tamilnadu

img

சோசலிச, மார்க்சிய நூல்கள் அறிமுகம் -பி.ராமமூர்த்தி

அபராதம் செலுத்த மறுப்பு
சத்தியாகிரஹப் போராட்டத்தை நடத்தியதற்காக எனக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆறுமாத கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அராதமும் விதித்தார்கள். அபராதம் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாத காலம் கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நான் அபராதத்தை செலுத்த மறுத்துவிட்டேன். சிறையில் எனக்கு இரண்டாம் வகுப்பு கொடுத்தார்கள். அப்பொழுது ஏ.பி. வகுப்புக் கைதிகளை வேலூர் சிறையில்தான் வைப்பது வழக்கம். ஆனால் எனக்கு உடல்நலம் சரியில்லாதிருந்ததால் சென்னை சிறையிலேயே வைத்திருந்தார்கள். சென்னை சிறையிலிருக்கும் பொழுதுதான் வி.கே.நரசிம்மனை நான் சந்தித்தேன். வி.கே.நரசிம்மன் பின்னாட்களில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் தில்லிப் பதிப்பு ஆசிரியராக இருந்தார். அவர் சிறைக்கு வரும் முன்பே அமீர் ஹைதர்கானுடன் தொடர்பு கொண்டு கம்யூனிஸ்ட்டாக மாறி சிறைக்கு அனுப்பப்பட்டவர். அச்சமயத்தில் வேலூர் மத்தியச் சிறையின் கண்காணிப்பாளராயிருந்த முகமது மூசாகான். வேலூர் சிறையிலிருக்கும் ஏ, பி வகுப்புக் கைதிகளை இதரர்களுடன் பழகாமல் தனித்தனியாக வைப்பது சிரமமாயிருக்கிறதென்று மேலிடத்திற்கு எழுதியதால் அங்கிருந்த பல ‘பி’ வகுப்பு கைதிகளை மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றினார்கள். சென்னையிலிருந்த என்னையும் மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றினார்கள். மதுரை மத்தியச் சிறையில் இருக்கும் பொழுதுதான், ராஜாஜி எழுதிய ‘அபேதவாதம்’ நூலையும், பேபியின் சொஸைட்டி வெளியிட்ட பெர்னாட்ஷாவின் புத்தகங்களையும் படித்தேன். ராஜாஜி 1930ம் ஆண்டில் தன்னுடன் சிறையிலிருந்த இதர அரசியல் கைதிகளுக்கு கம்யூனிசத்தைப் பற்றி எளிமையாக விளக்கி செய்த பிரசுரங்களே ‘அபேதவாதம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் புத்தகங்கள் தான் சோசலிசக் கருத்துக்களைப் பற்றி, ஆரம்பத்தில் நான் படித்த புத்தகங்கள்.
சென்னை சதி வழக்கு
ஹரிஜன சேவா சங்கத்தில் ஓராண்டுக் காலம் செயல்பட்ட பின், அத்தகையதொரு பணியின் மூலம் ஹரிஜனங்களை முன்னேற்ற முடியாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இது ஒருவகைப்பட்ட சமூக சீர்திருத்தமே தவிர, சுதந்திர இயக்கமாக மாற முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டதன் விளைவாக ஹரிஜன சேவா சங்க வேலையில் ஒரு சலிப்புத் தட்டியது. இச்சமயத்தில்தான் சென்னை சதி வழக்கு விசாரணை நடைபெறத் தொடங்கியது. இவ்வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டவர்கள் முகுந்தலால் சர்க்கார், டி.ஆர்.சுப்ரமணியம், அருண் என்ற அருணாசலம் ஆகியோருடன் ஆந்திராவைச் சேர்ந்த சில இளம் காங்கிரஸ்காரர்களும் இருந்தார்கள். இவர்களெல்லோரும் 1930-31ம் ஆண்டுகளில் திருச்சி சிறையிலிருந்தபொழுது வட இந்தியாவிலிருந்து அங்கே கொண்டுவரப்பட்டிருந்த ஜீவன்லால் சாட்டர்ஜி, சுரேந்திரமோகன் கோஷ் ஆகிய பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் தொடர்பால், அந்த இயக்கத்திற்கு ஈர்க்கப்பட்டவர்கள். 1931ம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஆயுதங்கள் சேகரிப்பது, பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகப் பிரசுரங்களை வெளியிட்டு விநியோகிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஆங்கிலேய அரசு இவர்களை கைது செய்து ஒரு சதி வழக்கை உருவாக்கியது. இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டிருந்தவர்களில் மற்றும் சிலரையும் நான் அறிவேன்.
