tamilnadu

img

விவசாயிகளுக்கு உடனே பணம்... (குறுங்கட்டுரை)

விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்பது தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக் கூடங்களைக் குறிக்கிறது. விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கவும் விற்கவும் முறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை (ஒழுங்கு முறை) சட்டத்தை பிறப்பித்து இந்த ஒழுங்கு முறைக் கூடங்களை உருவாக்கியது.

\தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் 108 கிராமப்புற சேமிப்புகிடங்குகளும் 108 தரம்பிரிக்கும் மையங்களும் செயல்பட்டுவருகின்றன. நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு, தேங்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த விற்பனை நடக்கும்போது விவசாயி, வர்த்தகர், வேளாண்துறை அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். பொருட்கள் வாங்கப்பட்டவுடன் விவசாயிக்குபணம் அளிக்கப்பட்டுவிடும்.இந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூட முறையானது தமிழ்நாட்டைவிட, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகவும் கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்று, மறுபடி விற்கும் வர்த்தகர்களுக்கு பொருளின் மதிப்பில் 1-2 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இப்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தின் மூலம் எல்லா மாநிலங்களிலும் விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை வாங்க முடியும். ஆனால், இதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1-2 சதவீத கட்டணம் விதிக்கப்படுகிறது. வெளியில் இந்தக் கட்டணம் இருக்காது என்பதால், பலரும் வெளியிலேயே விற்பனை செய்ய முயல்வார்கள். சிலசமயங்களில் களத்திலேயே பொருட்களை கிடைத்த விலைக்கு விற்கவும் விவசாயிகள் முன்வரக்கூடும். இதன் காரணமாகவே, விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

====முரளிதரன் காசி விஸ்வநாதன், பிபிசி தமிழ்====

;