tamilnadu

img

பட்ஜெட் பலிபீடத்தில் பொது விநியோகத் திட்டம் - ஜி.எஸ்.அமர்நாத்

இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறையின் கீழ் அதிக மானியத்துடன் கூடிய உணவு தானி யங்களை பெறுவதற்காக சுமார் 80 கோடி நபர்களை உள்ளடக்கிய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் இணைந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் முன்னுரிமை பெற்ற (Priority House Hold (PHH) குடும்ப அட்டையில் பெண்கள் மட்டுமே குடும்ப தலைவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டையில் குடும்ப தலைவராக ஆண்கள் இருந்தால் பெண்களாக மாற்றப்பட்டு வருகிறது.

முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு அரிசியின் விலை கிலோ ரூ.3 என்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை களுக்கு ரூ.6.80 என்று நிர்ணயம் செய்து அந்த விலையில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. தமிழகம் விதி விலக்கானது. மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டை சமர்ப்பித்து நீண்ட உரையாற்றினார். இவ்வுரை உழைப்பாளி மக்களின் வயிற்றில் பால் வார்க்கவில்லை. அதற்கு மாறாக பட்டினியை வளர்க்க தொடங்கியுள்ளது. பட்ஜெட் பலி பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ள இன்னொரு காவு பொது விநியோக திட்டமாகும். 2019-20ல் உணவு மானிய ஒதுக்கீடு ரூ.1,84,220 கோடியாக இருந்தது. இப்போது ரூ.1,08,698 கோடியாக மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்திய உணவுக் கழகம் தற்போது மிக அதிகளவு இருப்பினை சுமந்து கொண்டு இருக்கிறது என்ற உண் மையை பொறுத்தவரை சென்ற வருடத்தைவிட உணவு மானியம் அதிகமாக உயர்ந்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக 40 சதவீதம் குறைந்து  உள்ளது. நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் காட்டுவதற்காக அரசு கடன் வாங்குவதற்கு பதிலாக இந்திய உணவுக் கழகத்தை கடன் வாங்க வைக்கின்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு, கடன் திரட்டினால் வட்டி குறைவாக இருக்கும். இந்திய உணவுக் கழகம் வங்கிக் கடன் வாங்கினால் அதிக வட்டிக்கு வாங்க வேண்டி வரும். இது உணவு பாதுகாப்பை சிதைக்கும். மேலும் இது உணவு தானியங்களை மட்டுமல்ல, அரசிடமிருந்து உணவுக் கழகத்திற்கு கிடைக்க வேண்டிய தொகையை ஈடுகட்டுவதற்காகக்கூட. 

இப்படி செய்வதன் விளைவு அரசு சந்தைக்கு செல்லா மல் மறைமுகமாக வங்கிகளிடமிருந்து கடனை பெறுவதா கும். இதன் மூலம் அரசு நிதிப் பற்றாக்குறையை குறைவாக காட்டிக் கொள்ளலாம். ஆனால் இது நீடிக்காது திருப்பி தாக்குகின்ற நிலைமையும் உருவாகலாம். முதலாவதாக நிலுவைகள் கூடிக்கொண்டே செல்வதால் அதன் வங்கிக் கடனும் கூடிக் கொண்டே செல்லும். இது இந்த அமைப்பிற்கு நெருக்கடியைத் தரும். இரண்டாவதாக அரசு சந்தைக்கு சென்று கடனை திரட்டி உணவுக் கழகத்திற்கு நிதி அளிப்பதாக இருப்பின் என்ன வட்டிக்கு கடன் எழுப்பி யிருக்குமோ அதை விட வங்கிகள் உணவுக் கழகத்திற்கு விதிக்கும் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் மொத்த பொது நிதியும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.

