கொரோனாவை ஒழித்து மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திட மறுப்பதா?
நாட்டில் மூன்று வார சமூக முடக்கத்திற்குப்பின் பிரதமர் மோடி அளித்திட்ட உரையைக் கேட்பதற்காக மக்கள் வெகு ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்த மூன்று வாரங்களும், கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நம் போராட்டத்தை வலுப்படுத்தவதற்கும், கோடானுகோடி மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் பிழைத்திருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கும் உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து, எண்ணற்ற அனுபவங்களை இந்த மூன்று வாரங்களும் நமக்கு அளித்திருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியோ தன்னுடைய உரையின்போது, மிகவும் முக்கியமான இவ்விரு பிரச்சனைகள் குறித்து உருப்படியாக எதுவுமே கூறவில்லை.
பிரதமர், சமூக முடக்கக் காலத்தை மே 3 வரை நீட்டித்து, அதாவது மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து, அறிவித்தார். ஏப்ரல் 15 அன்று சில வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அவர், ஏப்ரல் 20 அன்று, தொற்று மிகவும் அதிகமாகப் பரவியிருக்கின்ற இடங்கள் அடையாளங் காணப்பட்டு, மறு ஆய்வு நடத்தப்படும் என்றும் கூறினார். இதர பகுதிகளில் சற்றுத் தளர்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்தத் தளர்வுகள் என்ன என்பவை குறித்து எவருக்கும் தெரியாது. அவர்கள் சில பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிப்பார்களா? எனவே, மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரங்களுக்காக ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா? என்பது குறித்தெல்லாம் எவருக்கும் தெரியாது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துக!
இந்தப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் தேவையான இரு முக்கிய நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் எதுவுமே கூறாது கிட்டத்தட்ட மவுனம் கடைப்பிடித்தார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் பர்சனல் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE-Personal Protective Equipment) போதுமான அளவிற்கு அளிக்கப்படும் என்றோ மற்றும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் சோதனை மேற்கொள்ளப்படும் என்றோ அவர் எதுவும் கூறவில்லை.
மாறாக, சமூக முடக்கத்தை முன்கூட்டியே அறிவித்ததால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்தது என்று உரிமை கொண்டாடினார். இந்தியாவில் நான்கு மணி நேர அறிவிப்பு கொடுத்து, நிர்வாகமோ, குறிப்பாக மாநில அரசாங்கங்களோ, மக்களோ தயாரிப்பு எதுவும் மேற்கொள்ளாத நிலையில், திடீரென்று சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக முதல் நபர் குறித்த தகவல் இந்தியாவில் ஜனவரி 30 அன்றே வெளியானது. அதன்பின்னர், சமூக முடக்கம் அறிவிக்கப்படும் வரையிலான ஏழு வார காலத்தில் இது தொடர்பாக உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது, மத்தியப் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது, மார்ச் 22 அன்று பிரதமர் மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு முதல்நாள் பாஜக மாநில அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டது போன்ற இயல்பு நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்தன. மக்கள் அதிகமாகத் திரள்வதற்கு எதிராக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், இவற்றை மீறும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த மேலே கூறிய நடவடிக்கைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை.
சமூக முடக்கம் சம்பந்தமாக, உலகில் பல நாடுகள் மிகவும் அவசரகதியில் செயல்பட்டன. சீனா, ஜனவரி 23 அன்றே வுஹானில் சமூக முடக்கத்தைக் கொண்டு வந்தது. மார்ச் 10 அன்று ஒட்டுமொத்த இத்தாலியும் சமூக முடக்கத்திற்குச் சென்றது. அமெரிக்கா, மார்ச் 13 அன்று தேசிய அவசரநிலை பிறப்பித்தது. இதே போன்றே ஸ்பெயின் மார்ச் 14, பிரான்ஸ் மார்ச் 17 மற்றும் கிரேட் பிரிட்டன் மார்ச் 23 அன்று அவசர நிலை பிறப்பித்தன. எனவே, பிரதமர், இந்தியாவில் முன்னதாகவே சமூக முடக்கம் அறிவித்தோம் என்று கூறுவது முற்றிலும் சரியன்று.
