tamilnadu

img

வேளாண் நிலம் : தமிழக சிறைத் துறையின் புதிய வேளாண் முயற்சிகள்

கடந்த பல வருடங்களாக தமிழகத்தின் சிறைத் துறை வாயிலாக வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்கள் சிறை வளாகங்களுக்குள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோவை, சேலம் மற்றும் சிவகங்கையில் மூன்று திறந்த வெளி சிறைச் சாலைகள் செயல்பட்டு வருகிறது. தற்போதைய அரசு ஆணைகளின்படி சிறைகளில் நல்ல நடத்தை உள்ளவர்கள் குறிப்பாக தங்களது தண்டனை காலத்தில் முக்கால் பகுதி கடந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கூலி மற்றும் சிறை உடைகள் இல்லாத சலுகைகள் வழங்கப்படுகிறது.

தற்போது புதிதாக இத்திட்டத்தின் கீழ் சுமார் 200 ஏக்கர் நிலங்களில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சுமார் 3984 தண்டனை பெற்ற கைதிகள் சிறைகளில் உள்ள நிலையில் தற்போது 100 கைதிகள் 8 சிறைகளில் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் புதிதாக வேலூர், கடலூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் புழல் 1 சிறைகளில் அமைக்கப்பட உள்ள புதிய திறந்த வெளி சிறைச் சாலைகளில் வேளாண் மற்றும் தோட்டக் கலை பயிர்கள் சாகுபடி, கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மலர் சாகுபடி மற்றும் மீன் வளர்ப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 8 மணி முதல் 12 மணி மற்றும் மதியம் 1 மணி முதல் 5 மணி வரை நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் வேளாண் மற்றும் தோட்டக் கலை பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். தற்போது கைதிகளை தேர்வு செய்து திறந்த வெளி சிறைகளில் வேளாண் பணிகளை மேற்கொள்ள சிறைதுறையின் உயர் அதிகாரிகள், நலத்துறை அதிகாரிகள், சிறை மருத்துவர்கள் மற்றும் ஜெயிலர்கள் கொண்ட தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு விரைவில் திறந்த வெளி சிறைகள் தமிழகத்தில் இயங்க உள்ளது.

இந்த வேளாண் மற்றும் தோட்டக் கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைப் பொருட்கள் சிறைச் சாலைகளின் உணவு தேவையை சந்திக்க உதவுவதுடன் சிறைதுறையின் செலவினங்களை வெகுவாக குறைக்க உதவும். மேலும் திறந்த வெளி சிறைகளில் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வது அவர்களது மன இறுக்கத்தை குறைக்கும். தங்களது தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும் போது இன்று அதிக வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள கிராமப்புறங்களில் எதிர்காலத்தில் பணிபுரிந்து, நேர்மையுடன் திருந்தி வாழவும் பெரிதும் உதவும். இவ்வாறு தமிழக சிறை துறையின் வேளாண் சார்ந்த நலத்திட்ட செயல்பாடுகள் பெருகும் போது தண்டனை பெற்ற குற்றவாளிகள் மீண்டும் தவறுகளை தொடராமலும் அவர்கள் சீர்திருத்தம் அடையவும் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை.

====பேரா. தி.ராஜ்பிரவின்====

;