tamilnadu

img

ரயில் கட்டண உயர்வை தவிர்க்க முடியும், எப்படி? அ.விஜயகுமார்

மத்திய அரசு 2300 கோடி ரூபாய் அளவுக்கு ரயில் கட்டண உயர்வின் மூலம் மக்களின் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. கட்டண உயர்வு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா, 2பைசா,4 பைசா என்று 3 விதமாக உள்ளது.
இது, பொருளாதார மந்த நிலையால் வாங்கும் சக்தியை இழந்து நிற்கும் மக்களின் தலையில் மேலும் ஒரு சுமையை ஏற்றி வாங்கும் சக்தியில் மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.  பொருளாதார மந்தத்தால் கடந்த 8 மாதங்களில் ரயில்வே எதிர்பார்த்த அளவு போக்குவரத்தும் வருமானமும் ரூ. 70ஆயிரம் கோடி அளவுக்கு வரவில்லை. குறிப்பாக பயணிகள் போக்குவரத்தில்  எதிர்பார்த்த அளவைவிட 17 கோடி மக்கள் குறைவாக பயணித்துள்ளனர். இதனால் பயணிகள் வருமானம் இலக்கைவிட ரூ.2ஆயிரம் கோடி குறைந்துள்ளது.

இந்த நிலையில் பயணிகள் கட்டண உயர்வானது மேலும் பயணிகளை சாலைக்கு துரத்துவதோடு பயணிகளின் எண்ணிக்கை மேலும் குறையவும் அதனால் ரயில்வேக்கு இந்த பிரிவில் இருந்து வரும் வருமானம் வருவது  குறைவதற்கே வழிவகுக்கும். ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் கூறும்போது,  பயணிகள் போக்குவரத்தில் ரயில்வே இழப்பை சந்திக்கிறது என்றும் இதனால் ரயில்வேயின்  செலவு  அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) அளித்த  அறிக்கையின் படி   ஆண்டுக்கு ரூ.37 ஆயிரம் கோடி அளவுக்கு பயணிகள் போக்குவரத்தில் ரயில்வே இழப்பை சந்திக்கிறது.

புறநகர் போக்குவரத்தில் ரூ.5300கோடியும் சாதாரண கட்டணங்களில் ரூ.15 ஆயிரம் கோடியும் இரண்டாம் வகுப்பில் ரூ.10ஆயிரம் கோடியும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியில் ரூ.9ஆயிரம் கோடியும் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டியில் ரூ.560 கோடியும் முதல் வகுப்பில் ரூ.53கோடியும் குளிர்சாதன முதல் வகுப்பில் ரூ.140 கோடியும் இழப்பை ரயில்வே சந்திக்கிறது. இதில் குளிர்சாதன இருக்கை வகுப்பும் குளிர்சாதன மூன்றடுக்கு வகுப்பும்தான் லாபமீட்டும் வகுப்புகள். சரக்குபோக்குவரத்தில் ரயில்வேக்கு ரூ.39ஆயிரம் கோடி லாபம் கிடைக்கிறது. இதில் பயணிகள் இழப்பால் ரூ.37ஆயிரம் கோடி பறிபோகிறது. ரூ.2ஆயிரம் கோடிதான் நிகர லாபம் கிடைக்கிறது.அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் உள்பட அனைத்து நாடுகளிலும் பயணிகள் கட்டணத்தில் இழப்புதான் உள்ளது. இந்த இழப்பை அந்தந்த நாடுகளின் மத்திய அரசுகள் மானியம் கொடுத்து ஈடு செய்கின்றன. அதைப்போல இந்திய அரசும் இந்த ரூ.37ஆயிரம் கோடியை ரயில்வேக்கு அளித்து ஈடுகட்டினால் ரயில்வேயின் வருமானம் அதிகரித்து செலவு சதவீதம் குறையும். அதைப்போல மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை நிதியமைச்சகத்தில் இருந்து கொடுப்பதைப் போல ரயில்வேயின் ஓய்வூதியர்களுக்கு ஆகும் 45ஆயிரம் கோடி ரூபாய் செலவை ஈடுகட்டினால் ரயில்வேயின் வருமானம் அதிகரித்து செலவு சதவீதம் 70ஆக குறையும் என்று ரயில்வே வாரியத்தலைவர் கூறியுள்ளார்.

ரயில்வேயின் செலவு சதவீதம் என்பது ரயில்வேயின் மொத்த வரவில் அதன் மொத்த செலவின் சதவீதமாகும். ரயில்வே 2017-18ல் 100 ரூபாய் வருமானம் ஈட்டினால் 102 ரூபாய் செலவு செய்தது. 2018-19ல் 100 ரூபாய்க்கு ரூ.113 ரூபாய் செலவு செய்தது. இந்த நவம்பர் வரை இந்தாண்டு 8 மாதங்களில் செலவு சதவீதம் 121ஆக அதிகரித்துள்ளது.எனவே ரயில்வேயின் பொருளாதாரநிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு செலவு வருமானத்தை மீறிய வகையில் உள்ளது. 
இதை ஈடுகட்ட ரூ.2300கோடி கட்டண உயர்வு என்பது பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த வகையிலும் உதவாது என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) துணைத்தலைவர் ஆர்.இளங்கோவன். இது மக்களை மேலும் சாலைக்குதான் தள்ளிவிடும். நல்ல வேளையாக புறநகர் கட்டணமும் சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. இந்தப்பிரச்சனைக்கு  தீர்வு காண மத்திய அரசு ரூ.37ஆயிரம்கோடி பயண இழப்பையும் ரூ.45ஆயிரம் கோடி பென்சன் தொகையையும் ரயில்வேக்கு வழங்கவேண்டும். இதை மறைத்து கட்டண உயர்வு மூலமாக பிரச்சனையை திசைதிருப்புகிறது ரயில்வே என்று குற்றம்சாட்டுகிறார் அவர். செலவு அதிகரிக்க அதிகரிக்க கட்டண உயர்வை அதிகரித்தால் சாமனிய மக்கள் மீதான சுமை கூடிக்கொண்டே இருக்கும்.
உயரும் கட்டணங்களின் விவரம்: 
பயண இடங்கள்            ஏசி அல்லாத வகுப்புகள்        ஏசி வகுப்புகள்      
1.சென்னை-சேலம்                    ரூ. 7                            ரூ.14
2.சென்னை-ஈரோடு                   ரூ. 8                            ரூ.16
3.சென்னை- கோவை                ரூ. 10                           ரூ.20
4.சென்னை- மதுரை                 ரூ. 10                           ரூ.20
5.சென்னை- திருச்சி                  ரூ. 7                            ரூ.14
6.சென்னை -பெங்களூரு            ரூ. 6                            ரூ.12
7.சென்னை-தில்லி                    ரூ.45                           ரூ.90
8.சென்னை-மும்பை                  ரூ.26                           ரூ.52
9.சென்னை-ஹவுரா                  ரூ.34                           ரூ.67
10. சென்னை- நெல்லை         ரூ.13                           ரூ.26
11. சென்னை- குமரி                   ரூ.15                           ரூ.30
முன்பதிவு உள்ளிட்ட மற்ற கட்டணங்களில் மாற்றமில்லை.

;