tamilnadu

img

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் மோடியின் ஏமாற்று வித்தை

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் திங்களன்று  (ஜூன் 17) “சமகால இந்தியாவில் வேளாண்துறை மாற்றங்களில் அரசியல் பொருளாதாரம்”  நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிடம் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்ட முன்னாள் மாணவர்கள் ஏ.நாராயண மூர்த்தி, டாக்டர் ஆர்.வி.பவானி,  டாக்டர் ஆர். சுஜாதா ஆகியோர் தொகுத்துள்ள  இந்த நூலைப் பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷீலாராணி சுங்கத் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் என். ராம், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சுங்கத், பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்தநிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் ஆற்றிய உரையின் அம்சங்கள்:

கடந்த நான்காண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுமார் 800 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.ஆனந்த்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலை இப்படித்தான் மிகவும் துயரமாக உள்ளது. விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார  விலை கிடைக்க பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழு சிறப்பான பரிந்துரைகளை அளித்தது. ஆனால் அதை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. விவசாயிகள் சங்கங்கள் கூடி,  குழுவின் பரிந்துரைகளோடு ஒருமித்த முடிவுக்கு வந்தன. கடந்த 3 ஆண்டுகளில் வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கேட்டு விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.  மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரு வதற்கு முன்பு இருந்த பாஜக ஆட்சியில்  மன்ட்சர் என்ற  இடத்தில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய  போது அதை ஒடுக்க காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அகில இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் அந்த இடத்திற்கு நான் சென்று வந்தேன். அந்த பகுதி பாஜக, ஆர்எஸ்எஸ் வலுவான தளங்களைக் கொண்ட இடமாகும். அங்கே  சின்னஞ்சிறிய வீடுகளில் பூண்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விளைபொருட்களுக்கு விவசாயிகள் உற்பத்தி செலவுக்குப் போக கிலோவுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மட்டுமே விலை கிடைத்தது. 

தில்லி, பெங்களூருவில் உள்ள ரிலையன்ஸ் பிரஷ் கடைக்குச் சென்றபோது ஒரு கிலோ  பூண்டு விலை ரூ.140  என்றார்கள். மத்தியப்பிரதேச அரசு கணக்குப்படி ஒரு கிலோ பூண்டு விளைவிக்க ஆகும் செலவு 27 ரூபாய். அதே  மாநில அரசு  கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிட மிருந்து கிலோவுக்கு ரூ.37 கொடுத்து அந்த பூண்டுகளை வாங்குகிறது. ஒரு ஹெக்டேரில் 5 ஆயிரத்து 600 கிலோ பூண்டு உற்பத்தியாகிறது. ஹெக்டேருக்கு உற்பத்திச் செலவு மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகிறது. ஆனால் விவசாயிகள் விளைவித்த  பூண்டு மிகக்குறைந்த விலைக்குக் கேட்கப்படுவதால் நட்டம் ஏற்படுகிறது. நெல்லுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையை அறிவித்து வருகிறது. ஒரு குவிண்டாலுக்கு 1750 ரூபாய்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் பல பகுதிகளில் இந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதில்லை. நவீன தாராளமயப் பொருளாதார கொள்கை அமலுக்கு வந்த பின்னர் கடந்த 25 ஆண்டு களில் திட்டமிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன. பீகாரில் விவசாயிகள் ஒருஹெக்டேரில் 4 டன் நெல் விளைவித்து நல்ல அறுவடையைக் கண்டாலும் குவிண்டாலுக்கு 800 முதல் ரூ.1000 வரைதான் அவர்களுக்கு கிடைக்கிறது.ஆனால் மத்திய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதார விலையோ ரூ.1750.

கேரள மாநிலத்தில் இடது முன்னணி அரசு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் 900 ரூபாய் அதிகமாக நிர்ணயித்து  ரூ.2650 வழங்குகிறது. பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இந்தவிலையைப் பெற்றால் தற்போது அவர்களுக்கு கிடைக்கும் தொகையோடு மூன்று மடங்கு  அதிகமாக பெறுவார்கள்.இப்படித்தான் நாடு முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து விளைபொருட் களுக்கு நியாயமான விலை கிடைக்காத நிலை ஏற்பட்டு அவர்கள் நட்டமடைகிறார்கள். உற்பத்தி செலவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விவ சாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த  மானியங்கள் குறைப்பு  ஆகியவற்றால் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். கிராமப்புற பகுதிக்கு நீங்கள் சென்றால் அதிர்ச்சியடைவீர்கள். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் சிறிய செய்தியைப் படித்தேன். 5வயதுக்குட்பட்ட குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த செய்திதான் அது. அதுகுறித்து விவரங்களை சேகரித்தபோது  அம்மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட 21 ஆயிரம் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் உயிரிழந்த தகவல் கிடைத்தது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நிலைமை இதை விட மோசம்.

