tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-10 : பழைய ஜனசங்கமே பாரதிய ஜனதா கட்சி!

1969ல் காங்கிரசில் சிண்டிகேட், இண்டிகேட் என்று பெரும் பிளவு வெடித்தது. பின்னதன் தலைவராகிய இந்திரா தனது ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட அந்த ஆண்டு ஜுலையில் 14 பெரிய வங்கிகளை நாட்டுடைமையாக்கினார்.  வங்கித்துறை மீதான மக்களின் நம்பிக்கை என்பது பொருளாதாரத்தின் அஸ்திவாரம் ஆகும். அது சேமிப்பை ஊக்குவித்து ஒரு நிலைத் தன்மையை தரும். அன்றும் அதற்குப் பிறகும் இந்தியப் பொருளாதாரம் உலகளாவிய சில பேரிடர்களுக்கு ஓரளவு தாக்குப் பிடித்தது என்றால் அதற்கு காரணம் வங்கிகள் தேசியமயம். அதனால்தான் 1964ல் உதயமாகியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,காங்கிரசுடன் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும்
இந்த நடவடிக்கையை உற்சாகமாக ஆதரித்தது.

எதிர்த்த கட்சி எது தெரியுமோ? அது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவாகிய ஜனசங்கம். அதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே அதை எதிர்த்து முழங்கினார் அதன் தலைவர் வாஜ்பாய். அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலான சமயத்திலும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். இண்டியன் எக்ஸ்பிரஸ் ஏடு (5-8-1969) தரும் தகவல் இது: “மூன்றாவது வாசிப்பில் விவாதத்தை துவக்கி வைத்த ஜனசங்கத் தலைவர் ஏ.பி. வாஜ்பாய் ஆழ்ந்த பரிசீலனை தேவைப்படும் இந்த மசோதாவை அவசரஅவசரமாக அரசு நிறைவேற்றப் பார்ப்பதாகக் கடுமையாக விமர்சித்தார். வெறும் நாட்டுடமையாக்கல் மூலம் சோசலிசத்தைக் கொண்டுவந்து விடலாம் என்று உறுப்பினர்கள் ஆசைப்படுவதாக அவர் எச்சரித்தார். இதுவரை கிடைத்த அனுபவமே திருப்தியானது அல்ல என்றார். தனது எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு அவர் வெளிநடப்புச் செய்தார். அவரோடு அவரது கட்சியைச் சார்ந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வெளிநடப்புச் செய்தார்கள். வங்கிகள் நாட்டுடைமை மசோதாவை மக்களவை நிறைவேற்றியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் சுதந்திரா மற்றும் ஜனசங்க இருக்கைகள் காலியாகக் கிடந்தன”.ஜனசங்கத்தின் குருஜி கோல்வால்கர் எப்படி கம்யூனிஸ்டுகளை ஒரு எதிரியாக பாவித்தார், சமதர்மச் சிந்தனையை அந்நிய கருத்தியலாகச் சித்தரித்தார் என்பதைக் கண்டோம். அதை அப்படியே உள்வாங்கி நடப்பில் காட்டியது ஜனசங்கம். இன்றைக்கு தனிப்பெரும்பான்மையோடு  ஆட்சியிலிருக்கும் சங் பரிவாரத்தினர் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை மீண்டும் தனியுடைமையாக்கப் பார்க்கிறார்கள் என்றால் அதற்கான படுபிற் போக்கான சித்தாந்தம் அவர்கள் பாரம்பரியமாகப் பெற்றது.

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் சிறிதும் பெரிதுமாக பல சமஸ்தானங்கள் இந்தியாவில் இருந்தன. இவற்றை இந்தியாவோடு இணைப்பதற்காக அவர்களுக்கு மன்னர் மானியம் தர ஒப்புக் கொண்டது சுதந்திர இந்தியா! அதன்படி 279 ராஜாக்கள் கொழுத்த தொகை பெற்றார்கள். கூடவே பட்டங்கள், வரிச்சலுகைகள், தனிக் கொடிகள், விழாக்களில் துப்பாக்கி மரியாதை என்று சிறப்பு மரியாதைகளும் பெற்றார்கள். இது வேண்டாத வேலை. ஏற்கெனவே அந்த மன்னர்கள் மக்களைச் சுரண்டி சொந்தமாக ஏகப்பட்ட செல்வம் சேர்த்துக் கொண்டு சுகமாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து மேலும் மானியம் தரும் அநியாயம் இது. அதுபோல அவர்களுக்கான தனி மரியாதைகள் அந்தந்தப் பகுதி வெகுமக்களை தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக்கியது. ஒரு குடியரசு நாட்டில் இது கிஞ்சித்தும் பொருத்தம் இல்லாதது. ஆனாலும் அப்படித்தான் அந்த சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் படேல்.

