tamilnadu

img

பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்போம்!

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அதாவது 1969 ஜூலை 19 அன்று 14 பெரிய தனியார் வங்கிகள் அரசுடமை யாக்கப்பட்டன. அது இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். அதுவரை வங்கியில் போடப்பட்ட மக்கள் சேமிப்பு பணத்திற்கு பாதுகாப்பில்லை. நூற்றுக்க ணக்கான தனியார் வங்கிகள் திவாலாகின. மக்கள் சேமிப்பு பணத்தைக் கொண்டு நிகர நஷ்டம் ஈடுகட்டப் பட்டதால் 100 ரூபாய் சேமித்தவர்களுக்கு நஷ்டத்தை பொறுத்து, 40 ரூபாய் அல்லது 50 ரூபாய் மட்டுமே கிடைத்தது.  அதுவரை வங்கிச் சேவை என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்றிருந்தது. குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கோ, விவசா யிகளுக்கோ, சிறு தொழில் செய்ய விரும்புபவர்க ளுக்கோ வங்கிக்கடன் என்பது எட்டாக்கனியாக இருந்தது. வங்கிகள் என்றாலே அது நகரமக்களுக்கு மட்டுமே என்றிருந்தது. இதையெல்லாம் வங்கிகள் தேசியமயம் தலைகீழாகப் புரட்டிப் போட்டு அனைவ ருக்குமான வங்கிச் சேவை என்ற நிலை உரு வாக்கப்பட்டது. நாட்டின் முன்னுரிமைகளான “விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டுமானம், ஏற்றுமதி” ஆகியவற்றை நிறைவேற்றவே வங்கிகள் தேசியமய மாக்கப்பட்டு அரசு வங்கிகளாகின. இந்த நோக்கம் நிறை வேறும் வகையில் அரசு வங்கிகளின் பயணம்1991 வரையிலான 22 ஆண்டுகள் தொடர்ந்தது.  இக்கால கட்டத்தில் தேசியமாவதற்கு முன்புவரை கடன் மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு, சிறு தொழில் முனைவோருக்கு, பெண்களுக்கு, பட்டியலின மக்களுக்கு அரசு வங்கிகள் கடன் வழங்கின. விவசாயம் தழைத்தது, நாடு உணவு தன்னிறைவு பெற்றது. தனிப்பட்ட தொழில் துவங்குவதற்கு பெண்களுக்கு கடன் கிடைத்தது. பட்டியலின மக்களுக்கு எளிதில் முன்னுரிமைக் கடன் கிடைத்தது. நாட்டின் சாலை, இருப்புப்பாதை, உருக்காலை, மின்உற்பத்தி ஆகிய அடிப்படை கட்டுமானத்தை உருவாக்குவதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மகத்தானது. ஏற்றுமதி பெருகியது. அந்நியச் செலாவணி ஈட்டப் பட்டது. இவையெல்லாம் சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கின. ஒட்டுமொத்த தேச கட்டுமா னத்திலும், சாமானிய மக்களின் வாழ்க்கையிலும் அரசு வங்கிகள் மிகப்பெரும் அளவில் முன்னேற் றத்தை உருவாக்கின.

பொதுத்துறை வங்கிகளின் பல்லாயிரக்கணக்கான கிளைகள் கிராமப்புறத்தில் திறக்கப்பட்டன. எளிய மக்களின் வாழ்வில் ஒளிவிளக்காக அரசு வங்கிகள் விளங்கின. இச்சேவையை திறம்பட மேற்கொள்ள லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதுவரை வங்கிப் பணியில் அமர வாய்ப்பளிக்கப்படாத பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்களுக்கு வங்கிப் பணி கிடைத்தது. ஒருபுறம் சமூக நீதி காக்கப்பட்டதோடு, மறுபுறம் வங்கிப்பணி யாளர்கள் பொருளாதாரத்தில் தங்களின் வாங்கும் சக்தி யினால் சந்தையில் புதிய கிராக்கியை உருவாக்கினர். அதனால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் அது புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கின. 1980 களின் இறுதியில் சோவியத் யூனியனிலும், அதைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அதுவரை தங்களை சேமநல அரசுகள் என்று காட்டிக் கொண்டிருந்த முதலாளித்துவ அரசுகளுக்கு இனியும் அத்தகைய முகமூடி தேவைப்படவில்லை. அவை அப்பட்டமாக தங்கள் அரசின் முதலாளித்துவ வர்க்க நலனை வெளிக்காட்டிக் கொள்ள தயங்கவில்லை.

