரத்துசெய்யப்பட்ட ஆகஸ்ட் 5 தான்’ என்று பேசி வருகிறார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான பாஜக அரசு உருவானதில் இருந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாக்கம் உள்ளிட்டு, மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் பல நடவடிக்கைகளை எடுத்து, இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்கு மத்திய அரசு அப்பட்டமாக முயற்சி எடுத்து வருகிறது. 

மத்திய அரசினுடைய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையையும் மதவெறி நடவடிக்கைகளையும் எதிர்த்துக் குரல் எழுப்புபவர்கள் மீது தேசவிரோதச் சட்டம் உள்ளிட்டு பல வழக்குகளைத் தொடுத்து சிறையில் அடைக்கிறது. நீதிமன்றங்களும் மத்திய அரசினுடைய உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய கவலை அளிக்கும் போக்கும் உருவாகியுள்ளது. மக்கள் நலனைப் பாதுகாக்க மத்திய அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுபவர்களை கைது செய்து மத்திய அரசாங்கம் சிறையில் அடைக்கிறது. அவசர காலம் என அறிவிக்காமலேயே பாசிசத் தன்மை கொண்ட அரசாக, மோடி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பின்னணியில் தான் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டு பலர் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. 
அடக்குமுறையும், பாசிச ஆட்சிமுறையும், சர்வாதிகாரமும் வென்றதாக வரலாறு இல்லை. சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும், மத்திய அரசாங்கத்தை எதிர்த்து, 16.9.2020 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. ஆர்ப்பரிப்போம்! ஆர்ப்பாட்டத்தைத் தமிழகத்தில் வெற்றி பெறச் செய்வோம்.

கட்டுரையாளர் : அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;