tamilnadu

img

கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் இழைத்து வந்த பாஜகவிற்கு, அதே கசப்பு மருந்தே மகாராஷ்டிராவில் திரும்பக் கிடைத்திருக்கிறது -அஜய் ஆசீர்வாத் மகபிரஷஸ்தா

செவ்வாயன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது ராஜினாமாவை அறிவித்திருப்பது, ஒரே நாள் இரவிற்குள் நடத்தப்பட்ட சதியின் மூலமாக அதிகாரத்தை மறைமுகமாக   கைப்பற்றிய  மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர  ஃபட்னவிஸுக்கு அவமானகரமானதாகவே  இருந்திருக்கும்.

பாஜகவில் நரேந்திரமோடி - அமித்ஷா இரட்டையரின் அனுமதியில்லாமல் எதுவும் நடைபெறுவதற்கான  வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக மாநிலம் கண்டிருக்கின்ற அரசியல் படுதோல்விக்கான பொறுப்பை பதவி விலகியிருக்கும் முதலமைச்சர்  ஏற்க  வேண்டியது அவரது கர்ம வினையாககூட  இருக்கலாம்.  சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டதாக எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலை நடத்திய  ஃபட்னவிஸ் போகிற போக்கில் பாஜக தனித்து போட்டியிட்டிருந்தால், 288 இடங்களிலும் போட்டியிட்டிருக்கும்  என்று  கூறிய கருத்து இங்கே முக்கியமானது. சிவசேனாவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்.

ஷா  மீது மறைமுகமாக நடத்தப்பட்ட தாக்குதல்

மத்தியில் ஆட்சியில் இருந்த மோடி அரசாங்கத்தின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக 2018 ஆரம்பத்தில் உருவெடுத்த  சிவசேனா, பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தது நினைவில் இருக்கலாம். அதை முறியடித்து பாரதிய ஜனதா கட்சிக்கும் சிவசேனாவுக்கும் இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை  ஏற்படுத்தியது வேறு யாருமல்ல, இதே அமித் ஷாதான். பல சுற்று தொலைபேசி கலந்துரையாடல்களுக்குப் பிறகு, தனியாகப் போட்டியிட வேண்டாம் என்று தனது பழைய கூட்டாளியைச் சமாதானப்படுத்துவதற்காக மும்பையில் உள்ள தாக்கரேவின் இல்லமான மாதோஸ்ரீக்கு ஷா செல்ல வேண்டியிருந்தது. அதனை பாஜக தலைவரின் "சாணக்கியத்தனம்" என்றும்  அது அவருடைய மற்றுமொரு "மாஸ்டர்  ஸ்ட்ரோக்" என்றும்  பெரும்பாலான ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள்  குறிப்பிட்டனர். அதே போன்று சட்டமன்றத் தேர்தலில் 124 இடங்களில் மட்டுமே போட்டியிடுமாறு உத்தவ் தாக்கரேவை சமாதானப்படுத்தி மீதமுள்ள 164 இடங்களில் பாஜகவை போட்டியிட வைத்த பெருமையும் ஷாவிற்கே கிடைத்தது. இடங்களை சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டுமென முதலில் கோரிக்கை வைத்த சிவசேனா, இறுதியில் ஆட்சியதிகாரம் இருவருக்குமிடையே சமமாக பகிரப்படும்  என்ற  உடன்பாட்டை எட்டியது. சட்டசபையில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை இந்த கூட்டணி பெற்ற போது, ஆட்சியின் பாதி காலத்திற்கு முதலமைச்சர் பதவி தங்களுக்குத் தரப்பட வேண்டுமென்று சிவசேனா வலியுறுத்தியது. இவ்வாறு கடுமையாக அழுத்தம் தந்த தன்னுடைய கூட்டாளியை கடுமையாக எதிர்த்தவர் ஃபட்னாவிஸ் என்றே கூறப்படுகிறது. சிவசேனா தனது வழிக்கு வந்து விடும் என்று எதிர்பார்த்த அவர், அவ்வாறு நடக்காத போது ராஜினாமா செய்தார். 
நவம்பர் 23 அதிகாலையில் ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்ற போது, இந்த வழியில் அதிகாரத்தை கைப்பற்றுவது அவரது முடிவு அல்ல என்று மகாராஷ்டிரா பாஜகவைச் சேர்ந்த வட்டாரங்கள் கூறின. சர்ச்சைக்கு ஆளாகாமல் தனது பதவிக் காலத்தை அனுபவித்த முதலமைச்சராக இருந்த அவர் மிகக் கவனமாக உருவாக்கி வைத்திருந்த சுத்தமானவர் என்ற பிம்பத்தை காயப்படுத்துவதாகவே அந்த முடிவு இருந்தது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முடிவு நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்தது.மறுநாள் காலையில் ஆட்சியதிகாரத்தைக் கோரவிருந்த எதிர்க்கட்சி கூட்டணிக்குள் நடத்தப்பட்ட அந்த வெட்கக்கேடான நாசவேலை ஷாவின் பாணியே தவிர, ஃபட்னாவிஸின் பாணியிலானது அல்ல. பாஜகவிற்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில், சிவசேனாவுடனான தனது கட்சியின் கூட்டணி குறித்து இவ்வாறு ஃபட்னாவிஸ்  கேள்வி  எழுப்பியது அவர் ஷா மீது தொடுத்த மறைமுகத் தாக்குதலா? அல்லது  பொதுமக்களின் அனுதாபத்தைப்  பெறுவதற்கான வழியா? என்று பல சந்தேகங்களுக்கு வழிவகுத்திருக்கின்றது. 

