tamilnadu

img

படைப்பாற்றலும், வல்லமையும் கொண்டது மார்க்சியம்

மார்க்சிற்கு முந்தைய காலங்களில் உருவான மேன்மையான சிந்தனைகள் முழுவதையும் உள்வாங்கி,அவற்றை “இரக்கமற்ற விமர்சனம்”என்ற உரைகல்லில் உரசி,மார்க்ஸ்,எங்கெல்ஸ் கட்டியமைத்த மகத்தான தத்துவம்தான் மார்க்சியம்.அதன் வரலாற்று வேர்களை லெனின் விளக்குகிற போது,“ஜெர்மானிய தத்துவம்,ஆங்கிலேய அரசியல்பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மனித சிந்தனைஉருவாக்கிய அனைத்து மேன்மையான படைப்பாக்கங்களுக்கெல்லாம் வாரிசாகத் திகழ்வது,மார்க்சியம்.”எனக் குறிப்பிட்டார்.19-ம் நூற்றாண்டில் உருவான மார்க்சியத்திற்கு, வளமையான பங்களிப்புக்கள் 20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு கால கட்டத்திலும் பல மார்க்சிய சிந்தனையாளர்கள் பங்களிப்பு செலுத்தியது மட்டுமல்ல;ஆசிய,ஆப்பிரிக்க கண்டங்கள் உள்ளிட்டு பல பிரதேசங்கள் மற்றும் ஒவ்வொரு நாடு, பகுதிசார் பங்களிப்புக்களையும் மார்க்சியம் கண்டுள்ளது.ஒவ்வொரு துறை சார்ந்து அது வந்தடைந்துள்ள வளர்ச்சியும் பிரம்மாண்டமானது.பொருளாதாரம்,வரலாறு, சமூகவியல் மட்டுமல்லாது,மானுடவியல்,உளவியல்,சுற்றுச்சூழல் என துறைசார் வளர்ச்சியின் தளங்கள் விரிவடைந்துகொண்டே வருகின்றன.

வல்லமை கொண்ட தத்துவம்

“இருபதாம் நூற்றாண்டு மார்க்சியம்:ஒரு உலக அறிமுகம்” என்ற கட்டுரைத் தொகுப்பில், அதன் ஆசிரியர்களான டேரில் கிளேசர்,டேவிட்.எம்.வால்கர் நூலின் முன்னுரையில் “கடந்த நூற்றாண்டில்,...அரசியல் மற்றும் அறிவுத் தளப் பரப்பில், வேறு எந்த அரசியல் சித்தாந்தத்தை விட மார்க்சியமே அதிகப் பங்களிப்பை செலுத்தியுள்ளது என்று வலுவாக வாதிட முடியும்..” என்று குறிப்பிடுகின்றனர்.19,20-ஆம் நூற்றாண்டுகளில்,உலக சிந்தனை வளர்ச்சியில் மார்க்சியம் ஏற்ப்படுத்திய தாக்கம் மகத்தானது.இந்த வளர்ச்சியை ஆழமாக வாசிப்பவர்கள்,லெனின் குறிப்பிட்ட ஒரு கருத்து நூறு சதம் சரியானது என்பதனைஉணருவார்கள்.“மார்க்சிய கருத்தாக்கங்கள் சர்வ வல்லமை கொண்டவை;ஏனென்றால்,அவை உண்மையானவை“ (லெனின்-மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்,மூன்று மூலக்கூறுகளும்.) மார்க்சியத்தை அழிப்பதற்கு, அரசியல் , தத்துவம் என அனைத்து தளங்களிலும் எழுந்த எதிர்ப்புகள் அனைத்தையும்முறியடித்து மார்க்சியம் நிலைத்து நிற்கிறது. அது உண்மையை அஸ்திவாரமாகக் கொண்டு இயங்குவதுதான்இதற்குக் காரணம்.கல்வியாளர்கள்,அறிவுஜீவிகள் என அறியப்படுகிற பலர், ‘மார்க்ஸ் ஐரோப்பிய நிலைமைகளில் எழுதிய கருத்துக்கள் எல்லாம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது;அது மேலைநாட்டுத் தத்துவம்;கீழை நாடுகளுக்குப் பொருந்தாது’ போன்ற கருத்துக்களை பல கோணங்களில் வாதிட்டு வருகின்றனர். ஆங்கிலேய தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆராய்ந்துதான் மார்க்ஸ் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கினார் என்பது உண்மையே.ஆனால் பிரிட்டிஷ் நாட்டு தொழில் நிலைமைகளில் துவங்கி உலக முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சியையும், அது இயங்குகிற அடிப்படை விதிகளையும் உருவாக்கினார்.குறிப்பான ஒரு நிகழ்விலிருந்து பொது விதிகளுக்கு வந்தடைந்த மார்க்சின் மேதைமையை மேலோட்டமான சிந்தனைக்கு ஆட்பட்ட அறிவுஜீவிகளால் உணர முடியாது.அதே போன்று,லெனின், ரஷிய நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல முடிவுகளுக்குவந்தது உண்மைதான்.ஆனால் உலகளாவிய சோஷலிச மாற்றம் நோக்கிய, புரட்சிக்கு வழிகாட்டுகிற புரட்சியின்பொதுக் கோட்பாடுகளை கண்டறிந்தவர் லெனின் எனவே, மார்க்சிய லெனினியம் குறிப்பான ஒரு நிகழ்விலிருந்துதுவங்கி மானுட விடுதலை எனும் பொதுநிகழ்வுக்கான பொதுக்கோட்பாடுகளை எடுத்துரைக்கும் தத்துவம். 

