tamilnadu

img

தோழர் அமீர் ஹைதர் கான் தலைவர்களின் மாபெரும் தலைவர் - ஜோ.ராஜ்மோகன்

இதே காலத்தில் வி.கே.நரசிம்மன் மூலம் தோழர் கே.பாஷ்யம் (ஆர்யா) அமீர் ஹைதர் கானுக்கு அறிமுகமானார். பொறியியல் மாணவர் கோபாலை பாஷ்யம், கானுக்கு அறிமுகப்படுத்தினார். கோபால் எங்கிருந்தோ ஒரு தட்டச்சுப்பொறியை கொண்டு வந்தார். தட்டச்சு வேலைகள் அதில்தான் நடைபெற்றன. சாந்தி நிகேதனில் படித்த குடாபக்ஸ் எனும் ஒரு இஸ்லாமிய இளைஞர் சைக்ளோஸ்டைல் மெஷின் ஒன்றை கொண்டு வந்து சேர்த்தார்.  இளம் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கொடுத்த நிதி உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அரசும் புரட்சியும், காரல்மார்க்ஸ் வாழ்க்கையும் அவரது போதனைகளும் ஆகியவை சிறு வெளியீடாகவும், பத்திரிகையாகவும் வெளிவந்தன. தோழர்களின் வீடுகளில் மார்க்சியம் குறித்த வகுப்புகளும் ரகசியமாக நடைபெற்று வந்தன. இளம் தொழிலாளர் சங்கத்திற்குள்ளாகவே ரகசியக் குழு ஒன்றை அமீர்ஹைதர் கான் ஏற்படுத்தினார்.  இக்குழுவில் ஜெயராமன், வி.கே.நரசிம்மன், ராஜவடிவேலு, ரஷ்யா மாணிக்கம், கம்பம்பாடி சத்யநாராயணா ஆகியோர் இருந்தனர். இக்குழுவின் செயலாளராக வி.கே.நரசிம்மன் செயல்பட்டார். மாத்யு மூலம் அறிமுகமான வெங்கட்ராமனின் சகோதரர் அஞ்சலகத்தில் வேலை பார்த்தார். அவரது உதவியுடன் கடிதங்களை ரகசிய போலீசார் எப்படி தணிக்கை செய்கின்றனர் என்பதை அறிந்து கொண்டு அத்தகவலைப் பெற்று போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க வழியையும் உருவாக்கினார் கான். எம்.எஸ்.எம். தொழிற்சாலை வேலைநிறுத்தம், பக்கிங்ஹாம் கர்னாடிக் மில் தொழிலாளர்கள் பஞ்சப்படி கேட்டு வேலைநிறுத்தம் ஆகியவற்றுக்கு வழிகாட்டியதோடு அவற்றை முழுமையாக ஆதரித்தார் அமீர் ஹைதர் கான். தொழிற்சங்க போராட்டத்தில் சுப்பாராவ் என்ற தோழர் அறிமுகமானார். லீக் ஆப் யூத் என்ற அமைப்பின் தோழர்களை தோழர் சுப்பாராவ் அமீர் ஹைதர்கானுக்கு அறிமுகப்படுத்தினார். லீக் ஆப் யூத் அமைப்பைச் சேர்ந்த பல தோழர்களை கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபாடுகொள்ளச் செய்தார் கான். அப்படி மிகச்சிறந்த ஊழியராக உருவானவர்தான் அச்சமாம்பாள் என்ற பெண்மணி. இவர் எம்.பி.பி.எஸ் பயின்று மிகச்சிறந்த மருத்துவராகவும் ஒரு கம்யூனிஸ்ட்டாகவும் சேவையாற்றினார். தெலுங்கு மொழியில் நிறைய நூல்களை எழுதியுள்ளார். தோழர் சுப்பாராவ் மற்றொரு உறுதிமிக்க தேசியவாதியாக இருந்த வ.சுப்பையாவை அமீர்கானுக்கு அறிமுகப்படுத்தினார். புதுச்சேரி பண்டையக் காலத்தில் பொதுக்கே என்று அழைக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டு முதல் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருந்தன. 1954அக்டோபர் 20 ஆம் நாள் இந்திய யூனியனுடன் இப்பகுதிகள் இணைக்கப்பட்டன. பிரெஞ்சிந்திய விடுதலை இயக்கத்தின் தந்தையாக போற்றப்பட்டார் வ.சுப்பையா. 