tamilnadu

img

"மக்கள் சேவையை மறந்த ஆட்சியாளர்கள்" வெளிச்சம் போடும் ஆய்வறிக்கை...

தமிழ்நாட்டில் உள்ள 55 பொதுத்துறை நிறுவ னங்களும் 2017-18 ஆம் ஆண்டுக்கான கணக்குகளை இறுதிப்படுத்தியுள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து  ஆய்வு அறிக்கையை, மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான செப்டம்பர் 16 அன்று பேரவையில் சமர்ப்பித்தனர். அது குறித்து ஒரு கண்ணோட்டம்:

276 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கைக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் முன்னுரை எழுதியிருக்கிறார்.“மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், வீட்டுவசதி, பொது விநியோகம் போன்ற அடிப்படைத் தேவைகளை பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன”.இந்த அறிக்கை மேலோட்டமாக இல்லாமல் அனைத்து துறைகளையும் ‘செங்கோல்’ கொண்டு அளவீடு செய்யப்பட்டு உள்ளது. துறைவாரியாக பகுப்பாய்வு மற்றும் புள்ளி விவரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது. ‘பருந்துப் பார்வை’ கொண்டு பிழைகள் இருப்பின் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து முன்னேற்றத்திற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டால் வரவேற்பதாகவும் முன்னுரையில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 55 பொதுத்துறை நிறுவனங்களான வேளாண்மை மற்றும் அது சார்ந்த பிரிவுகளான வனத் தோட்டக் கழகம், தேயிலைத் தோட்டம், மூலிகை பண்ணைகள், மூலிகை மருத்துவம், ரப்பர் கழகங்கள் உள்ளிட்ட சட்டப்படியான வாரியங்களான சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம், கடல்சார், மாசுக்கட்டுப்பாடு,  குடிநீர் வடிகால் வாரியங்கள்,சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், கதர் கிராம தொழில்கள், வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரியம் குறித்த ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

முன்னேற்றம்
55 பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த இயக்க வருமானம் 2016-17 ஆம் ஆண்டு ரூ.108020.55 கோடியாக இருந்தது என்றும் அந்த வருமானம் 2017-18 ஆம் ஆண்டில் 111460.19 கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பதையும் இந்த உயர்வு 3.19 சதவீதம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.மொத்தம் உள்ள 11 பிரிவுகளில் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்தது, உற்பத்தி, போக்குவரத்து, மின்சாரம் ஆகிய பிரிவைத் தவிர ஏனைய பிரிவுகள் அனைத்தும் 2017-18 ஆம் ஆண்டில் லாபத்தில் இயங்கி உள்ளன.ஆனாலும் இந்த உயர்வு போதுமானதா என்றால் இல்லை. ஏனென்றால் 2016-17 ஆம் ஆண்டில் 3837.12 ரூபாய் கோடியாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டு மொத்த இயக்க லாபம் அடுத்த ஆண்டு ரூ.1116. 28 கோடியாக குறைந்துள்ளது.
2016-17 ஆம் ஆண்டில் செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், தொழில் வெடி மருந்து நிறுவனம், கனிம நிறுவனம், கைத்தறித் தொழில் வளர்ச்சிக் கழகங்கள் மூலம் ஏற்றுமதி வருவாய் ரூ.479. 86 கோடி கிடைத்திருக்கிறது. அந்த வருவாய் அடுத்த ஆண்டில் ரூ. 563.65 கோடியாக உயர்ந்து உள்ளதை அறிக்கையில் காண முடிந்தது.

வளர்ச்சி
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் வளர்ச்சி, மின்னணு, முன்னாள் படைவீரர்கள் கழகம், சுற்றுலா வளர்ச்சி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து, சிறுதொழில் வளர்ச்சி, போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனம், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், மருத்துவப் பணிகள் கழகம், கைத்தறி மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட16 பொதுத்துறை நிறுவனங்கள் 2016-17 ஆம் ஆண்டில் ஈட்டிய ரூ.24130.16 கோடி லாபத்தை 2017-18 ஆம் ஆண்டில் ரூ.38272.73 கோடியாக அதிகரித்துள்ளது.
2016-17 ல் ரூ.10.39 கோடி நஷ்டம் அடைந்த அரசு ரப்பர் கழகம் அடுத்த ஆண்டில் 0.15 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. மேலும் 2016-17 ஆம் ஆண்டில் திறன் மேம்பாட்டுக் கழகம்,  சர்க்கரை நிறுவனங்கள் 16.25 கோடி ரூபாய் நட்டத்தை அடுத்த ஆண்டில் 14.84 கோடியாக குறைத்துள்ளன.

