tamilnadu

img

தொழிலாளர் சட்டங்களை ஒழித்துவிட்டால் முதலீடு பெருகும் என்பது அபத்தமானது

இன்சூரன்ஸ் ஊழியர் தலைவர்  ஸ்ரீகாந்த் மிஸ்ரா சாடல்

ஹைதராபாத், ஜூன், 19- கொரோனா நெருக்கடியின் பின்னணியில்  தொழிலாளர் சட்டங்கள் அகற்றப்பட்டால் தான் முதலீடுகள் பெருகும் என்றும் இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக மாற்றப்படுமானால் சீனா போன்ற நாடுகளில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள்  இந்தியாவிற்கு வந்துவிடும் என்றும் வாதிடப்படுவது அபத்தமானது என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக ‘இன்சூரன்ஸ் ஒர்க்கர்’ ஏட்டில் அவர் கூறியிருப்பதாவது:  உலகிலேயே மிகவும் மலிவான மற்றும் அதிகம் சுரண்டப்படும் தொழிலாளர்களைக் கொண்டிருக்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் உழைப்புக்கான கூலியானது தொழில்துறை செலவில் ஒரு சிறிய பின்னமே. தொழிலகங்களின் 2017-18 ஆண்டு ஆய்வினைக் கோடிட்டு, பொருளாதார அறிஞர் பேராசிரியர் ஜெயதி கோஷ் அவர்கள், ‘இந்தியாவின் ஒட்டு மொத்த உள்ளீட்டு செலவுகளில் தொழிலாளர்களுக்கான கூலி 3 சதத்திற்கும் குறைவே, உ.பியில் அது 2.6 சதம், குஜராத்தில், மத்தியப் பிரதேசத்தில் அது 2 சதம் மட்டுமே’ எனக் குறிப்பிடுகிறார். ஆக தொழிலாளர்களின் கூலி எப்போதும் ஒரு தடை அல்ல.

 முதலீடுகள் உழைப்பாளிகளின் கூலியோடு மட்டுமே நேரடியாகத் தொடர்புடையது என்பது அபத்தத்தின்  உச்சமாகும். கூலிதான் முக்கிய காரணியெனில், மிகக் குறைந்த கூலி விகிதங்களைக் கொண்டுள்ள வடக்கு மாநிலங்கள் தங்களின் சக மாநிலங்களைப் போன்று முதலீடுகளைப் பெற்றிருக்க வேண்டும். தொழிலாளர் உற்பத்தித் திறன்  நிறுவனங்கள் தங்கள் முதலீட்டு முடிவுகளை, நம்பகமான உள்கட்டமைப்பு (துறைமுகங்கள், மின்வசதி, சாலைகள்), சீரான சட்டம் - ஒழுங்கு, சீரிய சரக்கு கையாளுதல், சந்தையின் அளவு மற்றும் துறைசார் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை போன்ற பல அம்சங்களை கணக்கில் கொண்டே எடுக்கின்றன என்பதை அறிய வேண்டும். உலகவங்கியின் 2014ஆம் ஆண்டு ஆய்வின்படி, முதலாளிகள், தங்களை எரிச்சலூட்டும் முதல் ஏழு காரணிகளில் தொழிலாளர் சட்ட திட்டங்களைப் பட்டியலிடவில்லை. அப் பட்டியலைப் பொருத்தவரை, இலகுவான தொழிலாளர் சட்ட திட்டங்களைக் காட்டிலும் ‘திறன் மிகு மனிதசக்தி’ கிடைப்பதே மிக முக்கியமானது. கூடுதல் லாபத்திற்காக, வேலை நாளை 8லிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது மற்றும் கூலி விகிதங்களைக் குறைப்பதென்பது, தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை சிதைப்பதாகும் என்பதால், அது முதலாளித்துவம் தம்மைத் தாமே தோற்கடித்துக் கொள்ளும் நடவடிக்கையாகவே அமைந்திடும்.

சீனாவிலிருந்து  வியட்நாமுக்கு செல்கிறது

இரண்டாவது, சீனாவிலிருந்து இடம் மாறும் அந்நியக் கம்பெனிகளை, கூலி விகிதங்களைக் குறைத்து இந்தியாவினை நோக்கி ஈர்க்கப் போகிறோம் என்பதும் இதனையொத்த ஒரு யூகமே. கடந்த நாற்பதாண்டுகளாக, இந்தியாவில் ஊதியம் சீனாவை விட வெகு குறைவாகவே இருந்துள்ளது. அதேபோன்று, தொழிலாளர் பாதுகாப்பென்பதும் சீனாவை விட இந்தியாவில் தொடர்ந்து மிகவும் மோசமானதாகவே இருந்து வந்துள்ளது. இருப்பினும், சீனாவிற்குள் பாயும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அருகில் கூட இந்தியாவால் நெருங்க முடியவில்லை. ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு கருத்தரங்கின் (UNCTAD) “உலகளாவிய முதலீட்டு போக்கு கண்காணிப்பு அறிக்கையின்” படி, கடந்த ஆண்டில் இந்தியா 49 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்ந்தது எனில், சீனாவோ 140 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டிருந்தது. தற்போதும் கூட சீனாவிலிருந்து செல்லும் கம்பெனிகளில் சில இந்தியாவை விட கூடுதலான ஊதிய விகிதங்கள் மற்றும் விரிவான தொழிலாளர் சட்டங்களைக் கொண்டிருக்கிற வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு இடமாறிச் செல்கிறது என்பதுதான் உண்மை. 

வேலை நேரத்தை அதிகரிப்பது பெரும் சுரண்டல்

மேலும், ஊதியத்தை வெட்டி, வேலைநேரத்தைக் கூட்டி தொழிலாளர்களைச் சுரண்டுவதென்பது, மறுமுனையில் கிராக்கியை மேலும் குறைத்து, நெருக்கடியை பன்மடங்கு மோசமடையச் செய்யவே வழிவகுக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.  அதே நேரத்தில், தொழிலாளர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் இந்திய முதலாளி வர்க்கத்தின் கோரிக்கையாக உள்ளன. பிக்கி, அசோசம் வர்த்தகர் கூட்டமைப்பு உள்ளிட்ட 12 முதலாளிகளின் அமைப்புகள்,  இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கூட்டாக கோரிக்கை வைத்தன. குஜராத் வர்த்தக சபை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது தொழிற்சங்கங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என நிர்ப்பந்தித்தது.  மத்திய பாஜக அரசும், இந்த ஊரடங்கு அமலும் பொருத்தமான இணையாக அமைந்துவிட்டன. தனது முதலாளித்துவ கூட்டாளிகளை ‘செல்வ வள உற்பத்தியாளர்கள்’ என வர்ணித்ததோடு, அவர்களுக்கு மக்களிடமிருந்து உரிய மரியாதை வேண்டுமெனக் கோரியவரல்லவா இந்தியப் பிரதமர்?  அதே பாசம்தான் நெருக்கடியான இச்சூழலிலும், ‘நெருக்கடியை ஒரு சந்தர்ப்பமாக மாற்றுவோம்’ என்ற அவரது சமீபத்திய வார்த்தைகளாகத் தெறித்திருக்கின்றன. இது இந்திய உழைப்பாளி மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள வர்க்கப் போரே அன்றி வேறல்ல. இந்தியாவின் தொழிலாளி வர்க்கம் இத்தாக்குதலை எதிர்கொண்டு நிச்சயம் வெல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

;