மரணப் படுக்கையில் முதலாளித்துவம்?

மனித வரலாற்றில் முதலாளித்துவத்தின் இடத்தை ஆய்வு செய்து விளக்கினார் மார்க்ஸ். அதன் தோற்றம்,இயக்கம்,அது ஆதிக்கம் பெற்ற வரலாறு,அதன் வளர்ச்சியில் எதிர்படும் சிக்கல்கள்,நெருக்கடிகள்,உழைப்புச்சுரண்டல் போன்றவற்றை கண்டறிந்தார்.இதன் வழியாக அவர், முதலாளித்துவம்,தனது இறுதிக்காலத்தில், மரணப்படுக்கையில் கிடக்கிறது என்ற முடிவுக்கு வந்தடைந்தார்.முதலாளித்துவத்தின் இன்றைய பிரம்மாணடமான வளர்ச்சியை முன்வைத்துப் பார்க்கிற ஒருவருக்கு மார்க்சியத்தின் இந்தக் கருத்து பொய்த்துப் போனதாக தோன்றும்.மார்க்சியத்தின் ஒன்றோடு ஒன்று இணைந்த கருத்தாக்கங்களை ஒருங்கிணைந்த வகையில் புரிந்துகொள்ளாத நிலையில் ஏற்படுகிற குழப்பம் இது.மார்க்ஸ்,லெனின் எழுதியவற்றை மேற்கோள்களாக,கோஷங்களாக வாசிக்கிறபோது அவற்றின் தத்துவார்த்த பின்புலம் மறைந்து போகிறது.நீண்ட மனித சமுக வளர்ச்சியில் சில நூறு ஆண்டுகளுக்கு முன் உருவாகி நிலைத்துள்ள முதலாளித்துவ சமுககட்டமைப்பு ,அதற்கு உள்ளே இயங்கி வரும் முரண்பாடுகளால்,வீழ்ச்சியை நோக்கி பயணப்பட்டு வருகிறது.ஆனால் தன்னைக் காத்துக்கொள்ள,அது பல வகைகளில் போராடி வருகிறது.அறிவியல்,தகவல் தொழில் நுட்பவளர்ச்சிகளை பயன்படுத்துவது போன்ற பல முயற்சிகளை முதலாளித்துவம் மேற்கொண்டாலும் அது நடத்துவது மரணப் போராட்டம்தான்.வரலாற்று சகாப்த நோக்கிலும் தத்துவார்த்த நோக்கிலும் இது தெளிவானஒன்று என்பதை மார்க்ஸ் நிறுவினார்.முதலாளித்துவம் மரணப் படுக்கையில் கிடக்கிறதா அல்லது வளர்ச்சி பெற்று,வலுப்பெற்று வருகிறதா என்றசிக்கலைத் தீர்த்திட வேண்டிய கட்டத்தில்தான், லெனின் கம்பீரமாக தத்துவ உலகில் நுழைகின்றார்.மரணப்படுக்கையில் கிடந்து போராடி வரும் முதலாளித்துவத்தை,முடிவிற்கு கொண்டு வர “புரட்சி”என்ற நடைமுறைத்தீர்வு தேவை என்பது லெனினது சிந்தனை.மார்க்சே இந்த முடிவிற்கு வந்திருந்தாலும், “புரட்சி” என்ற கருத்தாக்கத்தின் முழு உருவமாக லெனின் வெளிப்படுகிறார்.ரஷியா எனும் பின்தங்கிய, விவசாயப் பொருளாதரத்தை அடிப்படையாகக்கொண்ட நாடு, முதலாளித்துவ அழிவின்பரிசோதனைக் களமாக லெனினுக்கு பயன்பட்டது.இந்த ரஷியப் புரட்சி நடைமுறையின் பலனாக, மார்க்சியத்தோடு இணைந்ததாக லெனினியம் உருவானது. எனவே முதலாளித்துவத்தை முழுமையாக சமாதிக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில் பாட்டாளி வர்க்க புரட்சிநடந்தேறிட வேண்டும். மார்க்சியம் புரட்சிக்கான தத்துவ, நடைமுறை தளத்தை பாட்டாளி வர்க்கத்திறகுவழங்குகிறது.

