60 லட்சம் வருடங்களுக்கு முன் ஒரு வாலில்லா குரங்கிலிருந்து மனித இனம் பிரிந்து வளர்ந்தது. 25 லட்சம் வருடங்களுக்கு முன் ஆஸ்ட்ரலோ பித்திகஸ் என்ற நமது மூதாதையர் இனம் கிழக்கு ஆப்ரிக்கா வான பிறந்த இடத்தை விட்டு நகர்ந்து ஆப்பிரிக்கா,ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு பயணித்தது. இதில் ஆசியாப் பக்கம் வந்தவைகள் ஹோமோ எரெக்டஸ் என்ற பெயரில் ஆதியில் பரிணாமம் அடைந்து பல வகை மனித முன்னோடிகளை உருவாக்கி இருக்கிறது. ஹோமோ எரெக்டஸ் 20 லட்சம் வருடங்கள் வாழ்ந்திருக்கிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். ஹோமோ எரெக்டஸில் இருந்து தான் நியான்டர்தால், ஜாவா மனிதன், புளோரஸ் என்ற லில்லிபுட் மனிதர்கள்(3அடி மனிதன், 25 கிலோ). இது போன்ற பல மனித முன்னோடிகள் தோன்றி அழிந்து உள்ளனர்.
மனிதனின் தொட்டில் ஆன கிழக்கு ஆப்ரிக்காவில் பரிணாமம் தொடர்ந்தது. ஹோமோ எர்காஸ்ட்டர், ஹோமோ சேப்பியன்ஸ் என நவீன மனிதன் பரிணமித்தான். இருபது லட்சம் வருடத்தில் இருந்து சமீபத்திய பத்தாயிரம் வருடத்திற்கு முன் வரை பல்வேறு மனித இனங்கள் வாழ்ந்திருக்கின்றன. கரடிகளில் பல வகைகள் வாழ்வது போல் மனித இனம் வாழ்ந்திருக்கிறது. தற்போது வாழும் மனிதன் சுமார் 2 லட்சம் வருடத்தில் இருந்து வருகிறான். சுமார் எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனித இனத்தின் கலாச்சாரப் பரிணாமம் துவங்கியது. 12000 வருடங்களுக்கு முன் விவசாயம், சுமார் 500 வருடங்களுக்கு முன் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி என மனித சமூகம் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிகளோடு பல கோடி உயிரினங்களோடு மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
டார்வின் பரிணாமக் கொள்கை
டார்வின் (1809-1882) பரிணாமக் கொள்கை இயற்கைத் தேர்வு வழியாக உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் மூலம் 1859ல் உலகத்திற்குத் தெரிய வந்தது. உயிர் பரிணாம அறிவியலில் மரபணு மாற்றம் (mutation), நேர்கோட்டுப் பரிணாமம்(orthogenisis), உருவான குணங்களைக் கடத்துதல் ( acquired characters inheritance), இயற்கைத் தேர்வு (Natural Selection) என்ற நான்கில் டார்வினுடைய இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டே சிறந்து விளங்குகிறது. அவர் கூறியதில் வாழ்வதற்கான போராட்டம் என்ற பதமும் தக்கன பிழைத்தல் என்பதும் அவருடையது அல்ல. முன்னது மக்கள் தொகை குறித்து மால்தூஸ் கூறியது.
தக்கன பிழைத்தல் என்பது ஹெர்பட் ஸ்பென்சர் கூறியது. டார்வின் தனது ஐந்தாவது பதிப்பில் தக்கன பிழைத்தல் என்பது பொருத்தமாக இருப்பதாகக் கருதி அதைப் பயன்படுத்தினார்.இதை மனிதப் பரிணாமத்திற்கு (Descent of Man 1871 ) கையாண்டுள்ளார். டார்வின் கூறியதில் மிக முக்கியமானது என்ன வென்றால் உயிரினங்கள் நிரந்தரமானவையல்ல, நேர்கோட்டுப் பரிணாமம் கொண்டது அல்ல, அது கிளைகள் கொண்டது, தொடர் மாற்றம் கொண்டது, பெரிய அளவில் இடைவெளியற்றது, இயற்கை உயிரினங்களைத் தேர்வு செய்கிறது.
