tamilnadu

img

மோடி அரசு நீடித்தால் நமது தட்டில் உணவிருக்காது - கே.பி.பெருமாள்

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு (2020) பிறப்ப தற்கு முன்பும் பிறந்த பின்பும் பல்வேறு செயல் பாடுகள் குறித்து அதாவது கடந்த பத்தாண்டுகளில் (2010-2019) இவருடைய செயல்பாடு அல்லது அணியின் செயல்பாடு என்று விளையாட்டு துறையிலும் மற்றும் வேறு துறையின் செயல்பாடுகள், தனிமனித செயல்பாடுகள் குறித்து இப்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. நாம் இங்கே கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு (2014-2020) மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.

விவசாய அமைப்பு முறை

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். இதில் 83.3 கோடி பேர் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். அதாவது குடும்பமாக சொல்வதென்றால் 24.39 கோடி குடும்பங்கள் உள்ளன. இதில் 17.91 கோடி குடும்பங்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் வசிக்கின்றவர்கள் விவசாயம் சார்ந்தே வாழ்கிறார்கள். இவர்களில் 67.10 சதவீதம் குறு விவசாயிகள். இவர்களுக்கு ஒன்று முதல் இரண்டு ஏக்கர் நிலம் வரை உள்ளது. 17.91 சதவீதம் சிறு விவசாயிக ளுக்கு ஒன்று முதல் இரண்டு ஹெக்டேர் நிலம் வரை உள்ளது. 10.04 சதவீதம் ஏழை விவசாயிகளிடம் 2 முதல் 4 ஹெக்டேர் வரை நிலம் இருக்கிறது. 4.25 சதவீதம் மத்திய தர விவசாயிகளிடம் 4 முதல் 10 ஹெக்டேர் வரை நிலம் இருக்கி றது. 0.17 சதவீதம் விவசாயிகளிடம் 10 ஹெக்டேருக்கு மேல் நிலம் இருக்கிறது. தற்போது இந்தியாவில் 130 கோடி மக்கள் இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, நிலம் மற்றும் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்தியா வில் 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் 15 சதவீதம் விவசாய உற்பத்தியிலிருந்து வருகிறது. நாடு முழுவதும் தொழிலாளிகளில் 48.9 சதவீதம் விவசாயத் துறையில் இருக்கின்றனர். 

அரசின் திட்டங்கள்

இந்தியாவில் 70 சதவீதம் மக்கள் கிராமப்புறங்களில் உள்ள சூழ்நிலையில் அதுவும் விவசாயத்தை நம்பியுள்ள நாட்டில் நரேந்திர மோடி  2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியதிகாரத்திற்கு வருமானால் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் என்று வாக்குறுதி அளித்தார். அதே போல் அரிசி, கோதுமை போன்ற தானியங்க ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித்தரும் என்றார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் விவசாய இடுபொருள் விலைகளைக் குறைப்பது, விவசாயக் கடன் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விவசாயிகளுக்கு கடன்கள் அதிக அளவில் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீடுத் திட்டம். அதே போல் 2020ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக்கும் திட்டம், வருடத்திற்கு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டம், அறுபது வயதை கடந்த விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் என்று பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அரசு இக்காலத்தில் அறிவித்துள்ளது. 

அரசின் செயல்பாடுகள்

உச்சநீதிமன்றத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்து ரையை அமல்படுத்த வேண்டுமென்ற பொதுநல வழக்கில் மத்திய அரசு உற்பத்திச் செலவுடன் குறைந்தது 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயிப்பது சந்தையில் சீர்குலைவை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே, சுவாமிநாதன் குழு பரிந்துரை களை அமல்படுத்த இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடைமுறையில் இருந்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல் விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கு விப்புத் தொகை வழங்கக் கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. கூடுதலாக ஊக்குவிப்புத் தொகை வழங்கிய மாநிலங்களிலிருந்து இந்திய உணவுக் கழகம் தானியங்கள் கொள்முதல் செய்வதை இக்காலத்தில் நிறுத்திக் கொண்டது. இதனால் அந்த மாநிலங்கள் ஊக்குவிப்புத் தொகை கொடுப்பதை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காமல் போனது. 