டிஜிட்டல் இந்தியா பற்றி ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டிருக் கிறார்கள். குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க வில்லை. பொதுவிநியோக முறை மாறி அந்த இடத்தில் இலக்கு நோக்கிய விநியோக முறை வந்து விட்டது. இதன்  மூலம் பெரும்பாலான மக்கள் பொதுவிநியோக முறையி லிருந்து விலக்கிவைக்கப்பட்டனர். இந்த நிலைமைகள் தான் விவசாயிகளைப் போராட்டத்திற்குத் தள்ளுகிறது. நாசிக் நகரிலிருந்து மும்பை நகருக்கு அகில இந்திய விவ சாயிகள் சங்கம் நடத்திய மாபெரும் நீண்ட பயணத்தின் போது பட்டினி நடைபயணம் குறித்து பேசினேன். கேரளா வின் மலபாரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது, மலபாரில் இருந்து மதராஸ் மாகாண தலைநகரான சென்னைக்கு அந்த காலத்திலேயே மறைந்த மாபெரும் தலைவர் ஏ.கே.கோபாலன் பட்டினி பயணம் நடத்தியிருக்கிறார்.இந்த நிலைதான் தற்போது மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவுகிறது.

இதுமட்டுமல்ல, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயி களின் நிலம் சிறப்புப்பொருளாதார மண்டலத்திற்காகக் கைப்பற்றப்படுகிறது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தலைநகர் அமராவதியை நிறுவ கிருஷ்ணா நதியின் கரையில் பல்வேறு பயிர்கள் சாகுபடியாகும் லட்சக்கணக்கான ஏக்கர் வளமான  நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மசூலிபட்டினம் துறைமுகத்திற்காக இதே போல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு நிலங்களைக் குவித்து ஊக வாணிபம் மூலமாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தரகர்களும் கடந்த ஐந்தாண்டுகளில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளனர். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சி மாறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னரும் நில குவியல் தொடர்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது கூட காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், “  பாஜக அரசு துவக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள், நிலம் கையகப்படுத்தும் பணி ஆகியவற்றை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை விட வேகமாகச் செயல்படுத்துவோம்’’ என்று  கூறியிருக்கிறது. எனவே நமது போராட்டங்கள் நிற்கப்போவதில்லை. அருகில் உள்ள கர்நாடகாவில் 30 லட்சம் மக்கள் தங்களது நிலத்தில் இருந்து எந்த நேரமும் வெளியேற்றப்படும் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் சாகுபடி செய்யும் நிலங்களைத் தொழிற்சாலைகளுக்காகக் கையகப்படுத்த அரசு முயற்சிக்கிறது.

இந்த நிலையில் இருந்து விவசாயிகளை மீட்டெடுப்பது மிகவும் அவசியம். அதைத்தான் இந்தநூலில் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயாவும் ஆராய்ச்சி மாணவர்களும் குறிப்பிட்டுள்ளனர். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தவேண்டும், அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகளை அளித்துள்ளனர். ஆனால் மத்திய பாஜக அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற பெயரால் ரூ.6 ஆயிரம் வழங்குகிறது.  மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேச மாநில விவசாயிகள் அந்த நிதியின் 2வது தவணையைப் பெற்றனர். அரசு அறிவித்த கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கிடைத்தாலே  நெல் விளைவிக்கும் விவசாயி தற்போது பெறும் கொள்முதல் விலையைக் காட்டிலும் ஒரு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் அதிகமாகப் பெறுவார். ஆனால் அரசோ ஆண்டுக்கு வெறும் ரூ.6ஆயிரம் வழங்கி அவர்களை ஏமாற்றுகிறது. கேரளாவில் எனது ஊரில் கிராமப் பஞ்சாயத்தே நெல் விளைவிக்கும் விவசாயிக்கு ஊக்கத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்குகிறது. மாநில அரசு அல்ல. எனவே விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசை நாம் அம்பலப்படுத்துவது அவசியம்.

தொகுப்பு: அ.விஜயகுமார்

;