வருவாய் இழப்பு
55 பொதுத்துறை நிறுவனங்களில் 35 நிறுவனங்கள் மூலம் 2016- 17 ஆம் ஆண்டில் ரூ.830.77 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஆனால், 2017-18 ஆம் ஆண்டு இந்த லாபம் 32 நிறுவனங்களாக குறைந்ததால்  ரூ.569.32 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.
2016-17 ஆம் ஆண்டு ரூ.5670.36 கோடியாக இருந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டு மொத்த ரொக்க நட்டம் 2017-18 ஆம் ஆண்டு 14043.03 ரூபாய் கோடியாக அதிகரிப்பதையும் அறிக்கையில் காண முடிகிறது.2016-17 ஆம் ஆண்டில் 20 நிறுவனங்கள் மட்டுமே ரூ.9530.59 கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஆனால், 2017-18 ஆம் ஆண்டில் இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததோடு ரூ.17992.88 கோடியாக அதிகரித்துள்ளது.2016-17 ஆம் ஆண்டு ரூ.304.16 கோடி லாபம் ஈட்டிய 15 பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த ஆண்டில் ரூ.186.44 கோடி நட்டத்தை சந்தித்துள்ளன.2016-17 ஆம் ஆண்டில் 20 நிறுவனங்கள் 9503.95 கோடி ரூபாய் நட்டம் அடைந்தன. ஆனால் 2017- 18 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தொழில் வெடிமருந்து கழகம் சக்கரை நிறுவனம், அரசு ரப்பர், தேயிலைத் தோட்டக் கழகங்கள், தமிழ்நாடு மின்சார நிறுவனம், நுகர்பொருள் வாணிபக் கழகம், கனிமவள, உப்பு, சிமெண்ட் நிறுவனம்  உள்ளிட்ட 23 நிறுவனங்களின் நட்டம் ஒரே ஆண்டில் ரூ.17846.34 கோடியாக அதிகரித்திருப்பதையும் விரிவாக பார்க்க முடிகிறது.

பின்னடைவு
2016-17 ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக லாபத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு உப்பு, அரசு கேபிள், செய்தித்தாள்-காகிதம், சிமெண்ட் நிறுவனங்கள் அடுத்த ஆண்டில் நஷ்டத்தை  சந்தித்துள்ளன.2016-17ல் ரூ.8699.81 கோடி நஷ்டத்தை சந்தித்த 55 பொதுத்துறை நிறுவனங்களும் அடுத்தாண்டு 17423.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளன. ஒட்டு மொத்தமாக 8723.75 கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் நட்டம்
பிரிவு வாரியாக ஆய்வு செய்ததில், ஏற்கனவே 2014- 15 ஆம் ஆண்டில் 2, 337 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்த போக்குவரத்துக் கழகங்கள், 2016-17 மற்றும் 2017-18 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் முறையே ரூபாய் 3032.67, 5503.37 கோடியாக நஷ்டம் உயர்ந்து வந்துள்ளதை அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.இந்தப் பிரிவில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மட்டுமே இரண்டு ஆண்டுகளிலும் தொடர்ந்து லாபத்தை ஈட்டி உள்ளது.பயணிகள் போக்குவரத்தின் 8 கோட்டங்களிலும் 2016-17 ஆம் ஆண்டில் 22,571 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், அடுத்த ஆண்டில் 746 பேருந்துகள் குறைந்து 21,825 மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பேருந்தின் இயக்கம் நாளொன்றுக்கு சராசரியாக 8 கிலோ மீட்டர் குறைந்ததால்  தூரமும் 1,945 கிலோ மீட்டர் குறைந்துள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் வருவாய் இழப்பை சந்தித்ததோடு செலவினமும் அதிகரித்தது. வட்டித் தொகை மட்டுமன்றி நிகர நட்டம் ரூ. 5503.37 கோடியாக அதிகரித்து வருவதையும் தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறது.

மின்சார வாரியம்
2016-17 ஆம் ஆண்டில் 6417.149 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவை உள்ளடக்கிய தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தின் நட்டம் 2017-18 ஆம் ஆண்டில் 12249.79 கோடியாக அதிகரித்துள்ளது.2016-17 ஆம் ஆண்டில் ரூபாய் 68.81 கோடி லாபத்தில் இயங்கிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அடுத்த ஆண்டில் ரூ. 18.20 கோடி மட்டுமே லாபத்தை ஈட்டியுள்ளது. சுமார் 51 கோடி ரூபாய் வருவாய் குறைந்ததையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தை தவிர இப்பிரிவில் உள்ள இதர நிறுவனங்கள் 2016-17ஆம் ஆண்டில் 1.96 கோடி லாபம் ஈட்டிய நிலையில், 2017-18 ஆம் ஆண்டில் 16.29 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளன. தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்தின் நட்டம் 31.46 கோடி ரூபாயாக அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.“மக்களுக்காகவே நான்” “மக்களுக்காகவே ஆட்சி” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு வரும் ஆட்சியாளர்கள் மக்களின் சேவைகளை மறந்து விட்டதை மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த 2018 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.சேவைத் துறைகளான பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்காமல் தொடர்ந்து சீரழித்து வருவதையும் இந்த அறிக்கையின் மூலம் தெள்ளத் தெளிவாக காணமுடிகிறது.சேவையை மறந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள்.

;