tamilnadu

img

பொலிவியாவில் மீண்டும் சிவப்பு உதயம்...

தென் அமெரிக்க நாடாகிய பொலிவியாவில் அதிக பெரும்பான்மையுடன் இடதுசாரிகள் பெற்ற வெற்றி உலகெங்கும் இடதுசாரிகளிடையே உற்சாக அலையைக் கிளப்பியுள்ளது. உலகெங்கும் கம்யூனிஸ்ட், இடதுசாரி, சோசலிஸ்ட் இயக்கங்களின் சிறப்பும் முக்கியத்துவமும் அடிக்கோடிட்டு அறிவித்தஇந்த இடதுசாரியின் வெற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குக் கிடைத்த தோல்வியாக அமைந்தது. கொரோனா தொற்றுநோய்க் காலத்தையும், புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் தோல்வியையும் முதலாளித்துவ நாடுகள்கூட ஒப்புக்கொண்டுள்ளன. இந்தக் கொள்கைகளின் தோல்வியை மேலும் ஒருமுறை தெளிவாக்கியதுதான் பொலிவியாவில் இடதுசாரிகள் பெற்ற இந்த மகத்தான  வெற்றி. அதனால்தான், இந்தத் தேர்தல் தீர்ப்புக்கு அந்த நாட்டுக்கு வெளியேயும் பெரும் முக்கியத்துவம் உள்ளது.

மிகச் சரியான உண்மை
ஜனநாயகத்தைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்ற எல்லா முயற்சிகளையும் எதிர்த்து வென்று பொலிவியா மக்கள் வரலாறு படைத்தனர். கோடீஸ்வர கார்ப்பரேட் பெருமுதலாளிகளைத் தோல்வியுறச் செய்வதற்கான சக்தி மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ளதை பொலிவியா தெளிவுபடுத்தியுள்ளதென்று அமெரிக்க ஊடகச் செயல்பாட்டாளரான ஜான் மக்அலீவி கூறியது மிகச்சரியான உண்மை. 
2019 நவம்பரில் இராணுவத்தைக் கூட்டுச்சேர்த்துக் கொண்டு வலதுசாரிகளால் ஆட்சி கவிழ்ப்பு செய்யப்பட்ட பொலிவியாவில் அக்டோபர் 17 அன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றவுள்ளனர். ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி இவோ மொராலிஸின் தோழராகிய லூயிஸ் ஆர்ஸ் இப்போது ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டார். இவர் 52 சதவீத வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றுள்ளார் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு (எக்ஸிட்போல்) தெளிவாக்கியுள்ளது. இடதுசாரியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் தாவீத்சோகு ஹான்கேவும் முன்னிலையில் உள்ளார்.இந்த இருவரின் வெற்றியும் உறுதியாகிவிட்டது. அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவருவதற்குச் சில நாட்கள் ஆகும். 

நான் திரும்பி வருவேன்
அர்ஜெண்டினாவில் உள்ள இவோ மொரேல்லிஸ், “நான் திரும்பி வருவேன்.  பொலிவியா மக்களின் சுதந்திரம்மறுசீரமைக்கப்படும்” என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதியளித்தார். மொரேல்ஸின் ‘சோசலிசத்திற்கான இயக்கம்’ வெற்றி பெற்றவுடன் அந்த வாக்குறுதி நிஜமாகும். ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் லூயிஸ் ஆர்ஸ் 11 ஆண்டுகள் இவோ மொரேல்ஸ் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பதவி வகித்தவர். இருவரும் சேர்ந்து சமூக முன்னேற்றத்திற்குப் புதிய வரலாறு எழுதும்போதுதான் அவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

1973 செப்டம்பரில் சிலியில் சால்வடார் அலெண்டேவுக்கு எதிராகவும், 2002 ஏப்ரலில் வெனிசுலாவில் ஹியூகோசாவேசுக்கு எதிராகவும், 2010-ல் ஈக்வடாரில் ராஃபேல் கோரியாவுக்கு எதிராகவும் அமெரிக்காவின் தலைமையில் கலவரங்கள் நடத்தப்பட்டன. இதுபோன்றுதான் 2019-ல் பொலிவியாவில் இவோ மொரேல்ஸின் அரசைக் கவிழ்த்தனர். அன்று தேர்தலில் வெற்றி பெற்ற மொரேல்ஸை தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டி ஆட்சியிலிருந்து வெளியேற்றினர். ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்ட அவர் பொலிவியாவைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று. வெளிநாட்டில் இருந்தபடியே இடதுசாரியின் வெற்றிக்குத் தலைமை வகித்தவர் மொரேல்ஸ்தான்.