-டார்வின் கொள்கை என்பது வரலாற்றுத் தன்மையை உள்ளடக்கியது. பல கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள், வழிமுறைகளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. உற்று நோக்குதல் ,ஒப்பிடுதல் , வகைப்படுத்துதல் என்ற அறிவியல் வழிமுறைகள் இதில் கையாளப்பட்டுள்ளது. அது நாள் வரை உயிரினங்கள் கடவுளின் சட்டங்களால் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் பல தகவமைப்புகள் உருவானதெனக் கருதி வந்தனர். ஆனால் டார்வின் அபார சக்திகளினால் படைக்கப்படவில்லை எனக் கூறி கடவுளை அந்த இடத்தில் இருந்து அகற்றினார்.
மனிதப் பரிணாமம் என்பது தனிச் சிறப்பானதல்ல என்கிறார். பிற உயிரினங்கள் எவ்வாறு பரிணாம வழியில் வந்ததோ அதே போன்று தான் மனிதன் பரிணாமும். தத்துவஞானிகளும் மத குருமார்களும் மனிதன் எல்லா உயிரினங்களுக்கும் மேலானவன் எனக் கூறுவதை இவர் மறுத்தார். ஏனென்றால் வாலில்லா குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையர் என்பதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். இதை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் எளிய சிந்தனையில் பார்க்கலாம்.
மனித சமுதாயம் பெற்றுள்ள முன்னேற்றத்திற்கு பொதுநலப் பண்பும் ( Atruism) ஒத்திசைவான கூட்டுறவும்தா ( Harmonious cooperation) ன் காரணம். பரிணாமத்தில் இயற்கை தேர்வு என்பது தனிஉயிரினத்தின் மீதல்ல. அந்த இனத்தின் குழுவாகும். எனவே மனித இனத்தின் வாழ்க்கை என்பது பொதுநலப் பண்பாலும் ஒத்திசைவான கூட்டுறவாலும் இயற்கையால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு தேர்வு செய்ததால் மனித குலம் முன்னேறி இருக்கிறது. இது தற்செயல் நிகழ்வல்ல, ஒரு தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கிச் செல்லும் இயற்கையின் செயல் என்ற கோட்பாட்டுக்கு எதிரானது. பரிணாமம் என்பது திட்டமிடாததும் அவ்வப்போதைய வாய்ப்புகளே பரிணாமத்தின் இலக்காகும்.
சமூக வளர்ச்சி
மனித சமுதாய வளர்ச்சி என்பது ஹெகேல் போன்ற அறிஞர்களின் பார்வையில் மாற்றம், மேலும் மாற்றம், முன்னேற்றம் என்பதாகும். இதனால் மார்க்ஸ் போன்றோர் அவரின் சீடர்களாக இருந்தனர். ஆனால் மாற்றத்திற்கான காரணத்தை அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அது அவனிடம் தோன்றும் தெய்வீக சிந்தனை, மதம் என முடித்துக் கொண்டார். ஆனால் மார்க்ஸ் மனிதன் தான் மதத்தை உருவாக்கினார். மனிதனே உலகம், மனிதனே அரசு, மனிதனே சமூகம் என்று முன் வைத்தார். மாற்றமும் முன்னேற்றமும் தெய்வீகமாகவோ ஊகத்தினாலோ வருவதில்லை.மாற்றம் என்பது மனிதகுலம் பெறும் திறன்களினாலும் அத் திறன்களை உருவாக்கும் அவர்கள் வாழும் சமூகமே காரணம் என்றார்.