எழுகின்ற ஐயம் என்னவென்றால், ஒரு நேரம் வரும், அப்போது அரசு நிர்வகிக்க மிக அதிக செலவாகிறது என்று கூறி மொத்த பொது விநியோக திட்டத்தையே கை கழுவுகிற காலம் வந்துவிடும். அப்பொழுது உணவு பாதுகாப்புச் சட்டமும் செயல் இழந்து விடுகின்ற அபாயமும் உள்ளது. மத்திய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய உணவுக் கழகத்திற்கு வழங்கப்படும் மானியத்திலும் நிலுவையை வைத்துள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கான மானியத்தில் ரூ.69,394 கோடி நிலுவையில் உள்ளது. மத்திய தணிக்கை ஆணையத்தின் தகவல்படி அரசின் மொத்த மானியத்தில் 2019ல் 74 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 26 சதவீதம் நிலுவை யில் உள்ளது. 2018ல் 83 சதவீதம் மட்டுமே மானியமாக வழங்கப்பட்டது.

தமிழக நிலைமை

தமிழக அரசும் இதற்கு சளைத்ததல்ல, 2019 மே மாத நிலவரப்படி 1,99,53,681 குடும்ப அட்டைகள் உள்ளன. இங்கு அனைவருக்குமான பொது விநியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் பச்சரிசி, புழுங்கல் அரிசி இலவசமாகவும், சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகிறது. சிறப்பு பொது விநி யோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.

மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்ட போது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

முன்னுரிமை குடும்ப அட்டைகள்                                                         77,81,055
அந்தியோதயா அன்னயோஜனா                                                         18,64,600
முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள்                                            92,49,207
முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டைகள்                    10,12,630
எந்த பொருளும் பெறாத குடும்ப அட்டைகள்                                 46,189

இதில் அரசின் நல்வாழ்வு திட்டங்களை பெறுவதற்கா கவும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவும் 10,12,630 முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டைகளை மாற்ற தமிழக அரசு குறுகிய காலம் அவகாசம் வழங்கியது. இதில் 4 லட்சம் முன்னுரிமை யற்ற குடும்ப அட்டைகள் அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் பெறுகின்ற கார்டுகளாக மாற்றப்பட்டன. இக்கார்டுகள் மாற்றப்படுவதற்கு முன் தமிழகத்தில் பொது விநியோக திட்டத்திற்கு ரூ.5,500 கோடி ஒதுக்கப்பட்டது. 4 லட்சம் கார்டுகள் மாற்றியதற்கு பின் இவ்வருட நிதி நிலை அறிக்கையில் 6500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசிடமிருந்து கொள்முதல் செய்கின்ற அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. மத்திய அரசின் மானியமும் வெட்டப்பட்டுள்ளது. முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் 9 லட்சத்திலிருந்து 13 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கேற்ப மானியம் அதிகரிக்கப்பட வேண்டும். பொது விநியோக திட்டம் தமிழகத்தில் சீராக செயல்பட ரூ.10,000 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப் பட வேண்டும்.

ஒரு உதாரணத்திற்கு, மதுரை வடக்குத் தொகுதியில் உள்ள மண்ணெண்ணெய் பங்கில் 1,20,000 லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 6000 லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊழியர்களிடம் நீங்கள் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கூறி மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டார்கள்.

450 கார்டுகள் உள்ள ரேசன் கடைக்கு 150 வேஷ்டி, சேலைகள் கொடுக்கப்பட்டு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கூறி வேஷ்டி சேலைக ளை பறித்து விட்டார்கள். மானியங்கள் குறைக்கப்படாத பொழுதே இது நடந்துள்ளது. தற்போது மானியங்கள் குறைக்கப்பட்டால் நிலைமை என்னவாகும்? 

கவிஞர் கந்தர்வன் தனது கவிதையில்,
“குழந்தை பிறப்பை தடுக்க
கர்ப்பப்பை அகற்றினார்கள்
உணவு பசியை குறைக்க
இரைப்பை அகற்றுகின்ற
நிலைமை வரும்” என எழுதினார். 
இந்நிலைமை வராமல் தடுக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர் : தலைவர், தமிழக கூட்டுறவு 
சங்க ஊழியர் சங்கம், மதுரை மாநகர்



 

;