tamilnadu

img

வேலையின்மைக்கு தீர்வு இல்லையா?

அதிகரித்து வரும் வேலையின்மையைத் தீர்க்க நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தைசெயல்படுத்த வேண்டிய தேவை இந்தியாவில் எழுந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தைப்போல் நகர்புறங்களுக்கும் வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் தயாரித்துள்ள “இந்தியாவின் வேலை செய்பவர்களின் நிலை 2019” அறிக்கை, சிறிய மற்றும் நடுத்தர நகரங்களை பலப்படுத்த தேசிய நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் உள்ள முரண்பாடுகளைப்பற்றியும் இந்த அறிக்கை பேசுகிறது. நகர்புறங்களில் வேலையின்மை 7.8 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் வேலையின்மை 5.3 சதவீதமாகவும் உள்ளது. தேசிய நகர்ப்புற வேலை உறுதி திட்டம் முழுமையாக செயல்பட மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம் போல் ஒரு புதிய சட்டத்தை இயற்றிட வேண்டும். தேசியமாதிரி சர்வே அமைப்பு நடத்திய தொழிலாளர்கள் நிலை பற்றிய தொடர்ச்சியான சர்வே 2017-18 (பி.எல்.எப்.எஸ்) முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில் அதன் முக்கிய அம்சங்கள் சமீபத்தில் வெளியில்கசிந்துள்ளன. அதன்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு 6.1 சதவீதத்தை எட்டியுள்ளது. படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை 20 சதவீதத்தை எட்டியுள்ளது. 

நகர்ப்புற மக்கள் தொகை

இந்தியாவின் மக்கள் தொகை 2018 ல் 135 கோடியை எட்டியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கல் விகிதம் 35 சதவீதமாக உள்ளது. இதனடிப்படையில் நகர்ப்புறமக்கள் தொகை 47.4 கோடியாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 50 சதவீதத்தினர், 10 லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வசிப்பதாக அனுமானித்தால், அதன்படி, சிறு நகரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 23.7 கோடியாக இருக்கும். ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்ற அடிப்படையில் மொத்தம் 5.9 கோடி குடும்பங்கள் உள்ளன என்று இந்த அறிக்கை கூறுகிறது.ஒரு குடும்பத்தில் ஒருவர் வேலைக்குச் செல்பவராக இருந்தால் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 5.9 கோடியாக இருக்கும். தேசிய நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தில் தினமும் ரூ.500 கூலியில் 100 நாட்களுக்கு வேலைஉறுதி செய்யலாம்; மேலும் படித்த இளைஞர்களுக்கு மாதம்ரூ.13,000 உதவித் தொகை அளித்து 150 நாட்களுக்கு தொடர்ச்சியாக தொழிற்பயிற்சி அளிக்கலாம் என அந்த அறிக்கை ஒரு திட்டத்தையே முன்வைக்கிறது.

இந்த அறிக்கை தொழிலாளர்களை இரண்டு பகுதியாக பிரிக்கிறது. முதல் பகுதியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் மட்டும் உள்ளனர். இவர்கள் பல்வகைத் திறன் கொண்டவர்கள்; கட்டுமானத் தொழில், பெயிண்டர்கள், எலக்ட்ரீசியன் போன்ற வேலைகளை செய்பவர்கள்.  இரண்டாம் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்கள், தொழிற்பயிற்சி டிப்ளமோ, கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ் மற்றும் ஆங்கில பயிற்சி பெற்றவர்கள்.இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் பின்னணிகள், தினசரி செய்த வேலை, வங்கி கணக்கு விவரங்கள், சம்பள பட்டுவாடா விவரங்கள் மற்றும் இதர விவரங்களை எலக்ட்ரானிக் ஜாப் கார்டு முறை மூலம் ஒழுங்கு செய்யப்படலாம்; இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தினங்களுக்கு கட்டாயமாக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு அதற்குரிய கூலி வழங்கப்படலாம் என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக அறிக்கை முன்மொழிகிறது.தேவைகளுக்கு ஏற்ப பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்கள் மூலம் பயன்தரும் பணிகள் மேற்கொள்ளப்படும். (இதர நலத்திட்டங்களின் பயனாளிகளோடுஒப்பிட்டால்) இதன்மூலம் அரசு வழங்கும் சேவைகளின் தரம் உயரும். இந்திய நகரங்களின் கட்டுமானங்கள்பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படும். பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் உள் நாட்டில் தேவைகள் அதிகரிக்கும். உள்ளூர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும். தனியார் துறைக்கு தேவைப்படும் தொழில் திறமைகளை வளர்த்தெடுக்கும். இதன்மூலம் திறன் மிகுந்த தொழிலாளர்களின் பற்றாக்குறை தீரும் என்று இன்னும் விரிவாக அந்த அறிக்கை கூறுகிறது. 

