tamilnadu

img

காந்தியிடமிருந்து மார்க்சியத்துக்கு - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

(மகாத்மா காந்தியின் 125 ஆம் பிறந்தநாளன்று  இஎம்எஸ் எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள்)

காந்திஜி ஒரு தேசிய தலைவராவதற்கு முன்பே மார்க்சியக் கருத்துக்கள் இந்தி யாவில் பரவத் தொடங்கியிருந்தது. வட இந்தியாவில் லாலா ஹர்தயாளும் கேரளத்தில் ‘சுதேசாபி மானி’ ராமகிருஷ்ணபிள்ளையும் மார்க்சின் ஆளுமையும் பார்வையும் கொண்ட நூல்களை வெளியிட்டனர். பத்தாண்டு களைக் கடந்த பின்னரே மகாத்மா தனது தலைமையில் நடந்த தேசிய போராட்டங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தது. காந்திஜி என்கிற மனிதரும் அவரது பார்வையை முன்வைத்த நடவடிக்கைகளும் இந்திய மக்களிடம் செல்வாக்கு செலுத்த தொடங்கிய காலத்தில் காந்திய அரசியல் இந்தியாவில் வடிவம் பெறத் தொடங்கியது என்பதே அதன் பொருள். எஸ்.ஏ.டாங்கே மும்பையிலும் முசாபர் அகமது கொல்கத்தாவிலும் சிங்கார வேலர் சென்னையிலும்  கம்யூனிஸ்ட் குழுக்களை உருவாக்கி செயல்படத் தொடங்கியது, மகாத்மா காந்தியின் தலைமை யில் ஒத்துழையாமை- கிலாபத் இயக்கங்கள் தொடங்கப் பட்டதும் ஒரே காலகட்டத்தில்தான். அப்போதுதான் இந்தியா வில் முதலாவது தொழிலாளி வர்க்க அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) உருவானது.  இந்த காலக்கட்டத்தில்தான் பத்து வயது சிறுவனாக இருந்த நான் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டேன். அன்று நான் டாங்கேவையோ, முசாபர் அகமதையோ, சிங்காரவேலரை யோ அறிந்திருக்கவில்லை. கம்யூனிசம் அல்லது மார்க்சியம் எனது பார்வையில் இல்லை. ஆனால், மகாத்மா காந்தியை யும், அலி சகோதரர்கள் மற்றும் பிற ஒத்துழையாமை இயக்கத் தலைவர்கள் பற்றி அன்று கிடைத்துவந்த பத்திரிகைகள் மூலம் படித்து அறிந்து கொண்டேன். அதில் மிகப் பெரிய தலை வர் மகாத்மா காந்தியாக இருந்ததால் நான் ஒரு ‘காந்தி பக்த னாக’ மாறினேன். பத்தாண்டுகளுக்கும் மேலாக அவ்வாறு தொடர்ந்தேன். 

`நேரு வழியாகவே

ஆனால், அதற்கிடையே நான் நேருவைக் குறித்து அறி யத்தொடங்கினேன். அவரது சொற்பொழிவுகளை கேட்டதும் அவரைப்பற்றிய சில புத்தகங்களை படித்ததும் என்னை அவர்பால் ஈர்த்தது. நான் எழுதி பிரசுரமான முதலாவது நூல் நேருவின் வாழ்க்கை வரலாறாகும். நேருவிடமிருந்தே ரஷ்யா குறித்தும் அங்குள்ள சோசலிச நடைமுறைகள் குறித்தும் நான் முதன்முதலாக புரிந்துகொண்டேன். இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் 1932இல் நான் சிறை சென்றேன். முதல் ஒரு மாதம் கண்ணூரிலும் பிறகு ஒன்றரை ஆண்டுகள் வேலூரிலும் சிறை வாசம்.  வேலூர் சிறைக்கு சென்றபோது பகத்சிங்கின் மற்றொரு கூட்டாளியும் பாஞ்சாபைச் சேர்ந்தவருமான ஒரு புரட்சிகர சிறைக் கைதியையும் நான் சந்தித்தேன். இந்தியாவின் முதலா வது மத்திய தொழிற்சங்கமான அகில இந்திய தொழிற் சங்க காங்கிரசின் பொதுச் செயலாளரான ஒரு தோழரையும் நான் கண்டேன். இவையெல்லாம் என்னை காந்தியத்திலி ருந்து இடதுசாரி அரசியல் புரட்சிக்கு செல்ல வழிவகுத்தது. 

