tamilnadu

img

மோடி அரசாங்கத்தின் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது மாநிலங்களவையில் எளமரம் கரீம் விளாசல்

தில்லி வன்முறை வெறியாட்டங்களுக்குக் காரணமான கயவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தில்லிக் வன்முறை தொடர்பாக வியாழன் அன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, எளமரம் கரீம் பேசியதாவது: தில்லியில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள், “…”  (சபாநாயகரின் உத்தரவுக்கிணங்க சிலவார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கிறது) என்று கூறுவதைத்தவிர வேறல்ல. சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற அடுக்கடுக்கான வன்முறை வெறியாட்டங்கள் இந்த ஆட்சியின் ஒரு சிறிய டிரெயிலர் மட்டுமே. அதாவது, புதிய முறையிலான தனியார்-பொதுக் கூட்டு (பி-பி-பி.) வன்முறையாகும். இதன்படி நன்கு அனுபவமிக்க குண்டர்களைக் அவுட்சோர்சிங் முறையில் அமர்த்தி வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதனைச் சரியான முறையில் கூறக்கூடிய அளவிற்கு தனியே ஒரு வார்த்தை அல்லது ஒரு சொற்றொடரை எங்களால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஏனெனில் இந்த சூழ்ச்சித் திட்டம் புதிய முறையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை வெறியாட்டங்களின் பிரதானக் கயவாளி, “…” ஆகும். (சபாநாயகரின் உத்தரவுக்கிணங்க சிலவார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கிறது). வகுப்புவாத பதற்றநிலைமை இருக்கிறது என்று உளவு ஸ்தாபனங்கள் அறிக்கைகள் அளித்திருந்த போதிலும், அவற்றின்மீது செயல்படாத, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலற்ற தன்மைதான் நிலைமையை மிகவும் மோசமாக்கியது.

வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்தபின்னரும்கூட போதுமான அளவிற்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்படவில்லை. குண்டர் கும்பல்கள் தில்லியின் வட கிழக்குப் பகுதியை முற்றிலுமாக தீக்கிரையாக்கிக் கொண்டிருந்தபோது, தில்லிக் காவல்துறை அதனை வெறுமனே பார்வையாளர்களாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தில்லிக் காவல்துறை, மத்திய அரசின் பொறுப்பின்கீழ் இருந்து வருகிறது. தில்லிக் காவல்துறை, சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வெளியே இருந்து வந்த குண்டர் கும்பல்கள் தங்கள் புகலிடங்களுக்குத் தப்பிச் சென்றுவிட்டன. இது, 2002இல் குஜராத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களை எனக்கு நினைவூட்டுகின்றன. அனைத்து நிகழ்வுகளும், அதற்கு அரசு எந்திரம் எடுத்த எதிர் நடவடிக்கைகளும், 2002இல் குஜராத் வன்முறை வெறியாட்டங்களின்போது எடுக்கப்பட்டதைப் போன்றே இருக்கின்றன. அப்போது குஜராத் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கிய அதே இரு முகங்கள், இப்போது மத்திய அரசாங்கத்திலும் தலைமை தாங்குவது என்னே விநோதமான ஒற்றுமை! 2020இல் தில்லி வன்முறை வெறியாட்டங்களின் சிற்பிகளும், குஜராத்தில் 2002இல் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின் சிற்பிகளும் ‘ஒருவரே’ என்று எவரேனும் நினைத்தால் அதற்கு நாம் எவரையும் குறை சொல்லமுடியாது. நம் நாடு, 1947இல் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் அடைந்தபோது, தேசத் தந்தை காந்திஜி, சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை. மாறாக, அவர் வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வீதிகளுக்குச் சென்று அமைதியை ஏற்படுத்த முயன்றார். ஆனால், இங்கே, தில்லியில் மக்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது, நம்  பிரதமர் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் விருந்து வைபோகத்தில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதில் சுறுசுறுப்பாக இருந்தார். அதுதான் வித்தியாசம்.

பாதுகாப்பு ஆலோசகரின் அதிர்ச்சி அறிக்கை
வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர், நம்முடைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சம்பவ இடங்களுக்குச் சென்றார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர், “என்ன நடந்ததோ,  அது நடந்ததுதான்” என்கிற முறையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுதான் அவருடைய எதிர்வினையாகும். இதே அணுகுமுறையை தில்லி உயர்நீதிமன்றத்திலும் பார்க்க முடிந்தது. மதவெறித் தீயை விசிறிவிட்டு வெறுப்பைக் கக்கிப் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சாளர்கள்மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்று தில்லிக் காவல்துறை மறுத்ததை நாம் பார்க்க முடிந்தது. ‘கயவர்கள் கைது செய்யப்படுவார்கள்; இதுபோன்று வன்முறை வெறியாட்டங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது’ என்று கூட கூற அவர்கள் தயாராயில்லை. இந்த வன்முறை வெறியாட்டங்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி இருக்கின்றன. நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக சில ஊடகங்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அச்சுறுத்தல் களையெல்லாம் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு, வீரஞ்செறிந்த இளம் ஊடக வியலாளர்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று, அங்கே உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நாட்டு மக்களுக்கு காட்டினார்கள்.  மலையாள காட்சி ஊடகத்தைச் சேர்ந்த ஓர் இளம் சகோதரர் உண்மைகளை வெளிக்கொணர்ந்தமைக்காக, பெரிய அளவிற்கு விலை கொடுக்க வேண்டி இருந்தது. மற்றொரு மலையாள தொலைக்காட்சி ஒளிபரப்பு 48 மணி நேரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

வன்முறை வெறியாட்டங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக இந்த அரசாங்கம் ஒரு காவல் துணை ஆணையரை நியமித்திருக்கிறது. ஜாமியா மிலியா, ஜேஎன்யு மற்றும் ஷாஹீன் பாக் நிகழ்வுகளின்போது இந்தக் காவல்துறை அதிகாரிகள் நடந்துகொண்ட விதங்களின் மூலம், இவர்களின் கைகளில் கறை படிந்திருக்கின்றது. அவர்கள் குற்றச்செயல்களுக்குத் துணை போனவர்கள். நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் அவர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. எனவே என்னுடைய வேண்டுகோள், உச்சநீதின்றத்தின் மேற்பார்வையின் கீழ் நீதித்துறை ஆணையம் அல்லது ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி இந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்திட வேண்டும் என்பதாகும்.
இந்தப் பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மக்கள் மத்தியில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நம்பிக்கை வர வேண்டும். இந்த அரசாங்கத்தின் கைகளில்  ரத்தக் கறை படிந்திருக்கிறது என்று கூறுவதற்கு வருந்துகிறேன். எனவே, கயவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தின் பிரிவுகளின்கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.