கேரளாவிடமிருந்து பாடம் கற்க மறுக்கும் மத்திய அரசு
கேரளாவில், முன்பு நிபா தொற்று (Nipah pandemic) பரவிய சமயத்தில் அதனை வெற்றிகரமான முறையில் கையாண்டு, கட்டுப்படுத்தி, ஒழித்துக்கட்டிய அனுபவத்தைப் பெற்றிருந்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், (இதற்காக அது உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்தும், சர்வதேச சமூகத்தினரிடமிருந்தும் பாராட்டுதல்களைப் பெற்றிருந்தது) கொரோனா வைரஸ் தொற்று குறித்து கேள்விப்பட்டவுடனேயே, சுறுசுறுப்பாகச் செயல்படத் துவங்கியது. உலக நாடுகளிடமிருந்து அறிக்கைகளைப் பெற்று, கேரளாவில் ஜனவரி 30 அன்று முதல் நபரைக் கண்டறிவதற்கு முன்பாகவே, இதற்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது.
இதற்கு முக்கிய காரணம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சீனா உள்பட வெளிநாடுகளில் கல்வி கற்றுக்கொண்டும், வேலை செய்துகொண்டும் இருந்து வருகிறார்கள். அவர்கள் வீடு திரும்பும்போது, கொரோனா வைரஸ் தொற்றைச் சுமந்துகொண்டு வரக்கூடிய ஆபத்து உண்டு. எனவேதான், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தால் இதனைக் கண்டறிவதற்காக, கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்கப்பட்டு, தொற்று தொடர்பான இயக்கத்தைக் கண்காணித்தனர். முழுமையான முறையில் நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, இந்தியாவில் கேரள மாநிலம் மட்டும்தான் கொரோனா வைரஸ் தொற்றை அநேகமாக ஒழித்துக்கட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த அனைத்துப் பயணிகளும் மிகவும் முன்னதாகவே பரிசோதனை செய்வது என்பது தொடங்கிவிட்டது என்று பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால், அது உண்மையெனில், பிப்ரவரியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் வந்த இத்தாலியப் பயணிகளும் மற்றவர்களுடன் இணைந்து இந்தியாவிற்குள் வந்தது எப்படி என்பது விந்தையாக இருக்கிறது. இவர்கள் பின்னர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது இவர்களில் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக (பாசிடிவ்) தெரியவந்தது. இவர்களில் பலர் பின்னர் குணப்படுத்தப் பட்டுவிட்டார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த பிரபலப் பாடகி ஒருவர், விமான நிலையத்தில், எவ்வித சோதனையும் செய்யப்படாது வெளிவந்துவிட்டார். ஆனால் இவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டபோது இவர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார் (பாசிடிவ்) என்று தெரியவந்தது. இந்த நபர் இத்தொற்றுடன் பாஜகவின் பெரும் புள்ளிகளுடன் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். இதனால் இந்த விருந்தில் கலந்து கொண்ட அனைவருமே பின்னர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதாயிற்று. இதுபோன்று எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் போதுமான அளவிற்குச் சோதனைகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார். இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை அடையாளம் காண்பதற்கு, பரிசோதனைகள் செய்யப்படுவது மிகவும் முக்கியமாகும். அப்போதுதான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களால் மற்றவர்களுக்கு இத்தொற்றுக் கடத்தப்படாத நிலையை ஏற்படுத்த முடியும். ஆனால் நம் நாட்டில் இது முழுமையாக மேற்கொள்ளப்படாததால், நமக்கு இவ்வாறு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து முழுத் தகவல்கள் கிடைக்கவில்லை. இது மிகவும் ஆபத்தானதாகும். இதன் காரணமாக, எங்கே தொற்று அதிகமாகப் பரவி இருக்கிறது என்பதும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காண்பதும் இயலாததாகிவிடும்.