எனவேதான் நம்நாட்டில் 1991க்கு பிறகு அமைந்த நரசிம்மராவ் அரசு முதல் நரேந்திர மோடிஅரசு வரையிலான மத்திய அரசுகள் பெரு முதலாளிகளின் வர்க்க நலனுக்கு ஏற்ற வகையில் செயல்படத் துவங்கின. பொதுத்துறை வங்கிகளில் அதுவரை வழங்கப்பட்டு வந்த ஏழை, எளிய மக்களுக்கான முன்னுரிமைக் கடனை வெட்டிச் சுருக்கின.  அரசு வங்கிகளில் உள்ள மத்திய அரசின் பங்குகளில் 49% வரை சட்டத்திருத்தம் மூலமாக தனியாருக்கு விற்க முற்பட்டன.  புதிதாக தனியார் வங்கிகள் துவங்கப் பட்டன. “இனி தனியார் வங்கிகள் எதுவும் அரசுடமை யாக்கப்பட மாட்டாது” என்று அடுத்தடுத்து வந்த மத்திய ஆட்சியாளர்கள் நிலைபாடெடுத்தனர்.எந்த நோக்கத்திற்காக வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டதோ, அதன் நேரெதிர் திசையில் வங்கித்துறை பயணப்பட்டது. கூடவே கூட்டுறவு, கிராம வங்கிகளையும் பலவீன மடையச் செய்யும் முயற்சிகளை 1991க்கு பிறகு வந்த மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டு 50 ஆண்டுகள் கழித்து சாமானிய மக்களின் நோக்கில் பரிசீலித்தால் தற்போதுள்ள நிலைமை மோசமாகவே உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அரசு பொதுத்துறை வங்கிகளை பலவீனப்படுத்துவதில் முனைப்பாக செயல் பட்டு வந்துள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் துவக்கப்பட்டுள்ளன. பந்தன், ஈக்விடாஸ் போன்ற நுண்கடன் நிறுவனங்கள், ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பேடிஎம் போன்ற எலக்ட்ரானிக் வாலட்டுகள் எல்லாம் வங்கிகள் தொடங்கி உள்ளன. இவற்றிற்கு மத்திய அரசு ஆக்கமும், ஊக்கமும் தருகிறது. இவை எதுவும் எளிய மக்களுக்கான முன்னுரிமைக் கடன் வழங்குவ தில்லை; வழங்கச் சொல்லி ரிசர்வ் வங்கியோ, மத்திய அரசோ வற்புறுத்துவதுமில்லை.

பொதுத்துறை வங்கிகளை பலவிதங்களில் பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. சர்வ தேச அளவுகோல் என்று காரணம் காட்டி வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுத்தவும், அதற்காக அரசு வங்கிகளில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனி யாருக்கு விற்கவும் நிர்பந்தம் கொடுக்கிறது.  2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த போது பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ.2.16 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் சென்ற ஆண்டு முடிவில் அது ரூ.14 லட்சம் கோடிக்கும் கூடுதலாக உயர்ந்துவிட்டது. இதில் 90% வராக்கடன் பெரு நிறு வனங்களிலிருந்து வசூலிக்கப்பட வேண்டியது. பெரு நிறுவனக் கடனை வசூல் செய்வதற்காக என்று மோடி அரசால் கொண்டு வரப்பட்ட திவால் சட்டம் (ஐபிசிசட்டம்), இதனை வசூல் செய்வதற்கு பதில் தள்ளுபடி செய்யவே பயன்படுகிறது. பூஷன்ஸ்டீல், பூஷன்பவர்&ஸ்டீல், எலக்ட்ரோஸ்டீல்ஸ்டீல்ஸ், ஜெ.பி.இன்ப்ரா, இரா இன்ப்ரா, ஆம்டெக்ஆட்டோ, ஏ.பி.ஜி.ஷிப்யார்டு, ஜோதிஸ் ட்ரக் சர்ஸ், மோன்னட்இஸ்பட், லேன்கோஇன்ப்ராடெக், அலோக்இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார்ஸ் டீல் ஆகிய 12 மிகப்பெரிய வராக் கடனாளிகள் மட்டும் 3.45 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் வைத்துள்ளன. இது மொத்த வராக்கடனில் 25% ஆகும். 

