tamilnadu

img

‘வயிற்றுக் கவசமான’ முகக் கவசம்!

மக்களின் தேவைக்கேற்பவும் நாட்டின் சூழலுக்கேற்பவும் புதுப்புதுத் தொழில்கள் அவ்வப்போது முளைப்பது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கிலும் அவ்வாறு பலதொழில்கள் உருவாகியுள்ளன. அதில் முக்கியமானது, தற்போது சாலையோர வியாபாரிகளின் தற்காலிக  வாழ்வாதாரமாக மாறிய முகக்கவசம் விற்கும் தொழில். முன்னர் எங்கு திரும்பினும் பல்பொருட்கள் விற்கும் சாலை வியாபாரிகள், இப்போது ஏதேனும் ஒரு இடத்தில் தென்பட்டாலும் முகக்கவசம் விற்கும் தொழிலையே பரவலாக செய்து வருகின்றனர்.  அரசு மக்களிடம் அறிவுறுத்தி வரும் முகக்கவச அறிவுரைகள் அதை உபயோகப்படுத்தும் மக்களைத் தாண்டி இதையேனும் வாழ்வாதாரத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமென எண்ணும் சாலையோர வியாபாரிகளையே அதிகம் சென்று சேர்ந்துள்ளது. அவர்களில் சிலரை கோவையில் சந்தித்தபோது...

படிப்பை பாதிக்கும் ஊரடங்கு
கணினி அறிவியல் இளங்கலை மூன்றாமாண்டு படித்துக்கொண்டு முகக்கவசம் விற்றுவரும் சரவணன் தெரிவிக்கையில், என் வீட்டில் அம்மா, அப்பா, தங்கை என நான்கு பேர். அப்பா முன்னதாக பொரி வியாபாரம் செய்து வந்தார். அப்போது சந்தைகள் மற்றும் சாலையோரத்தில் கடைபோடுதல் ஆகியவற்றையே நம்பி யிருந்தோம். மேலும் அப்பா மட்டுமே அப்போது குடும்பத்தைப் பார்த்து வந்திருந்தார். தங்கையும் இளங்கலை முதலாமாண்டு படித்து வரும் நிலையில் திடீரென அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் முதலில் நிலை குலைந்து தான் போனோம். ஆரம்பத்தில் சேமிப்பு மற்றும் கடன்கள் கொண்டு ஓரளவு சமாளித்தாலும் பின்னதாக குடும்பத்தை சமாளிக்க நானும் அப்பாவோடு சேர்ந்து முகக்கவசம் விற்கும் தொழிலில் ஈடுபட வேண்டியதாயிற்று. தற்போது நானும் அப்பாவும் ஆளுக்கு ஒரு இடத்தில் முகக்கவசங்களை விற்று வீட்டைக் காப்பாற்றி வருகிறோம். சாதாரண காலத்தில் படிக்கும் இளைஞர்கள் தங்களின் சிறு செலவுகளுக்காக பகுதிநேர வேலையில் ஈடுபடுவர். ஆனால் தற்போது அம்மாதிரியான நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் சொந்த செலவைத்தாண்டி குடும்ப செலவிற்காக பல இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் கல்லூரி இடைநிற்றல் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளது, என எச்சரிக்கிறார் சரவணன்.

நிராதரவான வாழ்வு
முகக்கவசம் விற்றுவரும் செந்தில் கூறுகையில், முன்னதாக சாலையோரம் பர்ஸ் விற்கும் தொழிலை கடந்த இருபது வருடங்களாக செய்து வந்தேன். அப்போதே அரசாலும் காவல்துறையின் கெடுபிடியாலும் இடத்தை மாற்றி மாற்றி வியாபாரம் செய்து வந்தேன். இருப்பினும் அதில் நாளொன்றுக்கு 400-500 ரூபாய் வரை வருமானம் பார்த்து வந்தேன். தற்போது கொரோனா ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டவுடன் மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் இரு குழந்தைகளுடன் மூன்று மாதம் வீட்டிலேயே முடக்கப்பட்டேன். பின்னர் சாப்பிட்டாக வேண்டுமென்ற நெருக்கடியில் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்த போது இத்தொழில் தான்  கைகொடுத்தது. அதுவும் நின்று கொண்டு விற்பதற்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதியளிப்பதால் முழுநாளும் நின்ற வண்ணமே விற்று வருகிறேன். பல வருடங்களாக சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தும் இப்பொதுமுடக்க காலத்தில் அரசின் எந்தவொரு நிவாரணமும் என்னை நேரடியாக வந்தடையவில்லை. தற்போது முகக்கவசம் விற்றுவரும் வருமானத்தில் தான் உணவுச் செலவையும் வீட்டு வாடகையையும் ஓரளவு சமாளித்து வருகிறேன் என்றார். 

