tamilnadu

img

இடஒதுக்கீடு எனும் இரும்புச் சுவர்

“SC allows merit to breach quota barrier”  - இப்படியொரு தலைப் போடு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஜூன் 16 அன்று ஒரு செய்தி வெளியிட்டிருக் கிறது. “இட ஒதுக்கீடு தடுப்புவேலியை‘தகுதி’ மீறுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி” என்பது இதன் பொருள். செய்தியின் முதல்வரியும் “Merit breached the ironwall of quota on Monday as theSupreme Court permitted…” (“உச்சநீதிமன்றம் அனுமதித்ததைத் தொடர்ந்து திங்களன்று தகுதி என்பது இடஒதுக்கீடு என்ற இரும்புச் சுவரை மீறியது”) என்று தொடங்கி ஒரு தகவலைச் சொல்கிறது.

தகவல் என்னவென்றால், மத்தியப்பிரதேச மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில்(ஒபிசி) ஒன்றைச் சேர்ந்த பெண், புவியியல்உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக் கிறார். இட ஒதுக்கீட்டு உரிமையைக் கோராமல்பொதுப்பிரிவின் கீழ் போட்டியிட்ட சாத்னா சிங் டேங்கி என்ற அந்தப் பெண் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்.எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவுகள் அல்லாத மற்ற சாதியினருக்கான ஒதுக்கீட்டில் அவருக்கு எப்படி வேலை தரலாம் என்று சிலர் வழக்குத் தொடுத்தனர். உயர்நீதிமன்றம் அதை ஏற்று, இட ஒதுக்கீடு பலனைக் கோராவிட்டா லும் கூட, அந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு செய்யப்படாத பிரிவின் கீழ் மாறுவதற்கு அனுமதியில்லை என்று தீர்ப்பளித்திருந்தது. மேல்முறையீட்டு வழக்கை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சாத்னாவின் நிய மனத்தைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புகள் இரண்டு வாரங் களில் தங்கள் பதில்களைத் தாக்கல் செய்ய ஆணையிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது.

பொதுப்பிரிவு என்பது மற்ற சாதி களுக்கான இடஒதுக்கீடு அல்ல. யாராக இருந்தாலும் போட்டியிடுவதற்கான பொதுக்களம் அது. பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கைகள் என்று ஒதுக்கப்பட்டிருக்கும். இதன் பொருள் மற்ற இருக்கைகள் ஆண்களுக்கானவை என்பதல்ல. அவை பொதுவானவை. அந்த இருக்கைகளில் பெண்கள் உட்காரத் தடை கிடையாது. ரயில்களில் பெண்களுக்காக ஓரிரு பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருக் கும். மற்ற பெட்டிகள் ஆண்களுக்கானவை அல்ல, பொதுவானவை. அந்தப் பெட்டிகளில் பெண்கள் ஏறக்கூடாது என்று தடுக்க முடியாது.

இந்த எளிய உண்மை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாமல் போனது வியப்புதான். உச்சநீதிமன்றத்தில் வழக்கின் திசை எப்படிப் போகிறதெனப் பார்ப்போம்.ஆனால், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் இப்படியொரு தலைப்பும், முதல் வரியும் தரப்பட்டிருப்பதில் ஒரு களிப்புவெளிப்படுகிறதே! தகுதி என்ற போலித் தனத்தோடு, இட ஒதுக்கீட்டு நியாயத்தை ஏற்கமறுக்கிற மேட்டிமை மனப்பான்மையின் களிப்பு அல்லவா அது?ஒன்றை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சமூகநீதியை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பதற்கான ஒரு இரும்புச் சுவர்தான் இட ஒதுக்கீடு. அந்தச் சுவர் அரிக்கப்பட்டுவிடாமல் காப்பது ஒரு வரலாற்றுக் கடமை. 

===அ.குமரேசன்===

;