வற்றாத படைப்பாற்றல்

காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் முடிந்த நிலையில்,இன்றும் மார்க்சியத்தில் வியக்கத்தக்க ஒருதன்மை உண்டு.அது,மார்க்சியத் தத்துவத்தின் வற்றாத படைப்பாற்றல். ஒவ்வொரு சமூகத்திலும் மாற்றத்திற்கானமக்களின் புரட்சிப்போராட்டம் நிகழும்போதெல்லாம் மார்க்சிய வழியில், அந்த நிகழ்வுகளை ஆராய்ந்தால், புதியவெளிச்சங்கள், கருத்துக்கள் கிடைக்கின்றன.மானுட விடுதலைப் போராட்டத்தில் ரஷியப் புரட்சி மார்க்சியத்திற்கு பலம் சேர்த்த ஒரு வளமான படைப்பு.சீனப்புரட்சியும் ஒரு ஆசியப் படைப்பாக மார்க்சியத்தை அலங்கரிக்கிறது.கியுபா தனிச் சிறப்பு வாய்ந்த உன்னதப்படைப்பு.இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.இந்த வரிசையில் இலத்தீன் அமெரிக்கா தனி உலகத்தை படைத்துக் கொண்டிருக்கிறது.பல நூற்றாண்டுகள் அந்த நாடுகளின் ஆன்மாவையும் அடக்கி வைத்திருந்தது,அமெரிக்க ஏகாதிபத்தியம்.கடும் சுரண்டலுக்கும்,அடிமைத்தனத்திற்கும் ஆட்பட்டிருந்தாலும், நீண்டநெடிய போராட்டத்தை இலத்தீன் அமெரிக்க மக்கள் கைவிடவில்லை.அந்தப் போராட்டங்களின் ஊடாக ஏராளமான சித்தாந்தங்கள் உருப்பெற்றன.எனினும்,மார்க்சியம் இலத்தீன் அமெரிக்காவை கவ்விப் பிடித்தபோதுதான் வெற்றிப் பயணம் துவங்கியது.பல தோல்விகள்,வீழ்ச்சிகள், மரணங்கள் என தியாகப் பயணமாக இருந்தாலும் இடதுசாரி இயக்கங்கள் ஆட்சிஅதிகாரத்தை கைப்பற்றும் மாற்றங்களும் நிகழ்ந்தன.பிடல் காஸ்ட்ரோ வழியில் சாவேஸ் போன்ற தலைவர்கள் தலைமையேற்று நடத்திய அரசாங்கங்கள் பல அமைந்தன. ஏகாதிபத்தியத்தின் இடையறாது கவிழ்ப்பு,சதிகள்,சூழ்ச்சிகளுக்கு இடையே இன்னமும் இலத்தீன் அமெரிக்காவில் பல மக்கள் இயக்கங்கள் சோஷலிச இலட்சியத்தை பிரகடனம் செய்து செயலாற்றி வருகின்றன. இன்று வெனிசுலா மக்களும் அமெரிக்காவின் கவிழ்ப்புமுயற்சிக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.உண்மையில் சோவியத்தின் வீழ்ச்சி ஏற்பட்ட போது உலகம் முழுவதும் சோஷலிச இடதுசாரி சக்திகள் சோர்வுற்றிருந்தன.அந்தப் பின்னணியில் சோஷலிச முழக்கத்துடன் இலத்தீன் அமெர்க்கக் கண்டம் வீறு கொண்டு எழுந்தது.1998- ஆண்டில் வெனிசுலாவில் சாவேஸ் துவங்கி, 2000-ல்,சிலி,  2002-பிரேசில்    2003- அர்ஜென்டினா2005- உருகுவே, 2008-பராகுவே,  2009-எல்சல்வடர், 2013- ல்,ஈகுவடர்   2011- பெரு என தொடர்ந்து இடதுசாரிகள் வெற்றி பெற்று வந்துள்ளனர். இவை அனைத்தும் ஒரே தன்மையிலான வெற்றி அல்ல.ஆனால், ஒரு பொதுத் தன்மை அனைத்து நாடுகளிலும் இருந்தது. சமுகத் தளத்தில் நவீன தாரளமயத்தின் குறிப்பிட்ட பாதிப்புக்களுக்கு எதிராக ஏராளமான வெகு மக்கள் இயக்கங்கள் உருவானதும்,அவை ஒருங்கிணைந்து செயல்பட்டதும்,இலத்தீன் அமரிக்க சோசலிசத்தின் சிறப்பு. இந்த வெகு மக்கள் இயக்க ஒற்றுமை மேடைகள் வெற்றிகளை சாதித்தன.