பிரதமர் கூறியிருப்பதுபோன்று இந்தியாவில் போதமான அளவிற்கு பரிசோதனைகள் செய்திருக்கிறோமா? உலகில் உள்ள நாடுகளில் இந்தியாவில்தான் மிகவும் குறைவான அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம். தென் கொரியாவுடன் ஒப்பிடுகையில், இந்தியா அதனைவிட 241 தடவைகள் கீழே இருக்கிறது. ஏப்ரல் 9 வரையிலும், இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டது தொடர்பான பதிவு விகிதம் என்பது ஆயிரத்திற்கு 0.092 ஆகும். ஆனால் இதே காலத்தில் ஜெர்மனியில் இது 15.96, இத்தாலியில் 14.43, ஆஸ்திரேலியாவில் 12.99, டென்மார்க்சில் 10.73, கனடாவில் 9.99 என்றிருக்கிறது. நாம் நம் பரிசோதனை விகிதத்தைக் கணிசமான அளவிற்கு அதிகப்படுத்தாவிட்டால், இத்தொற்றை எதிர்கொண்டு முறியடித்திடும் வல்லமை நமக்கு வளராது.
மக்கள் நலன்
அதிகாரபூர்வ தரவுகளின்படி, நம் நாட்டில் 11,479 பேர் இத்தொற்றால் ‘பாசிடிவ்’ எனக் கருதப்பட்டிருக்கிறார்கள். இத்தொற்றின் விளைவாக 390 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும் பலர், கொரோனா தொற்று அல்லாது, பசி-பஞ்சம்-பட்டினி காரணமாகவும், தங்குமிடம் இல்லாமலும், முழுச் சோர்வின் காரணமாகவும் இதுபோன்று வேறு பல காரணங்களாலும் 200க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இந்தியாவிற்கு இவ்வாறான இறப்பு விகிதம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். உண்மையில், இயற்கைக்கு மாறான இறப்பு எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் நாட்டில் பட்டினிச் சாவுகள் இல்லை என்று சொல்லப்படுவதை நாம் உத்தரவாதப்படுத்திட வேண்டும். எனவேதான், வருமானவரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் அரசாங்கம் 7,500 ரூபாய் கருணைத் தொகையாக உடனடியாக ரொக்க மாற்றல் (cash transfer) மூலம் அளித்திட வேண்டும் என்றும், தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் பொது விநியோக முறையில் உணவு தானியங்களை அளித்திட வேண்டும் என்றும் இவை பட்டினிச் சாவுகளைத் தடுத்திட மிகவும் முக்கியம் என்றும் வலியுறுத்துகிறோம். மத்திய அரசாங்கம், தன் செலவினத்தைக் கணிசமாக அதிகப்படுத்திட வேண்டும்.
மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகப்படுத்துக!
மத்திய அரசு அறிவித்திருக்கிற 1.7 லட்சம் கோடி நிதித் தொகுப்பு மிகவும் அற்பம். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.8 சதவீதம் மட்டுமேயாகும். மலேசியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் நிதித் தூண்டுதல் தொகுப்பு (fiscal stimulus package) அறிவித்திருக்கிறது. அமெரிக்கா 9 சதவீதத்திற்கு அதிகமாகவும், ஜெர்மனி 8 சதவீதத்திற்கு அதிகமாகவும், இத்தாலி 5 சதவீதத்திற்கு அதிகமாகவும் அதே போன்றே இதர நாடுகளும் அறிவித்திருக்கின்றன. இவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை, மிகவும் மோசமாகும். தன்னுடைய சொந்த மக்களைப் பாதுகாத்திடும் முயற்சிகளில் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிரிமினலைப் போலவே நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் நிதித் தூண்டுதல் தொகுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் அல்லது அதற்கும் மேல் அதிகரித்திட வேண்டும்.
