tamilnadu

img

வேளாண் நிலம் : பணம் காய்க்கும் மரங்கள்

பப்பாளி
பழம் மற்றும் பால் (பப்பையின்) உற்பத்திக்காக பப்பாளி பயிரிடப்படுகிறது.  வடிகால் வசதியுள்ள அனைத்து மண்களிலும் பப்பாளியைப் பயிரிடலாம். கோ 1, 3, 4, 7, ரெட் லேடி ஆகிய ரகங்கள் பழ உற்பத்திக்கும், கோ 2, 5, 6 ஆகிய ரகங்கள் பால் உற்பத்திக்கும் ஏற்றவை.

ஹெக்டேருக்கு அரை கிலோ விதைகள் தேவைப்படும். வாரமொரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூக்கள் தோன்றியதும், நன்கு பழம் பிடிக்க 20 பெண் மரங்களுக்கு ஓர் ஆண் மரம் என்ற விகிதத்தில் வைத்துக்கொண்டு எஞ்சிய ஆண் மரங்களை அகற்றிவிட வேண்டும்.24-30 மாதங்களில் மகசூல் கிடைக்கும். ரகத்திற்கு ஏற்ப மகசூல் மாறுபடும்.

கொய்யா
வடிகால் வசதியுள்ள அனைத்து மண்களிலும் கொய்யாவைப் பயிரிடலாம். அலகாபாத்,  லக்னோ 46, 49,  அனகாபள்ளி, பனாரஸ், ரெட் பிளஷ், அர்கா அமுல்யா, அர்கா மிருதுலா மற்றும் டிஆர்ஒய் (ஜி) 1 ஆகிய ரகங்கள் தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்தவை.பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. அடர் நடவு முறையில் பயிரிட்டால் கூடுதல் மகசூல் பெறலாம். ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்யவேண்டும். நட்ட 2-ஆம் வருடத்திலிருந்தே காய்க்க ஆரம்பித்து விடும். பூத்ததிலிருந்து  5 மாதங்கள் கழித்து கனிகளை அறுவடை செய்யலாம்.

பெருநெல்லி
பனாரசி, என்ஏ7, கிருஷ்ணா, கஞ்சன், சக்கயா மற்றும் பிஎஸ்ஆர். ஆகிய ரகங்கள் தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்தவை. மொட்டு கட்டு முறை மற்றும் திசு வளர்ப்பின் மூலம் நல்ல தரமான பெருநெல்லி நாற்றுக்களை உருவாக்கலாம். செடி  மரமாகிய பின்னர் கோடைக்காலத்தில் மட்டும் நீர் பாய்ச்சினால் போதுமானது.சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 40 - 50 சதவிகிதம் நீரைச் சேமிக்கலாம். செடிகள் நட்ட 4-5 ஆண்டுகளில் காய்ப்புத் தொடங்கும். நன்கு பராமரிக்கப்பட்ட மரமொன்றிலிருந்து ஆண்டுக்கு 150-200 காய்கள் கிடைக்கும். அதாவது 100 கிலோ மகசூல் ஒரு மரத்தில் கிடைக்கும்.

மாதுளை
எல்லா வகை மண்களிலும் மாதுளை நன்கு வளரும். கணேஷ், ரூபி, ஜோதி, அர்க்தா, ருத்ரா, மிருதுளா, பக்வா போன்ற ரகங்களைப் பயிரிடலாம். வேர் விட்ட குச்சிகள் அல்லது 12-18 மாதங்கள் வரை ஆன பதியன்களை 60 செ.மீ. நீளம், ஆழம், அகலமுள்ள குழிகளில் 3 மீட்டர் இடைவெளியில் நடவேண்டும்.உரப்பாசனத்துடன் கூடிய சொட்டுநீர்ப் பாசன முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. செடிகள் நட்ட நான்காமாண்டு முதல் பலன் கொடுக்கத் துவங்கும் என்றாலும் 7 ஆண்டுகளுக்குப் பின்பு முழுப் பலனும் கொடுக்கும். ஓர் ஆண்டிற்கு ஒரு ஹெக்டரில் 20-25 டன்கள் மகசூல் எடுக்கலாம்.

எலுமிச்சை
நல்ல வடிகால் வசதியுள்ள இரு மண்பாங்கான குறுமண் நிலம் ஏற்றது. பிகேஎம் 1, ராஸ்ராஜ் ரகங்களைத் தேர்வு செய்யலாம். வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 5 மீட்டர் இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும். தேவைக்கேற்ப 7-10 நாள்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மரத்துக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 30 கிலோ பசுந்தழைகள் இட வேண்டும். நட்ட 3-ஆவது ஆண்டிலிருந்து காய்ப்பிற்கு வரும். ஆண்டுக்கு ஒரு ஹெக்டேரில் 20  டன் பழங்கள் கிடைக்கும்.

பலா
எல்லாவிதமான நிலத்திலும் நன்கு வளரும். ஆனால் நிலம் ஆழமாகவும், நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்கவேண்டும். வெளிப்பலா, சிங்கப்பூர் பலா, ஒட்டுப்பலா, பண்ருட்டி, பர்லியார் 1, பிஎல்ஆர் 1, பிபிஐ 1 மற்றும் பிஎல்ஆர் (ஜே) 2 ரகங்களைப் பயிரிடலாம். செடிகள் நன்றாக வளரும் வரை வாரமொரு முறையும், பின்பு கடும் வறட்சி காலங்களில் மட்டும் நீர் பாய்ச்சினால் போதுமானது.விதைகள் மூலமாக வளர்ந்த செடிகள் 8 வருடங்களிலும் ஒட்டுக் கட்டப்பட்ட செடிகள் ஐந்து வருடங்களிலும் காய்ப்புக்கு வரும். ஓராண்டில் ஹெக்டேருக்கு 30-35  டன் பலா கிடைக்கும்.

பழப்பயிர்களைப் பயிரிடும்போது காய்ப்பு தொடங்கும் வரை காய்கறிகள், பயறு வகைகள் போன்ற குறுகியகாலப் பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட்டு விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.
மானாவாரி நிலங்களில் பழப்பயிர்கள் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு அரசு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இந்தத் தொகையில் ஒரு விவசாயிக்கு, அதிகபட்சம் 2 ஏக்கருக்குத் தேவையான பழக்கன்றுகள், அதற்கான இடுபொருட்கள் மற்றும் விவசாயி விரும்பும் ஊடுபயிர் செய்வதற்குத் தேவையான விதைகள் வழங்கப்படுகின்றன.மானிய உதவிகளைப் பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்தப் பகுதிகளுக்குட்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் தொடர்புகொள்ளலாம்.

;