tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-7 : ‘அரசியலற்றது’ துவக்கிய அரசியல் கட்சி!

இந்து மகாசபையின் தலைவர்களில் ஒருவராகிய சாவர்க்கர், காந்தி படுகொலையில் ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர். போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவர் விடுதலை செய்யப்பட்டாலும் அன்று படேலின் உள்துறையால் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தவர் என்பது வரலாற்று உண்மை. அதேநேரத்தில் அதே இந்து மகாசபையைச் சேர்ந்த ஷியாமபிரசாத் முகர்ஜி மத்திய அரசில் தொழில்துறை அமைச்சராக நீடித்தார்! சுதந்திரம் கிடைத்தவுடன் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு என்பதால் இத்தகைய விசித்திரங்கள் நடந்தன.

இந்த மனிதர் முதலில் சாவர்க்கருக்காகவும் பின்னர் ஆர்எஸ்எஸ்சுக்காகவும் உள்ளே இருந்தபடியே வேலை பார்த்து வந்தார். காங்கிரசுக்குள்ளேயே சிலரும் சங்கிற்கு வக்காலத்து வாங்கினார்கள். இந்தச் சூழலில்தான் ஆர்எஸ்எஸ் மீதான தடையை அரசு நீக்கியது 1949 ஜுலையில். அப்போதும் உள்துறை அமைச்சர் படேல்தான். இதற்காக ஆர்எஸ்எஸ் செய்ய வேண்டியிருந்த ஒரே காரியம் எழுத்துபூர்வ அமைப்புச் சட்டம் ஒன்றை தயாரித்துக் கொள்வது. இப்படி தங்களுக்கு மறுவாழ்வு கொடுத்தவர் என்பதாலும், குஜராத் என்றால் காந்தி என்றிருந்ததை படேல் என மாற்றுவதற்காகவும்தான் அங்கே அவருக்கு 597 அடி உயரத்தில் சிலை வைத்தார்கள்.

அவர்கள் எழுதிக்கொண்ட அமைப்புச் சட்டத்தை பிற்சேர்க்கையாகத் தந்திருக்கிறார் நூரானி. அதன் சரத்து 3 தனது லட்சியமாகக் கூறுகிறது: “இந்து சமாஜத்தில் உள்ள பல்வேறு குழுக்களை ஒன்றிணைப்பது, தர்மம் மற்றும் சான்ஸ்கிருதி அடிப்படையில் அதற்கு புத்துயிர்ப்பு அளிப்பது”. இந்தியா என்று பேசவில்லை, இந்து சமாஜம் என்று பேசுகிறது. அதை தர்மம் மற்றும் சான்ஸ்கிருதி அடிப்படையில் மாற்றப் போகிறது என்கிறதே அதன் பொருள் என்ன? சந்தேகமே வேண்டாம், மனு அதர்மத்தை இந்த நவீன காலத்திலும் நிலைநிறுத்து வதையே தனது லட்சியம் என்கிறது வெட்கமில்லாமல்.

சரத்து 4 (பி) சொல்லுகிறது: “அனைத்து மதங்களின்பால் சகிப்புத் தன்மை எனும் அடிப்படைக் கோட்பாட்டை பற்றி நிற்கும். சங்கிற்கு அரசியல் கிடையாது, அது கலாச்சாரப் பணியில் மட்டும் ஈடுபடும். தனிமனித சுயம்சேவக்குகள் வன்முறை மற்றும் ரகசிய முறைகளில் நம்பிக்கை மற்றும் ஈடுபாடுள்ள கட்சிகள் தவிர வேறு எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரலாம்”. இதர மதங்களின்பால் சகிப்புத் தன்மை இருக்குமாம்! இதைப் படிக்கும்போது நம்மை அறியாமலேயே சிரிப்பு வருகிறது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த இயக்கம்தான் ஆர்எஸ்எஸ். இவர்களது இந்துத்துவா என்பதே பிற மத வெறுப்பில் பிறந்தது என்பதைக் கண்டோம். அரசை ஏமாற்ற இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள். சங்கிற்கு அரசியல் கிடையாது என்கிறார்களே அதை குறித்துக் கொள்ளுங்கள். அடுத்த இரண்டே ஆண்டுகளில் சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறார்கள்!

சரத்து 5 கூறுகிறது: “அரசு கொடிக்கு விசுவாசம், மரியாதை காட்டுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை அங்கீகரிக்கும் அதேவேளையில் சங் தனக்கென ஒரு கொடியை, இந்து கலாச்சாரத்தின் பழைய சின்னமாகிய பக்வா- த்வாஜ் என்பதைக் கொண்டிருக்கும்”. இந்தியாவின் மூவர்ணக் கொடியை தேசியக்கொடி எனச் சொல்லாமல் அரசு கொடி எனச் சொல்லுவதை கவனியுங்கள். காரணம் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை ஆர்எஸ்எஸ் தேசியக்கொடியாக அங்கீகரிக்கவில்லை.

