tamilnadu

img

பெண்ணினப் படுகொலை ஊரடங்கிற்கு கட்டுப்படாதா? - பேராசிரியர் விஜய் பிரசாத்

நாட்கள், வாரங்கள், மாதங்கள் —கொரோனா கிருமியின் பயணத்தினால் இவ்வுலகின் இயல்பு நிலை முடக்கப்பட்டு ஒரு யுகம் கடந்து விட்டதைப் போலுள்ளது. இந்நிலைமையின் நிச்சய மின்மை, நிலவும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. 

இந்தப் பின்னணியில், இந்தப் பயங்கரத்தை நேரடியாக தடுத்து நிறுத்துவதில் முன்னணி வரிசையில் உள்ள செவிலியர்களிலிருந்து மருத்துவமனைகளில் துணிதுவைப்பவர்கள் முதற்கொண்டு முதல் நிலை பணியாளர்களில் நான்கில் மூன்று பேர் பெண்களே. பாத்திரங்களைத் தட்டி காலியோசையெழுப்பி இவர்களைக் கொண்டாடுவதைத் தாண்டி, அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளான சங்கமயமாக்கல், உயர்ந்த ஊதியம், பணி நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் அவர்களது துறைகளில் தலைமை பதவிகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். உண்மைநிலை என்னவென்றால், உலகம் முழுதும் மருத்துவத்துறையில் நிர்வாகப் பொறுப்புகள் வகிப்பது பெரும்பாலும் ஆண்களே.

ஆஷா பணியாளர்கள்

இந்தியாவில் ஏற்படும் எந்தவொரு உடல் நல நெருக்கடியின் தாக்கத்தையும் பெரும்பாலும் சுமப்பது 9,90,000 அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார (ஆஷா) பணியாளர்கள், குழந்தை கள் நல பணியாளர்கள் மற்றும் துணை செவிலியர்களே. பெரும்பாலும் பெண்களாகிய இப்பணியாளர்களுக்கு மிககுறைந்த சம்பளமே அளிக்கப்படுகிறது (அதுவும் இழுத்தடிக்கப்படு கிறது);  தேவையான பயிற்சிகள் தரப்படுவதில்லை; மேலும் தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளுமே கூட மறுக்கப்படுகின்றன (இவர்களை அரசு, ‘கவுரவ பணியாளர்கள்’ எனும் சப்பைகட்டுச் சொல்லாடல் மூலம் வகைப்படுத்து கிறது). கடந்த ஆண்டில் ஆஷா பணியாளர்கள் தங்களது பணியிட நிலைமைகளை மேம்படுத்து வதற்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர், சில சிறு வெற்றிகள் தவிர்த்து அவர் களது குரல் எப்போதும்போல புறக்கணிக்கப் பட்டது.  நோய்தொற்று அச்சுறுத்தல் நடுவே,  வீடுவீடாகஅடிப்படை பாதுகாப்பு உபகரணங்க ளின்றி சென்று குடும்பங்களை சோதித்து, நோய்  குறித்த விழிப்புணர்வு பரப்புவது ஆஷா, அங்கன் வாடி பணியாளர்களே. நம்மால் வெறும் வார்த்தை யால் கொண்டாடப்படும் அதே வேளையில், அடிப்படை பாதுகாப்புத் தேவைகள் மறுக்கப்படும் முதல்நிலை சுகாதாரப் பணியாளர்கள் இவர்களே.

வலுப்பெற்ற பாலினம்சார் சமூகப் பாத்திரங்கள்

இரண்டு வருடங்கள் முன்பு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பிரசுரித்த ஒரு ஆய்வு, 76.2% ஊதியமற்ற பராமரிப்பு பணிகளை பெண்களே செய்கிறார்கள் இது ஆண்களின் பங்கைவிட மும்மடங்கு அதிகம் என்று தெரி வித்தது.  பாலினம் சார்ந்து வரையறுக்கப்பட்ட ஊதிய/ஊதியமற்ற வேலை குறித்த கண்ணோட்டங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் ‘குடும்பத்தலைவன்’கட்டமைப்பும் அதனுடன், குடும்பங்களில் பெண்கள் வகிக்கும் பராமரிப்பு பாத்திரமும், நமது சமூகங்களில் ஆழ்ந்து வேரூன்றியுள்ளது. இது இயல்பு வாழ்க்கையின் நிதர்சனம்; நெருக்கடி காலங்களிலோ, இத்தகைய கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வு மற்றும் கலாச்சார சார்புகள் விஸ்வரூபம் கொள்கின்றன.

காலப்போக்கில் நம் சமூகத்தின் நிறுவனங் களாலும் கட்டமைப்புகளாலும் இலகுவாக்கப்பட்ட பராமரிப்பு பணியின் சில பரிமாணங்களும் கூட தற்போது மீண்டும் கடுமையாகிவிட்டன. பள்ளிகள் இல்லாததால் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரவேண்டிய கட்டாயம்; முதியவர்களால் வெளியே சென்று ஒருவரையொருவர் பார்த்து பேசிக் கொள்ளமுடியாததால், அவர்களுக்கும் சலிப்பேற் பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். பொருட்கள், காய்கறி வாங்குதல் மேலும்  சிரமமாகிவிட்டது , சுத்தம் செய்தல் மிக அவசியமாகி விட்டது— இவையனைத்தும் பெண்களின் தோள்கள் மீதே பெரும்பாலும் சுமத்தப்படும் வேலைகள் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