மாநிலங்கள் இத்தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கின்றன. அவர்களின் முயற்சிகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வமான நிதி நிலுவைத் தொகைகளைக்கூட அளிக்காமல் மறுத்துக்கொண்டிருக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. மாநில அரசாங்கங்களிடம் எந்த அளவிற்கு அதிக அளவில் பணம் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவை இந்தத் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வலுவாகச் செய்திட முடியும். பிரதமர் தன்னுடைய பெயரிலான நிதியத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் திரட்டி இருக்கிறார், திரட்டிக் கொண்டும் இருக்கிறார். இத்தொகைகள் மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் தற்போதுள்ள கடன் வரம்பு (borrow ceiling)க்கும் மேலாக கடன் வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதித்திட வேண்டும். அதன்மூலம் இப்போது ஏற்பட்டுள்ள சுகாதார அவசரநிலையை மாநில அரசாங்கங்கள் எதிர்கொள்வதற்கு மத்திய அரசு உதவிட வேண்டும்.
வேலை இழப்பு
பிரதமர் மார்ச் 24 அன்று உரையாற்றுகையில், எந்தத் தொழிலாளரும் வேலையிலிருந்து நீக்கப்படக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்போது மீண்டும் ஒருமுறை அதே வேண்டுகோளை வேளையளிப்பவர்களுக்கு விடுத்திருக்கிறார். இவ்வாறு வெறும் வேண்டுகோள்கள் வேலை செய்யாது, வேலை செய்திடவும் இல்லை. ஏற்கனவே ஆயிரக்கணக்கான நிரந்தர தொழிலாளர்களே வேலைகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்கூலித் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள் அனைவரும் ஏற்கனவே தங்கள் வேலைகளை இழந்து விட்டார்கள். இந்த சமூக முடக்கக் காலத்தில் மிகப்பெரிய அளவில் ஊதிய வெட்டு அமலுக்கு வந்திருக்கிறது. உலகில் பல நாடுகள், தங்கள் நாட்டுத் தொழிலாளர்களின் வேலை மற்றும் ஊதியத்தைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களுக்கு ஊதியம் குறைக்கப்படாது வழங்கப்படுவதற்காகவும், தங்கள் நாடுகளிலுள்ள வேலையளிப்பவர்களிடம் 80 சதவீத அளவிற்கு நிதித்தொகுப்பு அளித்திருக்கின்றன. இந்திய அரசாங்கம் இதுபோன்று எதையும் இதுவரை செய்திடவில்லை. இதனை உடனடியாகச் செய்திட வேண்டும். இல்லையேல், மக்களின் துன்பதுயரங்கள் பல்கிப் பெருகிடும்.
கிராமப்புற இந்தியா
இது அறுவடைக் காலம். அரசாங்கம், விளைந்துள்ள பயிர்களை, விவசாயிகளிடமிருந்து அதன் உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை நிர்ணயித்து, கட்டாயக் கொள்முதல் செய்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (MGNREGA) கீழ் வேலை அளிக்கப்படவில்லை என்பது சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் அவர்கள் வேலை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவர்களின் ஊதியங்கள் வழங்கப்பட வேண்டும்.
பிரதமர், ஏப்ரல் 20 அன்று நிலைமை மறு ஆய்வு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் சமூக முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம். அந்த சமயத்தில், நாட்டின் பல பகுதிகளில் போதுமான உணவு இன்றியோ அல்லது தங்குவதற்கு உரிய வசதிகள் இன்றியோ அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்பக்கூடிய விதத்தில் சிறப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும். கேரளா போன்ற சில மாநிலங்களைத் தவிர (அங்கே உள்ள மாநில அரசாங்கங்கள் அவர்களை மக்களின் முழு ஆதரவுடன் நன்கு கவனித்து வருகின்றன) மற்ற மாநிலங்களில் மிகவும் வேதனையான நிலைமைகளில் உழன்று வருகின்றனர். இந்தியா, வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களில் பலரை மிகவும் சரியான முறையில், இந்தியாவிற்குக் கொண்டுவந்தது. அதேபோன்று இந்தியாவிலேயே இருக்கின்ற நம் சொந்தச் சகோதரர்களை சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு நிச்சயமாக அனுப்பி வைத்திட முடியும். கொரோனா வைரஸ் தொற்று சமூக ரீதியாகப் பரவும் ஆபத்தைத் தடுப்பதற்கு இது மிகவும் அவசியமாகும்.