இவற்றில்பூஷன்ஸ்டீல், எலக்ட்ரோஸ்டீல்ஸ்டீல்ஸ், மோன்னட்இஸ்பட், ஆம்டெக் ஆட்டோ ஆகிய 4 கடனாளிகளின் மொத்த வராக்கடனான ரூ.93488 கோடியில் ரூ.45295 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.48193 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டது என்பதிலி ருந்தே இந்த சட்டத்தைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.  அலோக் இண்டஸ்ட்ரீஸ் என்ற மற்றொரு நிறுவ னத்தின் வராக்கடனான ரூ.30000 கோடியில், 5000 கோடி ரூபாயை மட்டும் வசூல் செய்து 25000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கடன் கொடுத்ததில் பொதுத்துறை வங்கிகளும் உள்ளன; தனியார்துறை வங்கிகளும் உள்ளன.அதேசமயம்  கல்விக் கடனை யும், விவசாயக் கடனையும் வசூல் செய்ய பொதுத்துறை வங்கிகளே கூடதனியார் ஏஜெண்டுகளையும், கார்ப்ப ரேட்டுகளையும் நியமிக்கின்றன. இவை சாதாரண சிறு கடனாளிகளை மிரட்டி கடன் வசூல் செய்கின்றன. இன்றைக்கு அரசு வங்கிகளையும் தனியார் வங்கிகள் போலவே நடத்த மத்திய அரசு முயல்கிறது. சாதாரண வாடிக்கையாளர்கள் மீது பலவிதமான அபரா தத்தை சேவைக்கட்டணம் என்ற பெயரில் தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு வசூலிக்கின்றன. ஏடிஎம் கட்டணம், மாற்று பாஸ்புத்தகம், குறைந்தபட்ச இருப்பு, காசோலை திருப்பு தல்…இப்படி பல வகைகளில் சாமானிய மக்களிடம் கட்டணக் கொள்ளை நடக்கிறது.

அரசு வங்கிகள் அனைத்தும் மிகத் திறம்பட செயல் பட்டு 2014-15 முதல் 2017-18 வரையிலான நான்கு ஆண்டுகளில் ரூ.5.90 லட்சம் கோடி லாபம் ஈட்டி யுள்ளன. ஆனால் மோடி அரசு வராக்கடனை கராறாக வசூல் செய்வதற்கு பதில் பெரு நிறுவனங்களின் வராக்கடனுக்காக இந்த நான்காண்டுகளில் ரூ.6.67 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து, அரசு வங்கிகளை ரூ.77000 கோடி நிகர நஷ்டம் அடையச் செய்துள்ளது. அதேபோல் எளிய மக்களுக்காகவே உருவாக் கப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு தேவையான மூலதனம் கொடுக்கப்படாமல் அவைமுடக்கப்படுகின்றன. அவை ஈட்டும் லாபத்திற்கு அளிக்கப்பட்ட வருமான வரி விலக்கை நீக்கியதன் மூலம் பல கூட்டுறவு வங்கிகள் கடுமையான நிதி நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

மொத்தக் கடனில் 80%க்கும் கூடுதலாக பொருளா தாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான முன்னுரிமைக் கடன் வழங்கும் கிராம வங்கிகளின் பங்குகளில் 49% ஐ தனியாருக்கு கொடுப்பதற்கான சட்டத்தை சென்ற மோடி அரசு கொண்டு வந்து, அதை அமல்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இதனால் கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே பாதிக்கப்படும் ஆபத்துள்ளது. எனவே பொதுத்துறை,  கூட்டுறவு, கிராம வங்கி களை காக்கும் போராட்டத்திலும், அவற்றின் சாமானிய மக்கள் சார்பு கொள்கைகளை காக்கும் போராட்டத்தி லும் வங்கி ஊழியர், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்ற னர். வங்கிகள் தேசியமய பொன்விழா நிறைவு நாளில் அதற்கான உறுதிமொழியை வங்கி ஊழியர் இயக்கம் ஏற்கிறது. அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் கோருகிறோம்.

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்,

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்- தமிழ்நாடு cpkrishnan1959@gmail.com

;