வேலூர் சிறை...

எனது அரசியல் முன்னேற்றத்தில் முக்கியத்துவம் வகிக் கும் மற்றொரு சம்பவம் தென் இந்தியாவின் பிரபலமான காந்திய தலைவர்களான ராஜாஜி, டாக்டர் பட்டாபி, கொண்ட வெங்கடப்பய்யா, புளுசு சாம்பமூர்த்தி போன்றவர்களின் தொடர்பும் கருத்து பரிமாற்றமும் ஆகும். பெரும்பாலான நாட்களில் டாக்டர் பட்டாபி நடத்திய வகுப்புகள் சக கைதி களைப் போலவே என்னையும் வளர்த்தது. இவ்வாறு ஒரு புறம் இடதுசாரி புரட்சிகர அரசியலும் மற்றொரு புறம் காந்திய அரசி யலும் தெளிவாக பயில வேலூர் சிறையில் இருந்த ஒன்றரை வருட காலம் எனக்கு உதவியது.  காந்தியிசத்திலிருந்து நேருயிசத்தின் வழியாக மார்க்சி யத்துக்கான எனது முன்னேற்றம் நடந்த காலம் அது. இந்த சூழலில் சிறையிலிருந்து வெளியில் வந்தபோது காந்தியி சத்தையும் நேருயிசத்தையும் கடந்து புரட்சிகர நிலைப் பாட்டுக்கு நான் வந்திருந்தேன். அதனால்தான் ஜெயப் பிரகாஷ் நாராயணனின் தலைமையில் உருவான ‘காங்கி ரஸ் சோசலிஸ்ட் கட்சி’யில் நான் ஒரு ஸ்தாபக தலைவராக உயர்ந்தேன். அந்த அளவிலான எனது செயல்பாடுகளின் இடையே இந்திய கம்யூனிஸ்ட்டுகளுடன் ஏற்பட்ட உறவு என்னை காங்கிரஸ் சோசலிஸ்ட்டிலிருந்து கம்யூனிஸ்ட்டாக உயர்த்தியது. முறையாக 1936இல் நான் கம்யூனிஸ்ட் கட்சி யில் உறுப்பினரானேன்.

மதிப்பது போலவே விமர்சிக்கவும்

என்றாலும், காந்தியிசத்திலிருந்து மார்க்சியத்திற்கு சென்ற நான் காந்திஜியை இன்றும் மதிக்கிறேன். ஆங்கிலேய ஏகாதி பத்தியத்துக்கு எதிராக இந்திய மக்களை திரட்டுவதில் – அவரது வார்த்தைகளில் ‘தரித்திர நாராயணர்களான’ விவசாயிகளை களத்தில் இறக்குவதில்  அவர் வகித்த பங்கு மகத்தானது. அவர்  பிடிவாதமாக பின்பற்றிய சத்தியம், அகிம்சை, தரித்திர நாராயண சேவை போன்றவற்றை அவர் தேச விடுதலைப் போரில் வலுவான அடித்தளம் அமைப்பதற்கு பயன்படுத்தி னார். நான் உட்பட தொழிலாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கும் இது உதவியது. எனவே நான் ஒருபோதும் காந்தியை வெறுக்க முடியாது.   ஆனால், காந்தியிசத்திலிருந்து மார்க்சியத்துக்கு சென்ற நான் காந்திஜியை மதிப்பது போலவே அவரை விமர்சிக்கவும் செய்கிறேன். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டுவதில் மகத்தான வெற்றிபெற்ற அவர் தனது அழைப்பை ஏற்று திரண்டு வரும் கோடிக்கணக்கான மக்களின் புரட்சிகர வழிகளை அங்கீகரிக்க மறுத்து அவர்களை தடுப்பதிலும் அவர் வெற்றி பெற்றார். அவரது தலைமையில் நடந்த தேச விடுதலைப்போர் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினரும் ஆங்கிலேய அரசும் தமக்குள் சமரசம் செய்து கொள்வதில் முடிந்தது. தான் தலைமையேற்று நடந்த விடுதலைப்போர் உண்மையில் வெற்றியை அல்ல, தோல்வியையே அடைந்தது என்பது  அவருக்கு புரிந்தது.    
 

தனித்துக் காட்டியது...