மனித மேன்மைக்கு சோஷலிசமே தீர்வு

மனித மேன்மையை சோஷலிசமே ஏற்படுத்தும். மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிட்ட “ஒவ்வொரு மனிதரின் சுதந்திரமான வளர்ச்சி” என்பது சோசலிச அமைப்பில்தான் சத்தியம்.அந்த அமைப்பை உருவாக்குவதற்கான மகத்தான வரலாற்றுப் பரிசோதனையாக ரஷியப் புரட்சியும்,சோஷலிச அமைப்பினைக் கட்டும்பணியும் நடந்தது.ஒரு பரிசோதனை முயற்சி எனும் போதே அதில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. பல நூறு பரிசோதனை முயற்சிகளுக்குப் பிறகு புதிய கண்டுபிடிப்புக்கள் உருவான அனுபவங்கள் அறிவியலில் ஏராளம்.புதியசமுக கட்டுமானத்திலும் தவறுகள் இல்லாமல் முன்னேறுவது சாத்தியமில்லை.தவறுகளைப் பரிசீலித்து, படிப்பினைகள் பெற வேண்டுமென்பது மார்க்சியம்.பரிசோதனை மேற்கொண்டவர்களை இழிப்பது,நிராகரிப்பது அனைத்தும் தவறானது.அதிலும் சோசலிசக் கட்டுமானத்தில் உள்ள ஒரு பிரச்னை என்னவென்றால், அந்த பரிசோதனையில் தோல்வி கிடைக்க வேண்டும் என்றுஎதிரிகள் இடைவிடாது சதி சூழ்ச்சி வேலைகளையும்,நேரடித் தாக்குதலையும் தொடுப்பது வழக்கம்.இந்நிலையில் தவறுகளுக்கு வாய்ப்புள்ளது. இ.எம்.ஸ்.நம்பூதிரிபாட் “கம்யூனிஸ இயக்கத்தின் தத்துவார்த்த பிரச்னைகள்” எனும் நூலில் எழுதினார்.“...மார்க்ஸ்,எங்கெல்ஸுக்குப் பிறகு லெனின்,பிறகு ஸ்டாலின்,பிறகு வந்த, புரட்சிக் கடமையாற்றிய தலைவர்கள், மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகளை மாற்றவில்லை.புரட்சியின் வெற்றிக்கு தேவையான மாற்றங்களை கொண்டு வந்தனர்....””.....சோஷலிச ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும்புறம்பான செயல்கள் சோவியத் யூனியனிலும்,சீனாவிலும் நடந்துள்ளன என்பது மறுக்க முடியாது....”என்கிறார் இஎம்எஸ். எதிர்காலத்தில் இந்தத் தவறுகள் நடக்காமல் சோசலிசப் பயணம் முன்னேற வேண்டும்.அதற்கு, தவறுகள் பற்றி துல்லியமாக பரிசீலிக்க வேண்டும். இத்ற்கும் மார்க்சிய இயக்கவியல் ஆய்வு முறையேதுணை நிற்கிறது. சோசலிசப் பயணத்தில் சறுக்கல்கள், பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மார்க்சியத்தின் தத்துவ வலிமை சோசலிசப் பயணத்தை உந்தித் தள்ளும் மகத்தான சக்தியாக அமைந்துள்ளது.






;