tamilnadu

மதமும்... அரசியலும்...

நிறுவனங்களோடு அரசு என்னும் நிறுவனத்துக்கு முரண்பாடு ஏற்பட்டது. கத்தோலிக்க மதத்திற்கு எதிராக புறப்பட்ட புராட்டஸ்டண்டு மத உருவாக்கத்தில், நிலப்பிரபுத்துவத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாடும் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை நிலப்பிரபுத் துவத்தின் மிச்சசொச்சங்கள் இன்னும் அப்படியே உள்ளன. முதலாளித்துவம் வளர்ந்தாலும் நிலப்பிரபுத்துவ தத்துவமும் செல்வாக்கும் பல வகைகளில் தொடரவே செய்கிறது. 

முதலாளித்துவ வளர்ச்சியை அதன் மூலம் அரசியலில் ஏற்பட்ட ஜனநாயக வேட்கையை ஏற்க மத நிறுவனங்கள் உலகம் முழுவதும் மறுத்தே வந்துள் ளன. ஜார் காலத்திய ரஷ்யாவிலும் மதத்திற்கும் அரசிற்குமான மோதல் நடந்தது. இங்கிலாந்தில் மன்னராட்சி முறைக்கும் கத்தோலிக்க குரு பீடமான போப் ஆண்டவருக்கும் இடையிலான உரசலில்தான் ஆங்கிலிக்கன் சர்ச்சுகள் உருவாகின. ஜெர்மனியில் சிறு உற்பத்தியாளர்கள் தங்களின் வளர்ச்சிக்கு நிலம் வேண்டும் என்று கேட்டபோது மத குருமார்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர். இது தொடர்பாக கெய்சர் அரசின் அணுகுமுறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் வளர்ச்சி அவசியம் என்ற முடிவு எட்டப்பட்டது. 

இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட மதகுரு மார்கள், மடங்கள் தங்களது நலனை பாதுகாத்துக்  கொள்ள ஆட்சியாளர்களை அரவணைத்துக் கொள்வதும், முரண்பாடு ஏற்படுகிற பொழுது முட்டிக் கொள்வதும் நடந்தே வந்திருக்கிறது. சைவ, வைணவ மதங்கள் நிலப்பிரபுக்களை ஆதரித்த நிலையில், புதிதாக உருவான வணிக வர்க்கம் சமண, புத்த மதங்களை ஆதரித்தது. சமண, புத்த மதங்கள் வணிக வர்க்கங்களின் ஆதரவுடன் செழித்தோங்கிய நிலையில் தமிழகத்தில் பக்தி இயக்க காலத்தில் மன்னர்களின் உதவியுடன் சகல உத்திகளையும் பயன்படுத்தி சைவ,வைணவ மதங்கள் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டன. சமண புத்த மதங்கள் பெரும்அளவில் அழிக்கப்பட்டன.

நிலப்பிரபுத்துவத்தைத் தொடர்ந்து முதலாளித்துவம் வளர்ந்து வந்தபோதும் நிலப்பிரபுத்து வத்தின் மிச்ச சொச்சங்கள் தொடர்கிற நிலையில், முதலாளித்துவ அரசின் பல அங்கங்களில் மதம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவே தொடர்கிறது. மத நிறுவனங்கள் காலத்திற்கு ஏற்றாற்போலும் தங்களை மாற்றிக்கொள்கின்றன. நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அமைப்புமுறை இந்தியாவில் ஆழமாகக் காலூன்றி உள்ள நிலையில், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் பிரபலமாக இருப்பதும் பிரபலப் படுத்துவதும் நடந்து வருகிறது. 

நவீன போதை
அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெ ழுவதைத் தடுத்து மடை மாற்றம் செய்ய இவர்களைப் போன்றவர்களின் ‘ஆன்மீக’ உபதேசங்கள் ஆட்சியாளர்களுக்கு உதவியாக உள்ளன. நிகழ்கால வாழ்வின் அநீதிகளை பார்க்க விடாமல், நவீன கார்ப்பரேட் சாமியார்கள் ஒருவகையான போதையில் மனிதமனங்களை ஆழ்த்துகின்றனர்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களை கடவுளின் அவதாரமென்றும் நானே கடவுள் என்றும் கூறிக்கொள் வார்கள். அரசுக்கும் இந்தக் கடவுள்களால் எந்த ஆபத்தும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கடவுள்கள் ஆட்சியாளர்களைத்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மக்களை அல்ல.

முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், தன் மீதான அதிருப்தியை மடை மாற்றம் செய்யவும் இத்தகைய சக்திவாய்ந்த சாமியார்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அதுவும்கடைந்தெடுத்த வலதுசாரி அமைப்பான ஆர்எஸ் எஸ்ஸால் வழிநடத்தப்படும் பாஜகவின் ஆட்சிக்காலம் போலிச்சாமியார்களுக்கு கொண்டாட்டமான காலமாக உள்ளது.மதமும் அரசியலும் வேறு வேறானவை. மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதர்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக இருக்க வேண்டுமேயன்றி அரசியலில் மதம் தலையிடுவது ஆபத்தானது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமை உள்ளிட்டதனிமனித உரிமைகளை வலியுறுத்துகிற அதேநேரத்தில் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட போலிகளை, ஆர்எஸ்எஸ்சின் ஊதுகுழல்களை அம்பலப்படுத்துவது அவசியமாகும். 

மதத்திற்கும், அரசியலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து காரல் மார்க்சிற்கு தெளிவான பார்வை இருந்தது. மதமும் அரசியலும் தனித்தனியானவை என்பதில் அவர் அழுத்தமான கருத்து கொண்டிருந்தார். இதுதொடர்பாக புருனோ பாயருக்கும் மார்க்சிற்கும் நடந்த விவாதத்தில் “கிறிஸ்தவ நாடு என்பது ஒழிக்கப்பட்டு மதச்சார்பற்ற, நாத்திக நாடு உருவாக்கப்பட்டால்தான் அரசியல் விடுதலை சாத்தியம் என்று புருனோ பாயர் கூறியபோது கிறிஸ்தவ அரசு என்பதே ஒரு அரசின் வடிவம் முதலாளித்துவ மதச்சார்பற்ற அரசு உருவானதும் மதம் முழுமையாக மறைந்துவிடாது என்று கூறியதோடு, அன்றைய ஐரோப்பிய சூழலை மேற்கோள் காட்டி முதலாளித்துவ அரசு என்பது கிறிஸ்தவ அரசின் முழுமையான இயங்கியல் வடிவமே என்று விளக்கினார். 

அரசியலிலிருந்து மதம் விலகி நிற்க வேண்டும்என்பதே மதச்சார்பின்மையின் சாரம். மக்களின் மத நம்பிக்கைகள் குறித்த தெளிவான புரிதலை கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஜக்கி வாசுதேவ்போன்ற கார்ப்பரேட், ஆர்எஸ்எஸ் ஆதரவு சாமி யார்களின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவது அவசியம். இவர்கள் உருவாக்குகிற போதையில் சிக்கியவர்களை விடுவிப்பதன் மூலமே போராட்டப் பாதையை நோக்கி அவர்களை அணிதிரட்ட முடியும்.
கட்டுரையாளர் : மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;