இதுதான் அவரை மற்ற காங்கிரஸ் தலைவர்களிலிருந்து வேறுபடுத்தி காட்டியது. அவர்கள் கையில் கிடைத்த சுதந்தி ரத்தை சுயநலன்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருந்த போது, அவர் இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் விளைவு களால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் துடைக்க ஓடிக் கொண்டிருந்தார். காங்கிரஸ் ஒரு ஆளும் கட்சியாக தொடர்ந்தால் நாடு நாசமாகவே செய்யும் என்பதைக் காண அவருக்கு கண்கள் இருந்தன. அவரது வாழ்வில் மிக உயர்ந்த அத்தியாயம் ஆகஸ்ட் 15க்கு சற்று முன்பும் பின்ன ரும் மற்ற காங்கிரஸ் தலைவர்களிலிருந்து வேறுபட்டு நின்ற அவரது நிலைபாடுகளே என்று நான் கருதுகிறேன். அதற்காக வும் நான் அவரை மதிக்கிறேன். ஆனால், இந்த நிலையிலும் அவரது பார்வையில் கடுமையான பிழைகள் இருந்தன.  விடுதலைப் போராட்டம் நடந்த காலகட்டத்திலேயே அருமையான சீடர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் எதனால் விடுதலையைத் தொடர்ந்து அதிலிருந்து விலகிச் சென்றனர் என்பதை சுயமாக கேள்வி எழுப்பி விடைகாண அவரால் முடியாமல் போனது. கால் நூற்றாண்டு காலம் தான் பிடிவாதமாக கொண்டிருந்த சமூக ஒற்றுமை (குறிப்பாக இந்து-முஸ்லிம் ஒற்றுமை) தகர்ந்ததில் துயரம் கொள்வதைத் தவிர அது எதனால் தகர்ந்தது என்று அறிந்து கொள்ள அவரால் இயலாமல்போனது. இதுதான் காந்திய தரிசனத்தின் அடிப்படையான துயரம்.

தடையாக மாறிய தார்மீக நியதிகள்

ஒரு மார்க்சிஸ்ட் என்கிற நிலையில் இந்த கேள்விகளுக்கு என்னால் விடைகாண முடிகிறது. காந்தியின் சீடர்கள் என்று கூறப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பூர்சுவா வர்க்கத்தின் பிரதி நிதிகளாவர். காந்தி உயர்த்திப்பிடித்த சத்தியம், அகிம்சை, தரித்திர நாராயண சேவை போன்றவையெல்லாம் இந்தியா வின் கோடிக்கணக்கான மக்களை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழச்செய்ததிலும் அவர்களை புரட்சிப்பாதை க்கு செல்லாமல் தடுப்பதிலும் உதவியது. அந்த அளவில் சுதந்திர போராட்ட காலத்தில் காந்திய வழிகளை முழுமை யாக அவர்கள் பின்பற்றினர். ஆனால், விடுதலையைத் தொடர்ந்து தாங்கள் ஆளும் வர்க்கமாக மாறியதோடு சத்தியம் அகிம்சை, தரித்திர நாராயண சேவை போன்ற காந்திய அடிப் படைகள் அவர்களுக்கு அருவருப்பாகிவிட்டன. முந்த்ரா ஊழல் முதல் பங்கு, வங்கி ஊழல் வரை ஏராளம் முறைகேடு கள் நடத்திய இந்த காந்தி சீடர்களுக்கு இறுதி காலத்தில் காந்திஜி தூக்கிப்பிடித்த அடிப்படை தார்மீக நியதிகள் தடையாக மாறின. 

பொதுவான சமூக ஒற்றுமை குறிப்பாக இந்து முஸ்லிம் ஒற்றுமை என்பதை காந்திஜி பார்த்தது அந்தந்த சமுதாயங்களில் உயர் அடுக்கில் உள்ளவர்களின் நட்பு என்பதாகத்தான். உழைக்கும் மக்கள் பகுதியினரான, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், பிற்பட்ட சமூகத்தி னர், மத சிறுபான்மையினரான கோடிக்கணக்கான மக்கள் அந்தந்த சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்களுடன் மாறுபட்டிருப்பதை அவர் பார்க்கவில்லை. இந்த பலவீனத் தைப் பயன்படுத்தி, வெவ்வேறு சாதி மதத்தைச் சேர்ந்த உயர டுக்கினர் தமக்குள் மோதிக்கொள்ள ஆங்கிலேய ஆட்சியின் அதிகாரிகள் உதவினர். அவர்களை ஒற்றுமைப்படுத்துவதில் தான் தோல்வி அடைந்ததை அவரால் காண முடியவில்லை.

தேசாபிமானியிலிருந்து  தமிழில்: சி.முருகேசன்