tamilnadu

img

வேளாண் நிலம் : ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு தீர்வுகாண உதவும் புதிய ஆய்வுகள்

கடந்த சில வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சனை அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் அதிக அளவில் குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக அவர்களின் நிகழ் மற்றும் எதிர்கால வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிக அளவில் விவாதிக்கப்பட்டும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது. இத்தகைய நடைமுறை சூழலில் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் சிறு தானியங்களை வழங்குவது பற்றிய ஆய்வுகள் கர்நாடக மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் “Nutrients” என்ற ஆராய்ச்சி இதழில் வெளியீடு செய்யப்பட்டது. குறிப்பாக சர்வதேச வறண்ட வெப்ப மண்டலங்களுக்கான பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) மற்றும் அட்ச பத்திரா தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளில் சிறு தானியங்களை மதிய உணவில் சேர்த்துக் கொண்ட பள்ளி மாணவர்களின் அதிக வளர்ச்சி குறிப்பாக உடல்நிலை குறியீடு (Body Mass Index) அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாத காலத்திற்கு சிறு தானிய உணவுகள் வழங்கப்பட்ட குழந்தைகளிடம் எந்தவிதமான உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ற்போது மத்திய அரசின் சார்பில் பொது வழங்கல் துறை வாயிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சிறு தானியங்களான சோளம், கேழ்வரகு, திணை போன்றவை வழங்க திட்டமிடப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் நமது நாட்டில் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் பருவ மாற்று பிரச்சனைகளுக்கு சிறு தானிய சாகுபடி நல்ல தீர்வாகவும் காணப்படுகிறது. தற்போத மத்திய அரசு குறைந்தபட்ச கொள்முதல் விலையை சிறு தானியங்களுக்கு அறிவித்துள்ள நிலையில் வருங்காலங்களில் நமது இந்திய மற்றும் தமிழக விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் தேவை உள்ள சிறு தானிய பயிர்கள் சாகுபடியில் ஈடுபடுவது அனைவருக்கும் நன்மை தருவதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வருகின்ற 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் நமது நாட்டின் பருவ மாற்று பிரச்சனைகள் மற்றும் குழந்தைகள், பெண்களிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடகள் பிரச்சனைகளுக்கு மதிய உணவு திட்டம் மற்றும் பொது வழங்கல் திட்டங்களில் சிறு தானியங்களை சேர்த்துக் கொள்வது ஒரு ஆக்கப்பூர்வமான நல்ல மாற்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

;