1947 ஆகஸ்டு 14ல் அதன் பத்திரிகை “ஆர்கனைசர்” எழுதியிருந்தது: “விதிவசத்தால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் நமது கைகளில் மூவர்ணக் கொடியைத் தரலாம். ஆனால் இந்துக்கள் அதை மதிக்க மாட்டார்கள், ஏற்க மாட்டார்கள். மூன்று என்பது கெட்ட எண். மூன்று நிறங்களைக் கொண்டிருக்கும் கொடி மிக மோசமான உளவியல் தாக்கத்தை தரும், அது நாட்டுக்கு நல்லதல்ல”. அதன் எண்ணம் எல்லாம் மூன்று வண்ணங்களுக்குப் பதிலாக காவி எனும் ஒரே வண்ணக்கொடியை தேசியக் கொடியாக ஏற்றுவதுதான். அவர்களின் பன்மை விரோதப் போக்கு கொடியிலும் வெளிப்பட்டது. இந்த அமைப்புத்தான் திரையரங்குகளில் தேசியக்கொடியை அவமதிப்பதா என்று பொங்கியது என்றால் எத்தகைய பம்மாத்து என்று புரிந்து கொள்ளுங்கள்.
சரத்து 6 (1ஏ) பேசுகிறது: “18 வயது அல்லது அதற்கு மேலான எந்தவொரு ஆண் இந்துவும் ஒரு சுயம்சேவாக்காக பதிந்து கொள்ளலாம்”. ஆண் இந்துவாம்! இந்தியர்கள் எவரும் ஆர்எஸ்எஸ்சில் உறுப்பினராக முடியாது, இந்துக்கள் மட்டுமே ஆக முடியும். இதிலிருந்தே இது பக்கா வகுப்புவாத அமைப்பு என்பதை உணரலாம். பெண் இந்துக்களும் உறுப்பினராக முடியாது. அன்று முதல் இன்றுவரை இதுதான் நிலைமை. பின்னாளில் ஒரு துணை அமைப்பில் இந்துப் பெண்கள் சேரலாம் என்றார்களே தவிர தாய் அமைப்பில் அவர்கள் சேர முடியாது. மனுஅதர்ம சாஸ்திரம் பெண்களை தரம் தாழ்த்திச் சொன்னதை அப்படியே தன்னில் அமல்படுத்தியுள்ளது ஆர்எஸ்எஸ். இது தெரியாமல் சில பெண்கள் ஆர்எஸ்எஸ்சுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அது தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வது என்பதை அறியாமல் உள்ளனர்.

ஆர்எஸ்எஸ்சின் அமைப்புச்சட்டத்தில் இந்தியா எனும் சொல்லே இல்லை, “பாரத்வர்ஷா” என்பதே உள்ளது. இதற்குள் நமது அரசியல்சாசனத்திலிருந்து மாறுபட்ட ஒரு சித்தாந்த, பூகோளக் கண்ணோட்டம் உள்ளது நிச்சயம். சங் பரிவாரத்தினர் தங்களது எதிரிகளை “ஆன்டி இண்டியன்ஸ்” என்பார்கள். உண்மையில் அவர்கள்தாம் அந்தச் சொல்லுக்கு உரியவர்கள். அவர்களது அமைப்புச் சட்டத்தில் இந்தியா இல்லையே! நாட்டின் பெயரை “பாரதம்” என மாற்ற வேண்டும் எனும் சங் பரிவாரத்தின் இன்றைய முனைப்பின் ஊற்றுக்கண் இதில் உள்ளது.

1950 ஜனவரி 26 முதல் அரசியல் சாசனம் நடப்புக்கு வந்து நாடு குடியரசானது. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை எனும் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான தயாரிப்புகள் ஆரம்பமாயின. காந்திஜியின் படுகொலையைத் தொடர்ந்து அமைச்சர் ஷியாமபிரசாத் முகர்ஜிக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. இந்து மகாசபைத் தலைவர்களில் ஒருவரான அவர் தனது முகபடாமைக் காப்பாற்றிக் கொள்ள 1949 நவம்பரில் அந்த அமைப்பிலிருந்து ராஜினாமா செய்தார். ஆனாலும் அவர் மீதான சந்தேகப் பார்வை நீடித்தது. முடிவில் 1950 ஏப்ரலில் அமைச்சரவையிலிருந்தும் ராஜினாமா செய்தார்.