வங்கிகள் சிறுகுறு விவசாயிகளுக்கு கடன் வழங்குவ தில்லை. விவசாயக் கடன்களில் பெரும் பகுதி விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனங்க ளுக்கும் தான் கிடைக்கின்றன. இடுபொருட்களின் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் கடுமையான அளவு உயர்ந்துள்ளது. வேளாண் பணிகள் நடைபெறும் காலத்தில் யூரியா மற்றும் இதர உரங்கள் தட்டுப்பாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் உரங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு பயன்படுகிறதோ இல்லையோ கார்ப்பரேட் கம்பெனிகளான இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு நல்ல லாபம் ஏற்படுத்திக் கொடுக்கிற திட்டமாக உள்ளது. இன்சூரன்ஸ் கம்பெனிகளிட மிருந்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை எளிதாகக் கிடைப்பதில்லை. ஏராளமான போராட்டங்களுக்கு பின்பே கிடைக்கிறது. அதுவும் முழுமையாகக் கிடைப்பதில்லை. சிறு, குறு விவசாயிகளுக்கு 60 வயது அடையும் போது மாதந்தோ றும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் அதற்காக அவர்கள் 19 வயது முதல் 40 வயது வரை மாதந்தோறும் பங்களிப்புத் தொகை  கட்ட வேண்டும். அதற்கு சமமான தொகையை மத்திய அரசு அளிக்கும். அதனால் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் ஈர்ப்பு இல்லை. காரணம் விவசாயிகளுக்கு நிவார ணம் உடனடியாக தேவை. ஆனால் மத்திய அரசோ பங்க ளிப்புத் தொகை செலுத்திய பின் இருபது ஆண்டுகள் கழித்து 60 வயதில் பலன் பெறமுடியும் என்று தெரிவிப்பதால், இந்த திட்டத்திற்கு போதிய ஆதரவு விவசாயிகளிடம் இல்லை. ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் சிறு,குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அமல்படுத்தியது. சிலருக்கு பணம் முதல் தவணை ரூ.2 ஆயிரம் கிடைத்தது. இரண்டாவது தவணை கிடைக்கவில்லை. பலருக்கு எந்த தவணை தொகையும் கிடைக்கவில்லை. தற்கொலை செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை இக்காலத்தில் குறைய வில்லை. 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பாரத ஸ்டேட் வங்கி 1 பில்லியன் (100 கோடி) டாலருக்கும் அதிகமாக கடன் வழங்கியுள்ளது. இதில் பெரும் தொகை கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் திருப்பிச் செலுத்துவதில்லை. மத்திய அரசு விவசா யிகளுக்கு கொடுத்தால் “மானியம்” என்று கூறுகிறது. கார்ப்ப ரேட்டுகளுக்கு கொடுத்தால் “ஊக்கத் தொகை” என்கிறது. லட்சங்கள் கடன் வாங்கிய விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். பல பில்லியன்கள் கடன் வாங்கும் கார்ப்ப ரேட்டுகள் தற்கொலை செய்வதில்லை. பாதுகாப்பாக வெளி நாடுகளுக்கு செல்லுகிறார்கள். விவசாயத்தை நம்பி வாழும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கடனில் வாழ்கிறார்கள். இதனாலேயே தற்கொலைச் சாவுகள் அதிகரித்து வரு கின்றன. 1995-2019 ஆண்டு காலத்தில் சுமார் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்தியாவில் பெரும் பகுதியானவர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கி றார்கள் என்ற போது ஆட்சியாளர் அவர்களை பாதுகாப்ப தற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசு அறிவிப்பு

மத்திய வேளாண் அமைச்சகம் 2019-20ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டில் உணவு தானியங்கள் உற்பத்தி 28.34 கோடி டன்னாக குறையும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. 2018-19ஆம் ஆண்டு வேளாண் பருவத்தில் 28.48 கோடி டன்னை உணவு தானிய உற்பத்தி எட்டியிருந்தது. இதற்கு முன்பு 26.50 கோடி டன்னாக 2013-14ஆம் ஆண்டில் இருந்தது. 2018-19ஆம் ஆண்டுடன் 2019-20ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 0.14 கோடி டன் குறைவாக இருக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. 

வ.எண்  தானியங்கள் 2018-19 (கோடி டன்னில்)    2019-20 (கோடி டன்னில்)
 
1 அரிசி     11.29     11.56
 
2 கோதுமை     9.97 10.00
 
3  சிறு
            தானியங்கள்    
4.70  4.33
 
4 பருப்பு     2.54      2.32
 
5  எண்ணெய் 
            வித்துக்கள்
    3.15   3.14
 
6 கரும்பு  37.99 40.00
 
7

பருத்தி 
 (1 பொதி= 170 கிலோ)     

 

    3.28 

 கோடி பொதி

      2.76
 

கோடி பொதி


 

மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ள புள்ளி விபரப்படி பார்த்தால் அரிசியும், கோதுமையும் உற்பத்தியில் சிறிய அளவில் (0.3 கோடி டன் ) அதிகமாக நடப்பாண்டில் உற்பத்தியாகும் என்றும் சிறு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்துக்கள் அதிகளவில் (0.6 கோடி டன்) குறையும் என்றும் தெரியவருகிறது. அதாவது அரிசி, கோதுமை உற்பத்தி அதிகரிப்பு 1 மடங்கு என்றால் சிறு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவு 2 மடங்காக உள்ளது. பருத்தி 0.52 கோடி பொதி அளவு குறைவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஜவுளி தொழில் அதனை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படும்.

விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பேன் என்று வாய்ப்பாடி வந்த நரேந்திர மோடியின் 6 ஆண்டு ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. விவசாயத்தை விட்டு வெளியேறி ஹோட்டல் தொழில், மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட முறைசாரா தொழிலில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவு உற்பத்தி அளவு நடப்பாண்டில் குறையும் என்று வேளாண்மை அமைச்சகம் அறிவித்துள்ளது மிகவும் ஆபத்தான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. வேளாண்மை துறையை மத்திய அரசு இவ்வாறு செயல்படுத்தினால் விரைவில் விவசாயிகளும், வேளாண்மை துறையும் மிகப் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள்.

 மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியப் பொருள் உணவு. எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதை தயாரிக்கத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களான தானியங்கள், காய்கறிகள், கனிகளும் பூமியில் விளைகின்றன. அதை பச்சையாகவோ, சமைத்தோ விரும்பிய விதத்தில் நாம் உண்கிறோம். இதனை விவசாயிகள் உற்பத்தி செய்கிறார் கள். அந்த விவசாயிகளைப் பற்றி சிறப்புக் கவனம் செலுத்தா மல் போனால் “எதிர்காலத்தில் நமது குழந்தைகளின் தட்டில் சாதமோ, வேறு ஏதாவது உணவோ இருக்காது” என்பது நிச்சயம். எனவே மத்திய அரசு விவசாயிகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் உங்கள் தட்டிலும் ஒன்றும் இருக்காது.

கட்டுரையாளர் : மாநில பொருளாளர்,  
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்




 

;