எனவே இவர்களுக்காக வாதாட ஜகன்னாததாஸை நான் அணுகினேன். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க ‘ஒரு பாதுகாப்புக் கமிட்டியை’ அமைத்தோம். அக்கமிட்டிக்கு ஜகன்னாததாஸ் தலைவராகவும், நான் காரியதரிசியாகவும் செயல்பட்டோம். நாங்கள் வசூலித்த பணம் போதுமானதல்ல. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த கைதிகளின் பெற்றோர்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு இவ்வழக்கை நடத்தினோம். பிரபலமாயிருந்த வி.ராஜகோபாலாச்சாரி, என்.எஸ்.மணி போன்ற சில வழக்கறிஞர்களையும் இதற்காக ஏற்பாடு செய்திருந்தோம். சிந்தாதிரிப்பேட்டை விசேஷ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் பயங்கரவாத இயக்கத்தைப் போற்றி எழுதப்பட்ட அறிக்கைகள், தஸ்தாவேஜூகள் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டன.
இவ்வழக்கின் முழு விபரத்தையும் படித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சார்பாக வாதாடுவதற்காக குறிப்புகளை தயாரிக்கும்பொழுது பயங்கரவாத இயக்கத்தின் மீது எனக்குச் சிறிது அபிமானம் தோன்றியது. காந்திஜியின் இயக்கத்தின் மூலம் சுதந்திரம் வராது. இப்படி ஏதாவது செய்தால்தான் நடக்கும் என்று தோன்றியது.
மார்க்சிய நூல்கள் அறிமுகம்
இந்த நேரத்தில்தான் தடை செய்யப்பட்டிருந்த மார்க்சிய நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. லண்டனிலிருந்து அச்சமயத்தில் ‘லிட்டில் லெனின் லைப்ரரி’ என்ற வரிசையில் பல புத்தகங்கள் வெளியாகி வந்தன. ‘ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’ ‘அரசாங்கமும் புரட்சியும்’, ‘செய்ய வேண்டியது என்ன?’, ‘துரோகி காவுட்ஸ்கி’ போன்ற லெனினுடைய நூல்களைப் படித்தேன். சிறிது காலம் கழித்து காரல்மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ ஏங்கெல்ஸ் எழுதிய ‘விஞ்ஞான சோசலிசமும், கற்பனாவாத சோசலிசமும்’ முதலிய நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘மூலதனம்’ முதலில் படிக்கும்பொழுது புரியவே இல்லை. பலமுறை திருப்பித் திருப்பிப் படித்தேன். பல மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு வழக்கை ‘செஷன்சுக்’கு அனுப்பினார்கள். ஆந்திராவைச் சேர்ந்த கைதிகளின் பெற்றோர்கள். டி.பிரகாசத்தை வழக்காட ஏற்பாடு செய்யும்படி கூறியதால் பிரகாசத்தைச் சந்தித்து வழக்காட ஏற்பாடு செய்தேன். பிரபல காங்கிரஸ் தலைவரான பிரகாசம் அப்பொழுதுதான் சிறையிலிருந்து திரும்பி வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கியிருந்தார். தினமும் இரவில் அவருடைய இல்லத்திற்குச் சென்று வழக்கைப் பற்றிய விபரங்களைக் கூறி அவருக்கு உதவியாக தேவையான குறிப்புகளைத் தேடித் தருவது வழக்கம். பிரகாசம் அப்போது மைலாப்பூர் எல்லப்பமாதா கோவில் தெருவில் குடியிருந்தார். பிரகாசத்திற்கு உதவியாக இருக்கும் பொருட்டு ‘சாட்சி சட்டம், ‘குற்றச்சட்டத் திருத்தம்’ ஆகியவற்றை முழுமையாகப் படித்தேன். விவாதத்திற்கான குறிப்புகளை பிரகாசத்திற்கு தயாரித்தேன்.
ஆனால் செஷன்ஸ்கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டார்கள். இரண்டு வருடத்திலிருந்து ஆறு வருடகாலம் வரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.
சதிவழக்கு முடிந்தவுடன், வேறு எதுவும் இல்லாததால், திருவல்லிக்கேணியில் ஒரு நெய்க்கடையை ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் பி.சீனிவாசராவ் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். 1932ல் எனக்கு அறிமுகமாயிருந்த பி.எஸ்.ஆர். 1933ல் மறுபடியும் கைது செய்யப்பட்டிருந்ததார். சிறையிலிருந்து மீண்டபின், எப்பொழுதும் போல் கடற்கரையில் (இப்பொழுது போர்ட்டிரஸ்ட் இருக்குமிடத்தில்) அரசியல் நோட்டீஸ்களை விநியோகிப்பார். நான் நெய்க்கடையை ஆரம்பித்த சில நாட்களுக்குள் மீண்டும் என்னிடம் தொடர்பு கொண்டார். அடிக்கடி என்னிடம் வந்து பேசிக்கொண்டிருப்பார். மிக நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. என்னால் முடிந்தளவு பண உதவி  செய்வதுண்டு. அச்சமயத்தில்தான் அவருக்கு பி.சுந்தரய்யாவுடன் தொடர்பேற்பட்டிருந்தது. சுந்தரய்யா அப்பொழுது சென்னையில் ஏ.எஸ்.கே.அய்யங்காருடன் சேர்ந்து ‘தொழிலாளர் பாதுகாப்புக்குழு’ என்ற அமைப்பை ஆரம்பித்திருந்தார். சில மாதங்கள் கழிந்த பின் நானும் அந்த பாதுகாப்புக்குழு உறுப்பினரானேன். இதற்கிடையில் பலருக்கு கடன் கொடுத்து பாக்கியை வசூலிக்க முடியாமற் போனதால், இனி வியாபாரம் செய்ய லாயக்கில்லை என்று முடிவு செய்து நெய் வியாபாரத்தை நிறுத்திவிட்டேன்.

;