நாம் எழுப்பியிருக்கின்ற பிரச்சனைகளை எல்லாம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று பிரதமரிடம் நாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும், நம் நாட்டு மக்கள் பிழைத்திருப்பதற்கும், தங்கள் வாழ்வாதாரங்களுக்கும் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கும் இவை மிகவும் முக்கியமானவைகளாகும்.
இறுதியாக, ஒன்றுபட்ட இந்தியா மற்றும் ஒன்றுபட்ட மக்களால் மட்டுமே இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியைப் பெற முடியும் என்று அடிக்கோடிட்டுக் கூற வேண்டியது அவசியமாகும். இவ்வளவு கொடூரமான தொற்றுக்கு மத்தியிலும் கூட, சமூக ரீதியாக அல்லது மதவெறி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது என்பது இதற்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்திடவும், அரித்து வீழ்த்திடவுமே இட்டுச் செல்லும். பிரதமர் நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்துகையில், சமூக பகிஷ்காரங்கள், மதவெறி அடிப்படையில் தனிமைப்படுத்தல் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறி வைத்துத் தாக்குதல் முதலானவை அதிகரித்து வரும் போக்கினைக் கண்டித்திடவோ அல்லது கண்டனம் தெரிவித்திடவோ மறந்தது மட்டுமல்ல, அவை குறித்து எதுவும் குறிப்பிடவும் இல்லை. உண்மையில் இது மிகவும் துரதிர்ஷ்டமாகும். கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மத்தியில் முழு ஒற்றுமை ஏற்படுவதே நம்முடைய பிரம்மாஸ்திரமாகும்.
பிரதமர் தன் உரையின்போது ஏழு அம்சத் திட்டத்தை நாம் அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவற்றை அவர் சப்தபதி என்று சமஸ்கிருத வார்த்தையால் அழைத்துள்ளார். இதேபோன்று இந்த அரசாங்கம் நாம் மேலே கூறிய பிரச்சனைகளின் அடிப்படையில் அமல்படுத்த வேண்டிய கோரிக்கை சாசனம் ஒன்றை அமல்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.
உண்மையில், மத்திய அரசாங்கம், குறைந்தபட்சம், நவபதி என்கிற கீழே குறிப்பிட்டு ஒன்பது அம்சங்களை போர்க்கால அடிப்படையில் அமல்படுத்திட முன்வர வேண்டும்.
1. தேவையான அளவிற்குப் பர்சனல் பாதுகாப்பு உபகரணங்களை (PPEs) கொள்முதல் செய்து, அளித்திட வேண்டும்.
2. பரிசோனைகளை விரைவாக அதிகரித்திட வேண்டும்
3. வருமான வரி செலுத்தாத அனைவருக்கும் உடனடியாக 7,500 ரூபாய் ரொக்க மாற்றல் செய்திட வேண்டும்
4. தேவைப்படும் அனைவருக்கும் இலவசமாக உணவு தானியங்களை விநியோகித்திட வேண்டும்.
5. மாநிலங்களுக்குத் தற்போது அளித்திடும் நிதித் தூண்டுதல் தொகுப்பினை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதுள்ள 0.8 சதவீதத்திலிருந்து குறைந்தபட்சம் 5 சதவீதமாக உயர்த்திடுக.
6. மாநில அரசாங்கங்களுக்குத் தாராளமாக நிதி அளித்து, ஆதரித்திட வேண்டும்.
7. அறுவடையாகியிருக்கும் பயிர்களை, அவற்றின் உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்து, அறுவடையான அனைத்துப் பயிர்களையும் கொள்முதல் செய்திட வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும், அவர்களுக்கு வேலை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஊதியங்கள் அளித்திட வேண்டும்.
8. ஊதிய இழப்புகளிலிருந்தும், ஊதிய வெட்டுகளிலிருந்தும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, வேலையளிப்பவர்களுக்கு நிதி அளித்து உதவிட வேண்டும்.
9. புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களை அவர்களின் இல்லங்களுக்குச் சென்றிட ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி