tamilnadu

img

வேளாண் நிலம் : உத்தர்கண்ட் மாநில பெண் வன பஞ்சாயத்து தலைவிகள் காட்டும் புதிய வேளாண் பாதை

நமது நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை சார்ந்த நிலையான முயற்சிகள் பெருகி வருகிறது. குறிப்பாக பருவ மாற்று பிரச்சனைகள் (Climate change problems) காரணமாக பல இயற்கை சீற்ற பாதிப்புகள் தாக்கும் போது நமது மக்கள் தங்களின் பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை (Indigenous Farm Technologies) நோக்கி தங்களது சாகுபடி பணிகளை மாற்றி வருகின்றனர். குறிப்பாக அதிக அளவு இயற்கை சீற்றங்களை சந்தித்து வரும் இமயமலைக்கு அருகில் உள்ள நிலப் பரப்புகளில் இயற்கை சீற்ற பாதிப்புகள் அதிகம். இங்கு 1970 காலகட்டங்களில் விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள் வழங்கப்பட்டு விவசாயிகள் நவீன விவசாய முறைகளை பின்பற்ற தூண்டப்பட்டனர். 
இதனால் குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு உற்பத்தி பெருக்கம் ஏற்பட்டாலும் நீண்டகால அடிப்படையில் அதிகப்படியான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக அதிகப்படியான வேளாண் இடுபொருட்களை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டிய நடைமுறை சூழல் ஏற்பட்டது.

இதனால் விவசாயிகள் உற்பத்தி செலவு பெருக்கம், வேளாண் சந்தைகளில் விலை வீழ்ச்சிகள் காரணமாக அதிகப்படியாக நஷ்டமடையும் சூழலும் காணப்பட்டது. இத்தகைய நடைமுறை சூழலுக்கு மாற்றாக தற்போது பல பகுதிகளில் விவசாயிகள் வேகமாக இயற்கை வேளாண்மைக்கு மாறி வருகின்றனர்.குறிப்பாக நமது நாடு விடுதலையாவதற்கு  முன்பாகவே இங்கு வன பஞ்சாயத்துக்கள் உண்டு. இதில் இரண்டு மூன்று கிராம மக்கள் உறுப்பினர்களாக இருப்பர். இது 7 முதல் 9 பேர் கொண்ட குழுவை தேர்வு செய்யும். முன்பு ஆண்கள் மட்டுமே இதில் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது கடந்த 2004 - 2005 முதல் 33 சதவீதம் பெண்களுக்கும் இடஒதுக்கீடு கமிட்டிகளில் வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய வன பஞ்சாயத்து கூட்டமைப்புகளே இன்றைய இயற்கை வேளாண் பணிகள் பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மக்களிடம் சென்று சேர முக்கிய காரணம். இவர்கள் தங்களின் பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை கொண்டு குறைந்தளவு தண்ணீர் தேவைப்படும் சிறு தானியங்கள், வட்டார அளவில் பயன்படும் கீரைகள், கோதுமை சாகுபடியில் பரவலாக ஈடுபட துவங்கியுள்ளனர். முன்பு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும் காய்கறிகள் சாகுபடி செய்யும் முறையை நிறுத்தியுள்ளனர்.

மேலும் வன பகுதிகளில் பலதரப்பட்ட மரப் பயிர்களையும், சாகுபடி செய்து தங்களின் இடுபொருட்கள் தேவையை நிறைவு செய்வதுடன், தங்களின் பருவ மாற்று பிரச்சனைகளுக்கு நடைமுறை தீர்வுகளும் கண்டு வருகின்றனர்.இதனால் வனப் பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்வதுடன் வன விவசாயிகள் அதிக தூரம் செல்லாமல் காட்டில் உற்பத்தி பொருட்களை பெற முடிகிறது. காடுகளும், வளம் பெற்றதுடன் பல பறவைகள், விலங்குகள் மற்றும் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பல மூலிகைகள் மீண்டும் வளரவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு பெண் வன பஞ்சாயத்து பிரதிநிதிகள் செயல்பாடுகள் வாயிலாக மீண்டும் இயற்கை சார்ந்த விவசாய முறைகள் உத்தர்கண்ட் மாநில விவசாயிகளிடம் பெருகி இயற்கை சீற்றங்கள், பருவ மாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை தருவதாக அமைந்துள்ளது.

முனைவர் தி.ராஜ்பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத் துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

 

;