தடை, கொலை, வாக்காளர் நீக்கம்...
2019-ல் இடைக்கால ஜனாதிபதியாக அதிகாரத்திற்கு வந்த ஜியானின் அனெஸ் பொலிவியாவைப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சீர்குலைத்தார். இவரது ஆட்சியில் தொழிலாளர் இயக்கங்கள் ஒடுக்கப்பட்டன. டஜன் கணக்கான கொலைகள் அரங்கேறின. ஏராளமான தொழிற்சங்கத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். “மாஸ்” இயக்கத்தைத் தடைசெய்யவும், அந்த இயக்கத்தினரைப் போட்டியிட விடாமல் செய்யவும் முயற்சிநடந்தது. வலதுசாரி ஊடகங்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு விரிவான அளவில் பொய்யும் அவதூறுமான பிரச்சாரம் செய்யப்பட்டது. தேர்தல் பலமுறை மாற்றி வைக்கப்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ளஏராளமான பொலிவிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.  கொரோனா காரணத்தால் பலருக்கு மீண்டும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியவில்ல. இவற்றையெல்லாம் எதிர்த்துத் தோல்வியுறச் செய்வதற்காகத்தான் பொலிவியா மக்கள் இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பு வழங்கினர்.

இவோ மொரேல்ஸின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சில நாட்களில் கார்ப்பரேட் முதலாளிகள் அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர் என்பது இதனுடன் சேர்த்துப் பார்க்கவேண்டிய மற்றொரு விஷயமாகும். பெட்ரோலியம் இயற்கை எரிவாயு கனிம வளங்கள் எல்லாம் தனியார்துறை வசமாயின. நவீன தாராளமயக் கொள்கைகள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டன. இந்தக் கொள்கைகள் இனி வேண்டாம் என்பதே மக்களின் இப்போதைய தேர்தல் தீர்ப்பு.

கார்ப்பரேட் கொள்ளைக்கு முடிவு
குடிதண்ணீர்கூடத் தனியார்மயம் ஆக்கப்பட்ட வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக வலுவாகப் போராடிக் கொண்டுதான் இவோ மொரேல்ஸ் 2009-லும், 2014-லும் மீண்டும் வெற்றி பெற்றார். ஐஎம்எஃப்-உலக வங்கியின் கொள்கைகளுக்கு எதிராக எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நாட்டில் நடைபெற்ற பெரும் போராட்டங்களைத் தொடர்ந்துதான் மொரேல்ஸ் ஆட்சியதிகாரத்திற்கு வந்தார். மொரேல்ஸ் அதிகாரத்திற்கு வந்தவுடன் தேசத்தின் செல்வத்தில் நியாயமான மறுபங்கீடு செய்யப்பட்டது; பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிமவளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் விரைவாக தேசவுடைமை ஆக்கப்பட்டன. கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு முடிவுகட்டப்பட்டது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்காக அதிகரித்தது. வருமானத்தில் உள்ள ஏற்றத் தாழ்வும் வறுமையும் குறைந்தது. வீட்டுவசதிப் பிரச்சனை, வேலையின்மை, கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படைத் துறைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.

கார்ப்பரேட் கொள்கைகள் மாற்றி எழுதப்பட்டதுடன், அமெரிக்காவுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மனம் பொறுக்கவில்லை. மொரேல்ஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இப்போது மக்கள் அதற்குச் சரியான பதிலடி கொடுத்துவிட்டனர். “மக்களின் உயர்அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமே இந்தத் தேர்தல்” என்றார் மொரேல்ஸ்.அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள்தான் உயர்அதிகாரிகள்!

நன்றி: மலையாள நாளிதழ் தேசாபிமானி (21.10.2020)   

 தமிழில் : தி.வரதராசன்