இவரை வளைத்துப் போட்டது ஆர்எஸ்எஸ். அந்த ஆண்டு இறுதியில் அவரோடு ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வி. ஆர். ஓக், பால்ராஜ் மதோக், பாய் மகாவீர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுபற்றிய மதோக்கின் ஒப்புதல் வாக்குமூலம்: “அரசியல் வெளியில் ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஓர் அரசியல் அமைப்பின் உடனடித் தேவையை ஆர்எஸ்எஸ்காரர்கள் உணர ஆரம்பித்தார்கள். நாட்டில் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அறிமுகமானதும் இதன் தேவை மேலும் உணரப்பட்டது. ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் எழுந்த இந்த சிந்தனைப் போக்கை  டாக்டர் முகர்ஜி அறிவார்”.

அவருக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் பேரில்தான் “பாரதிய ஜனசங்கம்” எனும் கட்சி 1951 அக்டோபரில் துவங்கப்பட்டது. டில்லியில் நடந்த அதன் மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய முகர்ஜி முழங்கினார்: “முஸ்லிம் வகுப்புவாதத்தின் பலிபீடத்தில் பாரதிய தேசியத்தை நேரு பலி கொடுத்து விட்டார். பாரதத்தில் இப்போது வகுப்புவாதம் இல்லை. இருப்பது எல்லாம் முஸ்லிம்களை தாஜா செய்யும் புது கொள்கை- வருகிற தேர்தலில் ஓட்டு வாங்க. இந்தியாவின் மோசமான ஃபாசிஸ்டாகிய நேரு பிறரைப் பார்த்து ஃபாசிசம் என்கிறார்”. ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாதக் கொள்கையை அப்படியே எதிரொலித்தார் மனிதர்!

ஜனசங்கத்தின் தலைவராக முகர்ஜி இருந்தார் என்றாலும் அதன் இதர முக்கிய பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ்காரர்கள் இருத்தப்பட்டார்கள். அதன் பொதுச்செயலாளர் தீன்தயாள் உபாத்யாயா, செயலாளர் அடல் பிகாரி வாஜ்பாய், செயற்குழு உறுப்பினர்கள் பாய் மகாவீர் மற்றும் பால்ராஜ் மதோக் எல்லாம் பக்கா ஆர்எஸ்எஸ்காரர்கள். 1953 ஜுனில் முகர்ஜி காலமானதும் கட்சியை மேலும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது ஆர்எஸ்எஸ். தாற்காலிகத் தலைவராக இருந்த மவுலி சந்திர சர்மா எனும் ஆர்எஸ்எஸ் அல்லாதவர் 1954 நவம்பரில் கட்சியிலிருந்தே வெளியேற வேண்டிவந்தது. அப்போது அவர் விடுத்தஅறிக்கையில் கூறினார்: “ஆர்எஸ்எஸ் சின் கைக்கருவியாக ஜனசங்கத்தை மாற்ற ஒரு தீவிரமான, திட்டமிட்ட முயற்சி நடந்தது. அவர்களது தலைமையகத்திலிருந்து அவர்களது ஆட்கள் மூலமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றை ஜனசங்கம் நிறைவேற்ற வேண்டும் எனப்பட்டது”.

“ரிமோட் கன்ட்ரோல் மூலம்  கட்சி நடத்துவதா?” என்று பிறகட்சிகளைப் பார்த்துச் சொல்லுவார்கள், உண்மையில் அவர்களது கட்சிதான் அப்படி ஆர்எஸ்எஸ்சால் அந்தக் காலத்திலேயே இயக்குவிக்கப் பட்டது. இப்போது மிகவும் துணிவு பெற்றவர்களாக வெளிப்படையாகவே சொல்லுகிறார்கள். rss.org கூறுகிறது: “ஒரு சில மூத்த சங் நிர்வாகிகள் இந்து தேசியத்தின் மீது மாறாத பற்று கொண்டு 1951ல் பாரதிய ஜனசங்கத்தை துவக்க முடிவு செய்தனர்-டாக்டர் ஷியாமபிரசாத் முகர்ஜி தலைமையில்”.
ஆர்எஸ்எஸ்சுக்கு அரசியல் இல்லை என்ற சொன்னவர்கள்தாம் இப்போது தங்களுக்கான அரசியல் கட்சியை உருவாக்கிக் கொண்டார்கள். அரசியலற்றது துவக்கிய அரசியல் கட்சி! “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்றார் வள்ளலார். இத்தகை யவர்களை நினைத்துத்தான் சொல்லியிருக்கிறார்.

(தொடரும்)

;