திரிபுரா ஒரு முன்னோடி
இப்படி ஒரு தீர்வை, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஒரு ஆய்வுப் பரிந்துரை என்ற முறையில் முன்மொழிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமுன்மொழிந்துவிட்டது. திரிபுராவில் மாணிக் சர்க்கார் தலைமையிலான இடது முன்னணி அரசு செயல்படுத்தியும் காட்டியது.தேசிய நகர்ப்புற வேலை உறுதித்திட்டம் என்று மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை போல் ஒரு புதியசட்டத்தை  இயற்றிட வேண்டும்; இதன் மூலம் வேலை உறுதித்திட்டத்திற்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்கும். இந்த திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தை எந்தவகையிலும் பாதிக்காத வகையில் அதற்கு துணையாக செயல்பட்டு நகர்ப்புற வேலையின்மைக்கு தீர்வாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்காவில் கூட

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட புதிய பசுமைத் திட்டங்கள் வேலைஉறுதியளிப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. காலநிலை மாற்றம், பொருளாதார சமமின்மை போன்ற சிக்கல்களைத் தீர்க்க பல அமெரிக்கஜனாதிபதி வேட்பாளர்கள் இத்தகைய திட்டங்களை முன்மொழிந்துள்ளனர். பசுமை வேலை உறுதித்திட்டத்தின் படி வேலை கோருபவர்களுக்கு அமெரிக்காவின் மத்திய அரசு கட்டாயமாக வேலை அளித்து உயிர் வாழத்தேவையான ஊதியத்தை சட்டப்படி வழங்கவேண்டும். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 முதல் 10 சதவீதத்தைஇத்திட்டத்திற்கு செலவு செய்யவேண்டும். திறன் ஒப்பிடுகையில் தேசிய நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தில் இந்திய அரசு இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 1.7 முதல் 2.7 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று கணிக்கப்படுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு அல்லது வேலை இல்லாதவர்கள் அனைவருக்கும் வேலை கொடுப்பதைப் பொறுத்து இந்த விகிதம் முடிவு செய்யப்படும். இந்தியாவின் சிறு நகரங்களில் வேலையில்லாதவர்களின் மொத்த எண்ணிக்கை 3 முதல் 5 கோடி வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

கேரளா வழிகாட்டுகிறது

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு, அய்யன்காளி பெயரில் நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தை 2010ல் துவக்கியதும் குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் நகர்ப்புற குடும்பங்களுக்கு 100 நாட்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. தேசிய நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு நகராட்சி மன்றம் மாநகராட்சி மன்றம் போன்ற அமைப்புகளிடம் இருக்கும். இந்த திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம்நிறைவேற்ற தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக அளிக்கும். சுமார் 4 ஆயிரம் நகர்ப்புறஉள்ளாட்சி மன்றங்கள் மூலம் இந்தியாவின் 50 சதவீதஜனத்தொகையினருக்கு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இது பயனளிக்கும் என்று மேற்கண்ட அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தை தொடர்ந்து நகர்ப்புறங்களுக்கும் அந்த வேலைத்திட்டத்தை விஸ்தரிக்கவேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.இந்நிலையில் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான ஆய்வறிக்கை இந்த கோரிக்கைக்கும் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய, மாநில அரசுகள் இத்தகைய திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் முன்னெடுத்துச் சென்றால் அறிக்கை வெளிப்படுத்திய சில புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வேலையின்மைக்கு தீர்வு காணமுடியும். அதை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி? 

கட்டுரையாளர் :  சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்