தன்னுடைய கசப்பு மருந்தின் சுவையை அறிந்த பாஜக

ஃபட்னவிஸின் இந்த கட்டாய ராஜினாமா என்பது காவிக் கட்சி கொடுத்த கசப்பு மருந்தின் சுவையை அந்த கட்சியெ சுவைத்திருப்பதையே தெளிவாக காட்டுகிறது. இந்திய அரசியலின் நிலையற்ற  தன்மையைப் பயன்படுத்திக் கொள்வதில் மோடி மற்றும் ஷா தலைமையிலான பாஜக முன்னணியில் உள்ளது.  கர்நாடகா மற்றும் கோவாவைப்  போலவே - எதிர்க்கட்சிகளிடையே மட்டுமல்லாமல்,  தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயும் கட்சித் தாவலை ஊக்கப்படுத்தும் வகையில் அது செயல்பட்டு வந்திருக்கிறது.. பாஜக தனது கூட்டணி கட்சிகள் மீது அப்பட்டமாக ஆதிக்கம் செலுத்திய சமீபத்திய நிகழ்வுகளில் சிலவற்றை இங்கே  காணலாம். தன்னுடைய  பழைய கூட்டணி கட்சியான நாகா மக்கள் முன்னணியை (என்.பி.எஃப்)  2018  ஜனவரியில் காவிக் கட்சி உடைத்தது. நாகா மக்கள் முன்னணியின் ஒரு பிரிவுடன் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் (NDPP) கூட்டணி வைத்து, நெய்பியு ரியோவை இடைக்கால முதலமைச்சராக்கியது.

சிக்கிமில், தன்னுடைய பழைய கூட்டாளிகளில் ஒருவரான பவன் குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணியில் (எஸ்.டி.எஃப் ) கட்சித் தாவலை பாஜக அரங்கேற்றியது. கணிசமான  எண்ணிக்கையிலான எஸ்.டி.எஃப் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் சேர்ந்த பிறகு, சிக்கிம்  கிரந்திகாரி மோர்ச்சாவுடன் காவிக் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டது. ஹரியானாவில் தேர்தல்  சூழ்நிலையில் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளத்துடனான (ஐ.என்.எல்.டி ) கூட்டணியில் அதன் பெரிய கூட்டாளியாக நுழைந்த பாஜக அதிக பலம் பெற்ற பிறகு, அந்தக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொண்டது. சவுதாலா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐஎன்எல்டி பலவீனமடைந்தது. ஆசிரியர் நியமன ஊழலில் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். அதேபோன்று, மகாராஷ்டிராவிலும், கட்சி தனது மிகப் பழைய கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கென்று இருக்கின்ற அரசியல் வெளியை நசுக்கியது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிதறுண்டு கிடந்த சமூகக் குழுவாக, பாரம்பரியமாக சிவசேனாவை ஆதரித்து வந்த ஏழை  மராத்தியர்களிடையே தனது தளத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக உருவாக்கி இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கிடையேயான தற்போதைய முரண்பாடு என்பது வேறு எந்த காரணத்தையும் விட, இந்த அரசியல் பகைமையின் விளைவானதாகவே இருக்கிறது. வரவிருக்கின்ற ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் மோடி - ஷா தலைமையிலான கட்சி கூட்டணி எதுவுமில்லாமல் தனித்து போட்டியிடப் போகிறது. அதன் இரு கூட்டாளிகளான - சுதேஷ் மகதோ தலைமையிலான அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கமும், ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் – தங்களுடைய தேர்தலுக்கு முந்தைய கோரிக்கைகளுக்கு பாஜக செவி சாய்க்காததால்,  கூட்டணியில் இருந்து விலகியிருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில், இதர பிற்படுத்தப்பட்டவர்களான ராஜ்பார்ஸ்  மத்தியில்  தனது தளத்தை பலப்படுத்திக் கொள்ளும் வகையில் தனது கூட்டாளியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியிடமிருந்து  பாஜக உதவி பெற்றது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றவுடன் அந்தக் கட்சியின் எந்தவொரு கோரிக்கைகளையும் பாஜக நிறைவேற்ற முன்வரவில்லை. அதேபோல், அனைத்து மீனவர் சமூகங்களையும் ஒருங்கிணைப்பதற்காக 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்த நிஷாத் கட்சியை வேட்டையாடியது. ஆனால்  தேர்தலுக்குப் பின்னர் தனக்கான முக்கிய பங்கை அந்தக் கட்சி எடுத்துக் கொள்ள பாஜக அனுமதிக்கவில்லை. கோவாவில், தனது இரண்டு கூட்டாளிகளான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி  (எம்ஜிபி ) மற்றும் கோவா ஃபார்வர்ட் கட்சி (ஜிஎஃப்பி) ஆகியவற்றிற்கு இடையே பாஜக பிளவை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. மூன்று எம்ஜிபி  சட்டமன்ற  உறுப்பினர்களில் இருவர் பாஜகவில் சேர்ந்த பிறகு,  கூட்டணி கட்சிகளை பாஜக பின்னுக்குத்  தள்ளுவதாக ஜி.எஃப்.பி தலைவர் விஜய் சர்தேசாய்  குற்றம் சாட்டினார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றியது பற்றி அதிகம் பேசப்பட்டதை யாரால் மறக்க முடியும்? ஆந்திராவுக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று ஒப்புக் கொண்டதை அடுத்து பாஜகவுடன் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி  வைத்தது. இருப்பினும் தன்னுடைய வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை.