அவசியம் எதுவென தெரியாத அரசு
கடந்த இரண்டு மாதங்களாக முகக்கவசம் விற்றுவரும் சுரேந்திரன் குறிப்பிடுகையில், இதற்கு முன்னதாக ஊதுபத்தி விற்கும் தொழிலைச் செய்து வந்தேன். இதுதவிர என் அப்பாவும் 2 லாரி சொந்தமாக வைத்துள்ளதால் பெரிதளவில் கஷ்டம் இல்லை. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் ஓரளவு பின்னணி இருந்ததால் நான் தப்பித்துக் கொண்டேன். ஆனால் நீங்கள் என்னைத்தவிர இத்தொழில் செய்யும் பிறரிடம் கேட்டால் என்னைப்போல் உள்ளவர்கள் நூறில் 5 சதமே இருப்பர். நான் பொழுதுபோக்கிற்காக இதனை செய்து வந்தாலும் அனைவரும் அப்படி இல்லை. இச்சமயத்தில் நான் அரசைப்பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆயிரம் ரூபாய் மற்றும் ரேசன் பொருட்கள் என்பது நகரத்தில் வாழும் ஒரு குடும்பத்திற்கு எவ்வாறு சரியாக இருக்கும்? மேலும் அரசு அறிவித்த கடனுதவித் திட்டங்களில் உண்மையில் நாங்கள் பயனடைய ஒன்றுமே இல்லை. சாப்பாட்டிற்கே வழியில்லாத எங்களைப் போன்ற சாலை வியாபாரிகளுக்கு அவசியமானது கடனுதவியா அல்லது பொருளாதார உதவியா என அரசு சிந்தித்திருக்க வேண்டும். ஆக மக்களுக்கு என்ன அவசியம் என்பதையே தெரியாத ஒரு அரசாக தமிழக அரசு இருப்பது வேதனையாகவே உள்ளது என்று கூறினார் .

அரசுதவியே வாழ்வாதாரம்
பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் அதிகளவு பாதிக்கப்பட்டதே முகக்கவசம் விற்கும் தொழிலுக்கு நான் வந்ததற்குக் காரணம் என ஆரம்பிக்கிறார் கோபால். மேலும் இவர் பேசுகையில், நானும் படிப்பை பாதியில் நிறுத்திய என் மகனும் முன்னதாக கடலைபொரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தோம். மேலும் நாங்கள் கூட்டுக் குடும்பம் என்பதால் இருவரும் வேலையைச் செய்தால் தான் குடும்பச்செலவை சமாளிக்க முடியும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் முகக்கவசம் விற்கும் தொழிலுக்கு நிர்பந்திக்கப்பட்டோம். இதிலும் ஓரளவு வருமானம் கிடைத்து வந்தாலும் கடலைபொரி வியாபாரத்தில் கிடைத்து வந்த லாபம் இதில் இல்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட துவக்கத்தில் முகக்கவசங்கள் நன்றாகத் தான் விற்று வந்தன. ஆனால் தற்போது நாள்கள் செல்லச் செல்ல அதிகளவு விற்பதில்லை. இதனால் வரும்நாட்களில் வேறு என்ன செய்வது என்ற கவலை என்னைத் தொற்றிக் கொண்டுள்ளது. அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் உபயோகமாய் இருந்தபோதும் தொழிலில் சரியான வருமானமின்மையால் அரசின் உதவியை தற்போது அதிகளவு எதிர்நோக்கி உள்ளோம், என்று அவர் கூறினார்.

பலனற்ற புரியாத திட்டங்கள்
ரபீக் இதுகுறித்து பேசுகையில், கடனால் மட்டுமேதான் 3 மாத ஊரடங்கைக் கழித்து வந்தேன். காய்கறி சந்தையில் வேலை பார்த்து வந்த நான் இதுவரை மொத்தம் ரூ.6 ஆயிரம் கடன் வாங்கி சமாளித்தேன். பின்னர் முகக்கவசம் விற்க துவங்கினாலும் உணவிற்கு மட்டுமே அது பயன்பட்டு வருகிறது. மேலும் அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் மட்டுமே ஓரளவு உதவிகரமாய் இருந்தது. அதைத்தாண்டி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கடனுதவித் திட்டங்களெல்லாம் உண்மையில் எங்களுக்கு எவ்விதப்பயனும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதையெல்லாம் எங்கு சென்று யாரிடம் தெரிந்து கொள்வது எனக் கூட எனக்குத் தெரியாது. அரசு மற்றும் மக்களின் உறவு இம்மாதிரியான பேரிடர் காலங்களில் தான் வெளிப்படும். ஆனால் எங்களை நேரடியாகச் சென்றடையாத புரியாத வெற்றுத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் அரசு தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறதே தவிர, எங்களின் நலனைப் பற்றி சிறிதும் கவலைப்படாததாகவே நான் நினைக்கிறேன் என்றார்.

முன்னதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பில் சாலையோர வியாபாரிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை அறிவிப்பதாகக் கூறி பல லட்சக்கணக்கான மக்கள் பொருளாதார உதவியை எதிர்நோக்கியிருந்த வேளையில் அளப்பரியாக் கடனுதவிக் கதைகளைக் கட்டியது மத்திய நிதியமைச்சகம். மேலும் தற்போது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் 
50 லட்சத்துக்கு மேற்பட்ட சாலையோர, நடைபாதை வியாபாரிகளுக்கு பலனளிக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இதற்கு ‘பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி, திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இதன்படி சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனவும் அதை ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இக்கூற்று சாப்பாட்டிற்கு வழியில்லாதவனிடம் சமைக்கும் கனவைக் காணச்சொல்வது போல் உள்ளது. உண்மையில் பொருளாதாரப் பரிமாற்றமற்ற வாயில் வடைசுடும் திட்டத்தை அறிவித்துவிட்டு, அரசிடமிருந்து பணத்தை செலவழித்து மக்களைக் காப்பது போல் போலிபிம்பத்தை தான் உருவாக்கி வைத்திருக்கிறது என்ற உண்மையையே இவர்களின் குரல் ஒட்டுமொத்தமாக எதிரொலிக்கிறது.

===ச.காவியா===

;