சிபிஎம் எம்எல்ஏ வினோத் நிகோலேயுடன் ஒரு நேர்காணல்
சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் வினோத் நிகோலே.
இவர் தன் உயர்கல்வியைத் தொடர முடியாத அளவிற்கு வறிய நிலையில் இருந்ததால், தகாணு தொகுதியில் உள்ள தன்னுடைய கிராமத்தில் மராத்தியர்களின் பிரதான சிற்றுண்டி உணவாகக் கருதப்படும் வடபாவ் (உருளைக்கிழங்கை வேகவைத்து அதனுடன் சட்னி , மிளகாய் போன்றவற்றை இணைத்து உண்ணும் உணவு வகை) மற்றும் தேநீர்க் கடை வைத்து நடத்தி வந்தார். தகாணு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவரை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிலமற்ற பழங்குடி தொழிலாளர்கள் குடும்பத்தில் பிறந்த, 43 வயதாகும் வினோத் நிகோலே தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு, இவருடைய கடைக்கு ஒருமுறை முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான எல்.பி. தன்கர் வந்திருக்கிறார். இவரைப் பார்த்தவுடனேயே, தன்கருக்குப் பிடித்துப்போய்விட்டது. வினோத் நிகோலேயின் சுபாவத்தைக் கண்ணுற்ற தன்கர் அவரிடம் பேசி, அவரை இடதுசாரி அரசியலின் பக்கம் கொண்டுவந்துவிட்டார். தற்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வினோத் நிகோலே, இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் சொத்து வைத்துள்ளவரும் பாஜக எம்எல்ஏ-வாக இருந்தவருமான பாஸ்கல் தனரேயை எதிர்த்துப் போட்டியிட்டு 72 ஆயிரம் வாக்குகள் பெற்றும், அவரைவிட 4 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றும் வெற்றி பெற்றுள்ளார். பால்கார் மாவட்டத்தில் உள்ள தகாணு பழங்குடியினர் தொகுதி, புகழ்பெற்ற பழங்குடியின மக்களின் வொர்லி எழுச்சி நடைபெற்ற பகுதியில் உள்ளதாகும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியாகும். பால்கார் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 800 குழந்தைகள் இறந்துள்ளதாகப் பதிவாகியிருக்கிறது. சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள், சத்துணவு இல்லாமையே இதற்குக் காரணம் என்று குறைகூறுகிறார்கள். ஆனாலும் இந்தப் பகுதியில் இதிலிருந்து சுமார் இரண்டு மணி நேர பயண தூரத்தில்தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் வாழ்ந்து வருகிறார். தகாணு தொகுதியிலிருந்து மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் சட்டமன்றத்திற்குச் செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லைதான். ஆனாலும் கோடீஸ்வர பாஜக வேட்பாளரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வெற்றி பெற்றுள்ள வினோத் நிகோலே தன் வெற்றி குறித்து மிகவும் தன்னடக்கத்துடன், கம்யூனிஸ்ட்டுகளுக்கே உள்ள அரசியல் பண்புடன், ‘சப்ரங் இந்தியா’ மின்னணு ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலின் சாராம்சம் வருமாறு:
தகாணு தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் என்ன?
வினோத் நிகோலே: என் தொகுதியைப் பாருங்கள். இது அடிப்படையில் ஒரு கிராமப்பகுதி. சுகாதார வசதிகளின்மை இங்குள்ள மக்களுக்கு ஒரு மிகப்பெரும் பிரச்சனையாகும். இங்கே சின்னஞ்சிறிய அளவில் ஒரு மருத்துவமனை (cottage hospital) மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. இதனால் அடிப்படை சுகாதார வசதிகளைக்கூட தன்னைத் தேடி வரும் மக்களுக்கு அளிக்க முடியவில்லை. சிறிய அளவிலான சிகிச்சைக்காகக் கூட 15 மைல் தூரத்தில் குஜராத்திற்கு செல்லுமாறு சொல்லிவிடுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைப் பேற்றிக்காக ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு மாறிச் செல்லும் சமயத்தில் ஏராளமானவர்கள் இறந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அடுத்து, வன உரிமைச் சட்டம் 2006இல் நிறைவேற்றப்பட்டபின்னரும் கூட, இம்மாவட்டத்தில் உள்ள பழங்குடியினரில் 70 சதவீதத்தினருக்கு நிலம் கிடையாது. அவர்கள் இதுவரை பட்டா பெறவில்லை. எங்கள் கோரிக்கைகளில் ஏதோ கொஞ்சம் அமலாகியிருக்கிறது என்றால் அதற்கு எங்கள் போராட்டங்களே காரணமாகும். வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்திட நான் சட்டமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று அவர்களுக்கு உறுதி அளித்திருக்கிறேன். தொகுதிக்குச் செலவளித்திட வேண்டும் என்று கூறி சட்டமன்ற உறுப்பினரிடம் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி அளிக்கப்படும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் இதுவரை இருந்த சட்டமன்ற உறுப்பினர் அந்தத் தொகையை இங்குள்ள மருத்துவ வசதியை மேம்படுத்துவதற்காகவோ, வேறு வசதிகளைச் செய்து தருவதற்காகவோ பயன்படுத்தவே இல்லை.
உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட எம்எல்ஏ ஒரு வசதி படைத்த கோடீஸ்வரர். இந்த நபரை எதிர்த்து போட்டியிட்டு, அவருடைய பண பலத்தையும், புஜ பலத்தையும் வென்றது எப்படி?
உங்களுக்கு நன்றாகவே தெரியும், இந்த நபர், மக்களைச் சந்தித்திட வந்ததே இல்லை. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டதே கிடையாது. நான், கடந்த பதினைந்து ஆண்டு காலமாக கட்சியின் முழுநேர ஊழியராக இங்கே இருந்துகொண்டிருக்கிறேன். எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். எமது கட்சி கடுமையாக உழைத்திருக்கிறது. மக்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் கஷ்டங்கள் என்ன, தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்காக அவர்கள் எப்படியெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று எங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவர்களின் பிரச்சனைகள் முழுமையாக தெரியும். ஒருசில நீண்ட நெடிய போராட்டங்களின் மூலமாக அவர்களின் பிரச்சனைகளில் ஒருசிலவற்றைத் தீர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறோம். மதத்திற்கு அப்பாற்பட்டு நின்று அனைத்து விவசாயிகளுக்காகவும், அனைத்து தொழிலாளர்களுக்காகவும், அனைத்துப் பழங்குடியினருக்காகவும், அனைத்து தலித்துகளுக்காகவும், தொகுதியில் உள்ள அனைத்துத்தரப்பினருக்காகவும் பாடுபடக்கூடியவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே இங்குள்ள மக்கள், என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நான், மக்களின் பிரச்சனைகளுக்காக மிகவும் கடினமாக உழைப்பேன் என்றும் அவற்றைத் தீர்ப்பதற்காக உண்மையாகப் பாடுபடுவேன் என்றும் அவர்களுக்கு நன்கு தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக, இளைய தலைமுறை எங்களிடம் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். என்னால் இந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்ய முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ‘அவர் இளைஞராக இருப்பதோடு மட்டுமலலாமல் நம்பிரச்சனைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு அவற்றுக்காகப் போராடுபவர் என்பதாலும் நாம் அவருக்கே வாக்களிப்போம்’ என்று நினைத்தார்கள். என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்துச் செலவு செய்தார். ஆனாலும் எனக்கு வாக்காளர்களை நன்கு தெரியும். அவர்கள் என்மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவையெல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் தலைவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் தாவ்லே மற்றும் சட்டமன்ற உறுப்பினரான லகானு கோம், எல்.பி. தன்கர் முழுமையாக வழிகாட்டினார்கள். எனவே, நான் மக்களிடம் சென்றேன், அவர்களுடன் நின்று அவர்களுக்காகப் போராடினேன். இப்போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அவர்களின் நம்பிக்கைகள் அதிகமாக இருக்கிறது.
வன உரிமைகள் சட்டம் அல்லாது, வரவிருக்கும் ஆண்டுகளில் வேறென்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன?
மத்திய அரசு முன்மொழிந்துள்ள வல்வன் பண்டார் திட்டத்தை எதிர்த்திட இருக்கிறோம். இந்தத் திட்டம் தகாணுவில் உள்ள நிலங்களை அழித்து, அங்கே வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழித்திடும். ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திடும். முன்பு தகாணுவில் வெப்ப சூர்ய மின் திட்டம் கொண்டுவரப்பட்டபோது, அங்கு அதனால் நிலத்தை இழந்த விவசாய மக்களுக்கும் மீனவ மக்களுக்கும் மாற்று வேலையளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தார்கள். ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இந்தப் பிராந்தியத்திற்கு இந்தத் திட்டம் செழுமையைக் கொண்டுவரும் என்றும் கூறினார்கள். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை. அதேதான் இப்போதும் நடக்கும். எவருக்கும் எதுவும் கிடைக்கப் போவதில்லை. மாறாக, எதிர்கால சந்ததியினருக்காகக் கொஞ்சநஞ்ச நிலம் வைத்திருப்பவர்களிடமிருந்து அவையும் பறிக்கப்படும். இதனைத் தடுத்து நிறுத்திட நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உங்கள் தொடர்பு எத்தனை ஆண்டு காலமாக இருக்கிறது? இடதுசாரி சிந்தனையின் பக்கம் உங்களை ஈர்த்தது எது?