தன்னுடைய கூட்டாளிகளான அசாமில் உள்ள அசாம் கண பரிஷத் மற்றும் திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணியுடன் பாஜக கொண்டிருந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் அந்த மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன. ஆனால் இப்போது சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கின்ற மத்திய அரசாங்கத்திற்கு எதிராக அவை வெளிநடப்பு செய்யப் போவதாக அச்சுறுத்தியுள்ளன. பஞ்சாபில் பாஜக - சிரோமணி அகாலிதளத்தின் கூட்டணியும் சிக்கலில் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றன. பீகாரிலும் இதே நிலைமைதான். முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து பிரிந்ததிலிருந்தே, பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் பலதடவை தங்களுக்குள் மோதிக் கொண்டுள்ளன. .

பாஜக  கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கிறதா?

கூட்டணி என்பது தேர்தல்களுக்கு மட்டுமல்ல, ஆளுகைக்கும் சேர்த்துதான். வெறுமனே தேர்தல்களில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், ஒன்றிணைந்து அரசாங்கமாக செயல்பட உதவும் திட்டத்தையே கட்சிகள் உருவாக்குகின்றன. ஒரு கட்சியின் அரசியல் பார்வை மற்றொன்றிலிருந்து வேறுபட்டிருக்கலாம்  என்றாலும், அந்த இரண்டு கட்சிகளும் நடுநிலையாக நடந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை  ஆளுகைக்குள் இணைத்துக் கொள்வதை அவற்றிற்கிடையிலான கூட்டணி கட்டாயப்படுத்துகிறது.

மோடி - ஷாவின் தலைமையின் கீழ் உள்ள பாஜக மற்றவர்கள் மீது முழுமையான கட்டுப்பாட்டை நம்புகின்ற அமைப்பாக மாறியுள்ளது. தேர்தல்களுக்கு முன்னர் பெரிய மற்றும் சிறிய கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெறுகின்ற பாஜக,  அதன்  சிறிய கூட்டணி கட்சிகளின் மீது மிருகத்தனமான சக்தியுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. தன்னுடைய "மாஸ்டர் ஸ்ட்ரோக்" மூலமாக, ஒன்றன்பின் ஒன்றாக  இந்தியா முழுவதும் கட்சித் தாவல் மூலம் பல சாதனைகளை ஷா ஏற்படுத்தியிருக்கிறார். சிவசேனாவும், தெலுங்கு தேசமும் அதன் பிடியிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றன. மற்றவர்கள் தங்கள் மன உளைச்சலை வெளிப்படையாகக் காட்டியிருக்கின்ற நிலையில், ஷாவே தன்னுடைய பாரம்பரிய பங்காளிகள் / கூட்டாளிகளை  தங்கள் கட்சி இழப்பதற்கான பெருமையைக் கொண்ட கட்சியின் தலைவராகவும் இருப்பார்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடிய கட்சி நடத்திய மிக வெட்கக்கேடான காட்சிகளில் ஒன்றாகவே கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் நடைபெற்றிருப்பவை இருக்கின்றன. பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரசியல் மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி நடந்து கொண்டுள்ளது. இப்போதைக்கு ஃபட்னாவிஸ் பழியை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் மோடி மற்றும் ஷா செய்திருக்கின்ற பாவங்களை அது  தீர்த்து விடாது.

https://thewire.in/politics/maharashtra-bjp-devendra-fadnavis    

- தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு
விருதுநகர்