பெண்களுக்கெதிரான வன்முறை

கொரோனா அதிர்ச்சிக்கு முன்பாக, உலகத்தில் ஒரு நாளுக்குத் தோராயமாக 137 பெண்கள் தங்கள் குடும்பத்தினாரால் கொலைசெய்யப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேரதிர்ச்சி அளிக்கக்கூடிய எண்ணிக்கை அது. ரீட்டா செகாடோ கூறியது போல, பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது மட்டு மல்லாது, பெண்ணடிமைத்தனத்தைப் பற்றிய நவீன வல்லாண்மை (நவீன பாசிசம்) எண்ணங்கள், பெண்விடுதலை குறித்த தெளிந்த கருத்துகளை மறைக்கும் இத்தருணத்தில், அவற்றின் குரூரத்தன்மையும் அதிகரித்துள்ளது. அர்ஜென்டினாவில் எழுந்துள்ள, எல் ஃபெமிசிடோ நொ செ டொமா குவாரன்டெனா’ —‘பெண்ணி னப்படுகொலை ஊரடங்கிற்கு கட்டுப்படாதா?’— என்னும் முழக்கம், உலக ஊரடங்கினால் அதிகரித்துள்ள வன்முறையின் எதிரொலியே. ஒவ்வொரு நாட்டிலும், பெண்களுக்கெதிராக அதிகரிக்கும் வன்முறை குறித்து செய்திகள் வந்தபடியே உள்ளன. அவசர உதவி எண்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன, அடைக்கலங்களை அடையமுடியாத நிலைமை நிலவுகிறது.

பெண்ணிய அவசரத் திட்டம்

சிலி நாட்டின், தி கோ-ஆர்டினாடோரா ஃபெமினிஸ்டா 8M (The Coordinadora Feminista 8M ) அமைப்பு, கொரோனாவைரஸ் நெருக்கடிக்கான ஒரு பெண்ணிய அவசரத்திட்டம் எனும் அறிக்கையை தயாரித்துள்ளது:

1. பெண்களின் கூட்டு உதவிக்குழுக்களுக்கான திட்டங்களை உருவாக்குதல். சமூக இடைவெளி யை மதித்தும்,  தனித்துவம் மீறிய ஒற்றுமை யுணர்வை வளர்த்தெடுத்து உதவிக்குழுக்கள் உருவாக்குதல் வேண்டும். அக்கம்பக்கத்திலுள்ள பகுதிகள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். குழந்தைகளைப் பராமரிக்க குழுக்கள் உருவாக்க வேண்டும். மருத்துவ ஊழியர்களின் துணை கொண்டு அப்பகுதி மக்களுக்கு உதவ வேண்டும்.

2. ஆணாதிக்க வன்முறையினைத் தட்டிக்கேட்க வேண்டும். பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களைக் கூட்டாக எதிர்கொள்ள ஒரு வழிமுறை உண்டாக்கவேண்டும்.    அவசர உதவி எண்கள், அடைக்கலங்கள் போன்ற ஆபத்தான நிலைமைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதில் வெளியேறித் தப்பிக்க ஏதுவாக பகுதிவாரி அவசரத் திட்டங்கள் வரையறுக்க வேண்டும்.

3. காலவறையற்ற பொது வேலைநிறுத்த மொன்றைத் தொடங்க வேண்டும். உடல் நலத்திற்கு தொடர்பில்லாத அனைத்து உற்பத்தி பணிகளையும் உடனடியாக நிறுத்துதல்; இந்நோய்தொற்று நேரத்தில் வீட்டிலிருப்ப தற்கான உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் பலதரப்பட்ட அத்தியாவசிய, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கான ஊதியத் திட்டம் ஒன்றை வரையறுத்தல். அத்தியாவசிய பணியாளர்கள். குறிப்பாக சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறைகளிலுளிலுள்ளோர்க்கு பாதுகாப்பான பணியிட நிலைமைகளை உறுதிப்படுத்துதல் —ஆகியவை வேண்டும்.

4. லாபத்தை மறுதலித்து நம் பராமரிப்பை/பாதுகாப்பை முன்னிறுத்தும் அவசரநிலை நடவடிக்கைகளை கோருங்கள். ஊதியத்துடன் அளிக்கப்பட்ட மருத்துவ விடுப்பு, இலவச குழந்தை பராமரிப்பு, சிறையிலிருப்போருக்கு வீட்டுகாவல் வசதி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான விலை யேற்றத்தைத் தடுத்தல், சமூக அவசியத்திற்கேற்ப திட்டமிட்டு உற்பத்தி செய்தல், அனைத்து பரா மரிப்புப் பணியாளர்களுக்கும் ஊதியம், அனை வருக்கும் தரமான இலவச மருத்துவ வசதி, கடன் மற்றும் ஈவுத்தொகைகளை இடைநீக்கம் செய்தல், இலவச தண்ணீர் மற்றும் மின்சாரம், வேலைப்பாதுகாப்பு —ஆகிய திட்டங்களைக் கேட்டுப்பெறுதல் வேண்டும்.

மேற்கண்ட கூறுகள் லத்தீன அமெரிக்க நாடுகள் மட்டுமன்றி உலகத்திற்கே பொருந்துவ தாக இருக்கின்றன.  நீங்கள் இச்செய்திமடலைப் படித்துக் கொண்டி ருக்கும் வேளையில், உலகத்தில் எங்கோ இரு பெண்கள் பெண்ணினபடுகொலைக்கு பலியாகி யிருப்பர். கொரோனா அதிர்ச்சியின் போதோ அவ்வெண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

தமிழில் சுருக்கம் :  விகாஸ் ஷிவ்ராம்


 





 

;