நான் ஒரு பண்ணையாட்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று முன்பே உங்களுக்குக் கூறியிருக்கிறேன். என் தந்தை, ஒரு ஜமீன்தாரின் கீழ் வேலை செய்தார். நான் 6 வயதாக இருக்கும்போது உள்ளூரில் இருந்த ஆச்சார்யா சந்தோஷி பள்ளி என்பதன் விடுதியில் சேர்க்கப்பட்டேன். பின்னர் தண்டேகர் கல்லூரியில் பி.காம். சேர்ந்தேன். எனினும் என் குடும்பத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலே நிறுத்திவிட்டேன். பின்னர் நானும் என் உறவினரான சகோதரர் (cousin brother) ஒருவரும் வடபாவ் (மராத்தியத்தில் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஒரு பலகாரம். உருளைக்கிழங்கை வேக வைத்து அத்துடன் சட்னி, ஒரு மிளகாய் கொடுப்பார்கள்.) மற்றும் தேநீர் வழங்கும் கடை ஒன்றை தகாணு நகரத்தில் வைத்து அங்கே வாழ்ந்து கொண்டிருந்தோம். ஒருநாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் தன்கர், எங்கள் கடைக்கு வந்து தேநீர் அருந்தினார். அப்போது கொஞ்சநேரம் அவர் எங்களுடன் உரையாடலை மேற்கொண்டார். அப்போதுதான் அவர் என்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக வேலை செய்ய வேண்டும் என்றும், அக்கட்சி நடத்தும் இயக்கத்துடன் என்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் நான் ஒப்புக்கொண்டவுடனேயே, கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள விதிமுறைகளின்படி எனக்கு அவர் உறுப்பினர் ரசீது ஒன்றை அங்கேயே கொடுத்தார். நன்கொடையாக பத்து ரூபாய் நான் அவரிடம் கொடுத்தேன். இருப்பினும் என்னால் எந்த அளவிற்குக் கட்சிக்காக வேலை செய்ய முடியும் என்று தெரியவில்லை என்றேன். ஆனால், தோழர் தன்கர் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார். என்னிடம், “உன்னிடம் அதற்கான சக்தி இருக்கிறது, அதற்காகப் போராடுவதற்கான வல்லமை இருக்கிறது, மக்களுக்காக சேவை செய்” என்றார்.
2005இல் கட்சியில் சேர்ந்தேன். பின்னர் முழுநேர உறுப்பினராக மாறினேன். அப்போது எனக்கு கட்சியில் மாதம் 500 ரூபாய் கொடுத்தார்கள். இப்போது அது 5 ஆயிரம் ரூபாயாகி இருக்கிறது. என் மனைவி உள்ளூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார். அவருக்கும் கிட்டத்தட்ட அதே அளவிற்கு ஊதியம் வருகிறது. இதில்தான் நாங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். அதனால்தான் நான் வங்கிக் கணக்கு எதுவும் தொடங்க வேண்டிய தேவையில்லை என்றே நினைத்தேன். நான் வேட்பாளராகப் போட்டியிட தீர்மானிக்கப்பட்டபோதுதான் வங்கிக் கணக்கு திறந்தேன். (சிரிக்கிறார்).
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2018இல் நடைபெற்ற நீண்ட பயணத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?
மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் இருநூறு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த அந்தப் போராட்டத்தில் நானும் முழுவதுமாக நடந்து வந்தேன். தகாணுவில் உள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எங்கள் உரிமைகளுக்காக தலைமை செயலரால் கையெழுத்திடப்பட்ட ஆவணங்களை நாங்கள் எடுத்துக்கொண்டோம். எனவே நாங்கள் உறுதியாக போராடினோம். எங்கள் தலைவர்கள் மற்ற கட்சிகளில் உள்ளவர்களைப் போல், “நீங்கள் நடந்துவாருங்கள், நாங்கள் காரில் வருகிறோம்” என்று சொல்பவர்கள் அல்ல. அவர்களும் எங்களுடனேயே நடந்து வந்தார்கள். டாக்டர் அசோக் தாவ்லே எங்களுடன் நடந்து வந்தார். ஜே.பி. காவிட் எங்களுடன் நடந்து வந்தார். நாங்கள் அனைவரும் சேர்ந்தே நடந்து வந்தோம்.
நன்றி: சப்ரங் இந்தியா
- தமிழில்: ச.வீரமணி