மனிதனுக்கான சிந்தனை மாறும் உலகத்தினோடேயே உருவாகிறது. மாற்றத்திற்கான பின்னணியும் சமுதாயத்தில் இருந்து வருகிறது. மாற்றம் என்பது அவன் வாழுகின்ற வாழ்க்கையிலிருந்தே வருகிறது. மானுட விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் இருந்து வருகிறது. மனித குல விடுதலை என்பது அன்பினால் வருவதில்லை. உழைப்பாளர்களின் உற்பத்தி முறையில் உருவாக்கப்படும் பொருளாதார பரிமாற்றத்தில் வருகிறது. மனித இதயத்தின் மாற்றத்தால் அல்ல. இப்படித்தான் பண்டைய சமூகத்தில் இருந்து இன்றைய முதலாளித்துவ சமூகம் வரை சமுதாய வளர்ச்சி நடைபெற்று வருகிறது.
மனித சமுதாய வளர்ச்சியில் பல கோளாறான கொள்கைகளையும் பரப்பி வருகின்றனர். அதில் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் 1864ல் சமூக டார்வினிசம் என்ற கோட்பாட்டைப் பரப்பினார். தக்கன தப்பிப் பிழைக்கும் என்ற கருத்தினை உருவாக்கியவர் இவரே. சூழலுக்கேற்ற தகவமைப்புக் கொண்ட உயிரினத்தை இயற்கை தொடர்ந்து இனப் பெருக்கம் செய்ய அனுமதிக்கிறது.இதை மனதில் வைத்துக் கொண்டு சொத்தை குவிக்கும் திறமையும் வழிமுறையும் பரம்பரையாகச் செல்கிறதென்கிறது இந்தக் கோட்பாடு. மேலும் இவர் ஒரு படி போய் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு உதவிடு்ம் அரசின் சட்டங்களை எதிர்க்கிறார். இந்தச் சட்டங்கள் தகுதியற்றவர்களை ஆதரித்து இந்த சமூகம் முன்னேறுவதை தடுப்பதாகக் கூறுகிறார். இந்த தகுதியற்றவர்களை இயற்கையை மீறி நீண்ட நாளாக வாழ அனுமதிக்கிறது என்கிறார். வில்லியம் கிரஹாம் சம்மர் என்பவர் இன்னும் தடாலடியாக சொத்துக்கும் சமூக அந்தஸ்துக்கும் தனி நபர்களிடையே ஏற்படும் போட்டி திறனற்றவர்களையும் அறமற்றவர்களையும் வெளியேற்றும் என்கிறார். தனி நபர் சொத்துக்குவிப்பது என்பது அறமற்ற செயல் என இவர் அறியவில்லை.
மற்றொருவர் பிரான்சிஸ் ஹால்ட்டன் என்பார் மனித இனத்தை மேம்படுத்த அதனிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களை நீக்க வேண்டும் என்ற யூஜெனிக்ஸ் என்ற கோட்பாட்டை முன் வைக்கிறார். சமூக நல அமைப்புகள் மனவளர்ச்சி குன்றியோர்க்கான அமைப்புகள் தரம் குறைந்த மனித இனத்தை காப்பாற்றுகின்றன என குற்றம் சாட்டுகிறார். இதனையொட்டி 1930களில் 32 அமெரிக்க மாகாணங்கள் யூஜெனிக்ஸ் சட்டம் இயற்றி 60000க்கும் மேற்பட்டோரை அழித்திருக்கின்றனர்.
பிரிதொருவர் ஹிட்லரும் இதே வழியில் இனச் சுத்தம் என்ற பெயரில் ஆரியரல்லாத யூதர்கள், ரோமானியர், ஜிப்சிகள், போலந்துக்காரர்கள், சோவியத்துகளை லட்சக்கணக்கில் கொன்று குவித்தான். குறிப்பாக ஜிப்சி இனத்தவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்திருந்தும் அதிலும் தூய தன்மையைக் கண்டறிய அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களின் மூதாதையர்களின் தகவலைத் திரட்டி தீர்த்துக் கட்டினான். தற்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெற்றோர்களின் பிறப்பிடத்தையும் அவர்களது பிறந்த தேதியையும் தகவலாகத் திரட்டச் சொல்வதை இதனால் தான் எதிர்க்க வேண்டியதிருக்கிறது.
கட்டுரையாளர் : பொதுச் செயலர். மக்கள் அறிவியல் கூட்டமைப்பு