tamilnadu

img

எரிகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம் - ஈரோடு க.ராஜ்குமார்

மத்திய அரசு ஏப்ரல் 17 ஆம் தேதியன்று மின்சாரச் சட்டம் 2003-ஐ திருத்து வதற்கான வரைவுச் சட்ட முன்மொழிவு களை வெளியிட்டு அதன் மீதான கருத்துக்களை தெரிவிக்க 21 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது.  முன்னதாக 2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்வ தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பலத்த எதிர்ப்பு கள் கிளம்பியதன் காரணமாக அது கைவிடப்பட்டது. இன்று நிலவும் கொரோனா விஷக் கிருமி பரவலின் அசாதாரண நிலையை பயன்படுத்தி ஆரவாரம் இல்லாமல் மின்சார திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது.  

 அதன் தொடர்ச்சியாகவே நிதியமைச்சர், மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி உதவி பெற இலவச மின்சார திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  நுகர்வோருக்கு மின் மானியத்தை நேரிடையாக கொடுக்க வேண்டும் என்றும், 2021 மார்ச்சுக்குள் இலவச மின் திட்டங்களை மாநிலங்கள் கைவிட வேண்டும் என்றும் 2020 டிசம்பர்க்குள் மாநிலத்தில் ஏதாவது ஒரு பகுதியில் நேரடி மானியத்திட்டத்தை அமல்படுத்தி காட்ட வேண்டும் என்றும் மத்திய அரசு மாநிலங்களை நிர்பந்தித்து வருகிறது.

புதுச்சேரி உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்களில் மின் விநியோக நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான அறிவிப்பையும் சேர்த்து மத்திய அரசு வெளியிட்டுள்ளதின் மூலம் அதன்  செயல் திட்டம் இறுதி யாக்கப்பட்டு விட்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்,  எரிசக்தி துறை,  பொதுப்பட்டியலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மேற்கொண்டுள்ள மின் திருத்தச் சட்டம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கும் வகையில் அரசியல் சட்டத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

 மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களில், மின் சட்டம் பிரிவு 45 மற்றும் 65ஆவது திருத்தங்கள் மிக முக்கியமானவை. சட்டப்பிரிவு 45 மின் கட்டணங்களை மின்வாரியங்கள் மேற்கொள்ள வழிவகுக்கிறது. சட்டப்பிரிவு 65 மாநில அரசுகள் மின் கட்டணச் சலுகை அளிக்க வழி வகுக்கிறது. இவ்விரண்டிலும் மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் தற்போது உள்ள இலவச மின்சாரத் திட்டத்தை சீர்குலைக்கும் என்பது நிச்சயம்.  அது மட்டுமல்ல மாநில அரசுகள் மானியம் வழங்க உச்சவரம்பும் விதிக்கப்படும். படிப்படியாக மூன்று ஆண்டு களில் இலவச திட்டம் முற்றிலும் நிறுத்தப்படும். மேலும் வீட்டு  உபயோகத்திற்கான கட்டணமும், வணிக உபயோ கத்திற்கான கட்டணமும் இனி ஒரே மாதிரி இருக்கும். இத னால் வீடுகளுக்கான மின் கட்டணம் உயரும் நிலையும்  உள்ளது. 

தமிழ்நாட்டில் தற்போது  அனைத்து மாவட்டங்களிலும் மின்வாரியம் மூலமே மின் விநியோகம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் புதிய சட்டத்தினால், ஒவ்வொரு மாவட்டத்தி லும்  மின் விநியோகம் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். இதனால் மின் கட்டணங்கள் உயரும் அபாயம் உள்ளது. மின்வாரியத்திற்கும், மின் உற்பத்தி செய்யும் நிறு வனங்களுக்கும்  மின் கொள்முதல் விலை தொடர்பான முறையீடுகளை மேற்கொள்ள தற்போது உள்ள நடைமுறைகள் மாற்றப்பட்டு புதிய செயலாக்க ஆணையம் ஒன்றை நிறுவிட புதிய சட்டம் வழிவகுக்கிறது. இது மின் உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக முடியும். மின் கொள்முதல் விலை ரூ.8 லிருந்து ரூ.10 ஆக உயரும் ஆபத்தும் உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது இறுதிக்காலம் வரை மத்திய அரசின் புதிய மின்திட்டமான உதய் மின் திட்டத்தில் தமிழகத்தை இணைக்க சம்மதிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு அத்திட்டத்தால் பயன் ஏதும் இல்லை என்று விமர்சித்தார்.  ஆனால் அவரது பெயரில் அரசு நடத்து வதாக கூறும் இன்றைய ஆட்சியாளர்கள் அவர் மறைந்த சில நாட்களிலேயே உதய் திட்டத்தில் தமிழகத்தை இணைத்து கையொப்பமிட்டனர்; தமிழ்நாட்டு மக்களின் நலனை மத்திய அரசிற்கு அடகு வைத்துவிட்டனர். 

மத்திய அரசு தற்போது மாநில அரசுகளை இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய வற்புறுத்தி வரு கிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் நிறைவேறு மானால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குடிசைகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்,  ஒவ்வொரு வீட்டு இணைப்பிற்கும் முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும் மின்சாரம், நெசவாளர்கள் உள்ளிட்ட  குறு தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்  ஆகியவை ரத்து செய்யப்படும். இவர்களுக்கு மானியத்தி னை வழங்க மாநில அரசுகள் முடிவு செய்தால் நேரடியாக வங்கி மூலம் வழங்கலாம் என மத்திய சட்டம் வழிகாட்டு கிறது. இது நடை முறை சாத்தியமற்றது.  

மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய மின் சட்டம் அமல்படுத்தப்படும் என்றால் தமிழ்நாட்டில் தற்போது    விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின் திட்டம் கைவிடப்படும் என்பதில் சந்தேகமில்லை. நுகர்வோருக்கு மாநில அரசு மானியத்தை அவர்களின்  வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்று சொல்லப்பட்டாலும் அது சாத்திய மாகாது. ஏற்கெனவே 2003 ல் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியை தழுவியது.   அப்போது 13 லட்சம்  விவசாய மின் இணைப்பினை வைத்திருப்போர்களுக்கு  மணியார்டர் மூலம் மின் மானி யம் பணம் அனுப்பப்பட்டது. அவற்றில் பெரும்பான்மை யானவை திரும்பப்  பெறப்பட்டன. ஏனென்றால் மின் இணைப்புகள் முந்தைய தலை முறையினரின் பெயரில் இருப்பதாலும், ஒரு மின் இணைப்பில் பங்குதாரர் பலர் பாசனம் பெறுவதாலும்   பணத்தை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு அத்திட்டம் கைவிடப்பட்டது. அதுபோலவே வீட்டு உரிமையாளர் பெயரில் வங்கிக் கணக்கில் மானியம் கொடுத்தால் அது நுகர்வோருக்கு சென்றடைவதில் சிக்கல் உள்ளது.

மானியத்தில் மட்டும் இப்பிரச்சனை என்றால், புதி யச்சட்டத்தில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பது,  தனியாரி டம் மின்சாரத்தை பெறுவது , தனியார் மூலம் விநியோகம் செய்வது போன்றவற்றில் பல குளறுபடிகள் இருந்த காரணத்தினாலேயே கடந்த இருமுறை இந்த திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது பல மாநில அரசு களாலும் மின் துறை வல்லுநர்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. தற்போது நேரம் பார்த்து மத்திய அரசு மீண்டும் இந்த சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது.

 தமிழ்நாட்டில் தற்போது  21 லட்சத்திற்கும் மேலான விவசாயத்திற்கான மின் இணைப்புகள் உள்ளன.  மேலும் 2 கோடிக்கு மேல் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன.  இதில் 70 இலட்சம் மின் இணைப்புகள் 100 யூனிட்க ளுக்கு குறைவாக மின்சாரம் உபயோகிப்பதால் மின் கட்டணம் செலுத்துவதில்லை. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட  வணிகம் சார்ந்த மின் இணைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள மின்திருத்த சட்டத்தினால் பாதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் எப்படி கிடைத்தது என்பதற்கு ஒரு வலுவான பின்னணி உள்ளது.  

தமிழ்நாட்டில் ஒரு பைசா மின் கட்டணம் உயர்த்தியதை எதிர்த்து 1970-ல் விவசாயிகள் நடத்திய போராட்டம் மாநில அரசால் கடுமையாக அடக்கப்பட்டது.  கோவை மாவட்டம் பெருமாநல்லூர் என்ற கிராமத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தில் மூன்று விவசாயிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் சேலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5  விவசாயிகள் உயிரிழந்தனர். 1973 ஆம் ஆண்டு கோவை உள்பட மாநிலம் முழுவதும்  ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள்  முன் திரட்டப்பட்டு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இது உலக நாடுகளின்  கவனத்தை ஈர்த்தது. இந்திய கிராமங்களின் ‘மர பீரங்கிகள்’ என மாட்டு வண்டி போராட்டத்தை பாராட்டி வெளிநாட்டு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டன.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட 30,000 விவசாயிகள் கைது செய்யப்பட்டு மாநிலம் முழுவதுமுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர். மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் விடுதலை என அன்றைய அரசு அடக்குமுறையை ஏவி யது. அதற்கு பணியாத 20 விவசாயிகள் நோய்வாய்பட்டு மரணமடைந்தனர்.  1974 ஆம் ஆண்டு மதுரை திரு நெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களில் 10 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1978ல் திண்டுக்கல்லில் நடை பெற்ற விவசாயிகள் போராட்டத்தில் 5 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1970 - லிருந்து  தமிழ்நாட்டில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில்   சுமார் 50-க்கும் மேற்பட்ட  விவசாயிகள்  உயிர்த் தியாகம் செய்தனர்.  அதன் விளைவாக 1990 ல்  தமிழ்நாட்டில் தமிழக அரசு விவசாயி களுக்கு இலவச மின்சார இணைப்பை தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

மாநில அரசு இதை திரும்பப் பெற  அவ்வப்போது முயற்சித்தாலும், மீட்டர் பொருத்தி சீர்குலைக்க முயற் சித்தாலும், மத்திய அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கினா லும் விவசாயிகள் போராடி இலவச மின்சாரத் திட்டத்தை பாதுகாத்து வருகின்றனர். இன்று மத்திய அரசு மேற் கொண்டிருக்கும் இந்த சீர்குலைவு நடவடிக்கையையும் விவசாயிகள் எதிர்கொண்டு போராடி வெற்றிபெறுவர். சிறு தொழில்களை பாதுகாக்க விவசாயிகளுடன் தொழி லாளர்களும் இணைந்து  மத்திய அரசின் தனியார்மய மின் கொள்கையை முறியடிப்பர்.