இந்திரா காலத்தில் இந்த மானியத்தை ரத்து செய்ய வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந் தது. இயல்பாக இதற்கும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரிகளின் ஆதரவு இருந்தது. இதையும் எதிர்த்தது ஜனசங்கம். அந்தக் கட்சியின் மத்தியப்பிரதேசத் தலைவரே ஒரு முன்னாள் ராணிதான். குவாலியர் ராஜ்மாதா விஜயராஜே சிந்தியா “மன்னர்கள் தங்களின் உரிமைக்காகப் போராடுவார்கள்” என்று ஆத்திரத்தோடு அறிவித்தார். (டிஒஐ ஏடு31-8-1970) 1970 ஆகஸ்டில் மன்னர்மானிய ஒழிப்பிற்கான அரசியல்சாசன திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. மக்களவையில் பேசிய ஜனசங்கத்தின் பால்ராஜ் மதோக் “இது மக்களின் அடிப்படை உரிமையில் கைவைப்பது” என்று கொதித்தார்.

அவருக்கு மகாராஜாக்க ள்தான் மக்கள்! மாநிலங்களவையில் பேசிய அக்கட்சியின் பீதாம்பர்தாஸ் “இது பக்கா துரோகம்” என்று கொந்தளித்தார். மக்களின் வரிப்பணத்தை தூக்கி மன்னர்களின் ஆடம்பர வாழ்வுக்கு தராவிட்டால் அது துரோகம்! உண்மையில் இவர்கள்தாம் மக்களின் ஆகப்பெரும் துரோகிகள். மக்களவையில் வெற்றிபெற்ற மசோதா இத்தகையவர்களால் மாநிலங்களவையில் தோற்றுப் போனது. இரு அவைகளிலும் எதிர்த்து வாக்களித்தது ஜனசங்கம்.சித்தாந்தரீதியாக நிலப்பிரபுத்துவத்தின் சமூக சாரமாகிய மனுவாதத்தை தழுவியிருந்த ஆர்எஸ்எஸ் நடைமுறைரீதியாக நிலப்பிரபுக்களின் ஆதரவைத் தனது அரசியலுக்குப் பெற்றிருந்தது. 1952 தேர்தலில் ராஜஸ்தானில் வெற்றி பெற்றிருந்த ஜனசங்கத் தின் 8 எம்எல்ஏக்களும் ஜாகீர்தார்கள், அதாவது ஜமீன்தார்கள் என்று குறித்திருக்கிறார் அத்வானி தனது சுயசரிதையில். 1971 மக்களவைத் தேர்தலில் ஜனசங்கத்தின் வேட்பாளர்களாக சில ராஜாக்கள் நிறுத்தப் பட்டார்கள். நிற்காத ராஜாக்கள் ஜனசங்கத்தின் வேட்பாளர்களுக்காக ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். அந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது.

1973ல் கோல்வால்கர் காலமானதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ்சின் தலைவராக பாலாசாகேப் தேவரஸ் வந்தார். இவர் காலத்தில்தான் அவசரநிலை ஆட்சியைக் கொண்டுவந்தார் இந்திரா. அந்த அமைப்பு இரண்டாம் முறையாகத் தடை செய்யப்பட்டது. தேவரஸும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தள்ளியவர்களிடமே இறைஞ்சுவது சாவர்க்கர் காலத்திலிருந்து வந்த பாரம்பரியம் இவர்களுக்கு. இந்திராவிற்கு இவர் எழுதிய கடிதங்களை வெளியிட்டிருக்கிறார் நூரானி. 1975 நவம்பர் 10ல் அவர் எழுதிய கடிதம் இப்படி ஆரம்பித்தது: “உங்களது தேர்தலை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அங்கீகரித்திருப்பதற்கு நான் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்”. அப்படியொரு தீர்ப்பை பெறுவதற்காக சட்டத்தையே திருத்தியிருந்தார் இந்திரா.அதையெல்லாம் அறியாதவர் போல வாழ்த்துச் சொன்னார்!

எல்லாம் எதற்காக என்றால் இதற்காக: “ஆர்எஸ்எஸ்சின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை விடுதலை செய்யுங்கள், சங் மீதான கட்டுப்பாடுகளை நீக்குங்கள். அப்படிச் செய்தால் ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் சுயநலமில்லா பணியை தேசிய வளர்ச்சிக்கு (அரசு மற்றும் அரசு அல்லாததற்கு) பயன்படுத்திக் கொள்ள முடியும்”. சாவர்க்கரின் மன்னிப்பு கடித பாணியே தான்! விடுதலை செய்யுங்கள், உங்களுக்கு சேவை செய்கிறோம்! இந்திரா அரசுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய இயக்கத்தில் தீவிரமாக இறங்கியிருந்தது ஆர்எஸ்எஸ் சின் மாணவர் பிரிவாம் ஏபிவிபி. அந்த இயக்கத்தை பாராட்டி 1974 மார்ச்சில் ஆர்எஸ்எஸ் தீர்மானமும் போட்டிருந்தது. ஆனால் இந்தக் கடிதத்தில் ஜே.பி. இயக்கத்திற்கும் சங்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒரே போடாகப் போட்டார்! காரியத்தை சாதிக்க எந்த அளவுக்கும் போவார்கள் என்பது உறுதியானது.

இந்த விவகாரத்தில் ஆச்சார்யா வினோபா பாவேயையும் இழுத்து விட்டார் தேவரஸ். 1976 ஜனவரியில் அவருக்கு எழுதிய கடிதத்தில் இப்படியாக கெஞ்சினார்: “24ந்தேதி மதிப்பிற்குரிய பிரதமர் தங்களை பவ்னர் ஆசிரமத்தில் சந்திக்கவிருப்பதாக செய்தி பார்த்தேன். அப்போது சங் பற்றி பிரதமருக்கு உள்ள தவறான பார்வையைப் போக்குமாறு நான் உங்களை இறைஞ்சுகிறேன். அதன் மூலமாக ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் விடுதலையானால், சங் மீதான தடை நீக்கப்பட்டால் பிரதமர் தலைமையிலான வளர்ச்சி மற்றும் வளத்திற்கான திட்ட நடவடிக்கையில் சங் ஊழியர்கள் பங்கு கொள்வார்கள்”. விடுதலை செய்தால் போதும், அடைத்தவர்களுக்கு ஊழியம் செய்யத் தயார்!ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் இந்திரா மக்களவைத் தேர்தலை நடத்த, அவ்வமயம் “ஜனதா கட்சி” என்பது அவசரஅவசரமாக உருவாக்கப் பட்டது. அதில் ஜனசங்கமும் சேர்ந்து கொண்டது. அன்று எழுந்திருந்த சர்வாதிகார எதிர்ப்பு மனோநிலையில் ஜனசங்கத்திற்கும் ஒரு ஜனநாயகக் காவலன் பிம்பம் கிடைத்தது. 1977ல் நடந்த அந்தத் தேர்தலில் வட மாநிலங்களில் ஜனதா கட்சி பெருவெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. ஜனதாவிற்கு கிடைத்த 295 எம்பிக்களில் ஜனசங்கத்தவர் 93 பேர். இதனால் வாஜ்பாய், அத்வானி, பிரிஜ்லால் வர்மா எனும் மூன்று ஜனசங்கத் தலைவர்கள் மத்திய மந்திரிகளாயினர். சங் பரிவாரத்தினர் முதன் முதலாக மத்திய அரசுஅதிகாரக் கட்டமைப்பிற்குள் நுழைந்தனர். அவசரநிலை சர்வாதிகார ஆட்சி வகுப்புவாத சக்திகளுக்கு இப்படியொரு வாய்ப்பைத் தந்து போனது.ஜனதா கட்சியில் சேர்ந்திருந்த இதர கட்சிகள் எல்லாம் தம் சொந்த இருப்பைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பில் தங்களைக் கரைத்துக் கொண்டனர். ஆனால் ஜனசங்கத்தவரோ தங்களின் ஆர்எஸ்எஸ் தொடர்பை துண்டித்துக் கொள்ளவில்லை. கேட்டால் அது அரசியல் கட்சி அல்ல, கலாச்சார அமைப்பு என்று சால்ஜாப்பு சொன்னார்கள். இதை நம்ப இதரர்கள் தயாராக இல்லை. ஆர்எஸ்எஸ்சுடனான உறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றனர். ஜனசங்கத்தவரோ அதை ஏற்கவில்லை. அவர்களது நோக்கம் முழு ஜனதா கட்சியையும் ஆர்எஸ்எஸ்சின்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது என்பது உறுதியானது. இப்படியாக எழுந்த இரட்டை உறுப்பினர் பிரச்சனையின் காரணமாக அங்கிருந்து கூண்டோடு விலகினார்கள் ஜனசங்கத்தவர். அதிலிருந்தும் அவர்கள் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருப்பது நிச்சயமானது. விலகியவர்கள் உருவாக்கிக் கொண்ட கட்சிதான் “பாரதிய ஜனதா கட்சி”. பழைய ஜனசங்கம் இப்படியாக புது நாமகரணத்துடன் மீண்டும் அவதாரம் எடுத்தது.

இது பற்றி rss.org கூறுகிறது: “25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அரங்கில் அழுத்தமான தடத்தை பதித்திருந்த பாரதிய ஜனசங்கமானது ஜனதா கட்சியின் மிகப் பலமான உறுப்பாக மாறியது. அந்த கட்சி 1977ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தது. ஜனசங்கத்தின் அரசியல் வளர்ச்சி கண்டு மிரண்டுபோன ஜனதா கட்சியின் இதர உறுப்புகள், ஜனசங்கத்தினர் சங்கில் உறுப்பினராக இருப்பதை மையப் பிரச்சனையாக்கினர். அப்போது அந்தக் கட்சியிலிருந்து சுயம் சேவக்குகள் வெளியே வந்து 1980ல் பாரதிய ஜனதா கட்சியை அமைத்தனர். இந்தப் புதிய கட்சி பாரதிய ஜனசங்கத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்தது”.ஆக பாஜக என்பது சுயம்சேவக்குகள் உருவாக்கிய கட்சியே! இதை ஆர்எஸ்எஸ்சே ஒப்புக் கொள்கிறது. ஆனாலும் என்ன நம்புங்கள் அதற்கு அரசியல் கிடையாது, வெறும் கலாச்சார அமைப்பே! கேப்பையிலே நெய் வடிகிறது என்றால் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்!

===அருணன்===

(தொடரும்)

;