1932 ஆம் ஆண்டுக்கு பிறகு சமூக அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடலானார். மிதவாத காங்கிரஸ் மீதான விமர்சனமும் இவருக்குள் கனன்று கொண்டே இருந்தது. இக்காலத்தில்தான் அமீர் ஹைதர்கான் சந்திக்கிறார். அதன்பிறகே கம்யூனிஸ்ட் கட்சி மீதான பற்று ஏற்படுகிறது. அமீர் ஹைதர்கானோடும், பி.சுந்தரய்யாவோடும் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவது குறித்து மிக தீவிரமாக விவாதித்தார். காந்திய கோட்பாடுகளிலிருந்து விலகி மார்க்சிய லெனினிய கோட்பாடுகளுக்கு வ.சுப்பையா மாறியது இப்படித்தான். பிரெஞ்சிந்திய விடுதலை இயக்கத்தின் தந்தையாக விளங்கியவர். தென்னகத்தின் மிகப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் விடுதலை பெற்ற பின்னர் அமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும் தோழர் வ.சுப்பையாவின் வரலாற்றையும் பிரிக்க முடியாது. இப்படிப்பட்ட மகத்தான ஆளுமையை ஈர்த்ததிலும் கம்யூனிஸ்ட்டாக மாற்றியதிலும் தோழர் அமீர்ஹைதர் கானுக்கு பெரும் பங்குண்டு. மாணவப் பருவத்தின்போது தேசிய இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்ட தோழர் பி.சுந்தரய்யா 1928 சைமன் கமிஷன் புறக்கணிப்பு போராட்டங்களில் பங்கேற்றிருந்தார். சென்னை லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாணவர்கள் நடத்திய சுதந்திர தின ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். உப்பு சத்தியா கிரகப் போராட்டத்தில் 2 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் சிறுவர் சீத்திருத்த பள்ளியில் தஞ்சாவூர், திருச்சி, ராஜமகேந்திரபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் தண்டனை காலத்தை கழித்தார். 1931ல் காந்தி. இர்வின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார். பெங்களூரில் தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் பயின்று வந்த சுந்தரய்யாவை காண்பதற்காக தோழர் அமீர் ஹைதர்கான் பெங்களூர் சென்றார். சுந்தரய்யாவை சென்னையில் சந்திக்க முடியாமல் போனது பற்றி அமீர் ஹைதர்கான் வருத்தம் தெரிவித்ததோடு நீண்ட உரையாடலை அவரோடு நடத்தினார். இப்படித்தான் மார்க்சியத்தின்பால் சுந்தரய்யா ஈர்க்கப்பட்டார். தனது  உறவினர் வீட்டில் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டையும் கல்லூரிப் படிப்பையும் உதறிவிட்டு தனது ஊருக்கு சென்றார் சுந்தரய்யா. 1934ல் பம்பாய் சென்று சென்னை திரும்பிய ஹைதர்கான், பிரிட்டிஷ் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை ஹைதர்கானுக்கு இருந்தது. மீண்டும் பம்பாய் பயணமாவதற்கு முன்பு தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் சுந்தரய்யா என்ற அமைப்பாளரை - புரட்சிக்காரனை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியில் தென்னிந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என அமீர் ஹதர்கான் சிபாரிசு செய்தார். 1934ஆகஸ்ட் 31ல் அமீர் ஹைதர்கான் கைது செய்யப்பட்டார். மறுநாளே சென்னை மாகாண போலீசார் நெல்லூர் ஜில்லாவிலுள்ள தோழர் சுந்தரய்யாவின் வீட்டில் சோதனை நடத்தினார். அமீர் ஹைதர்கான் கைதான பின்பு பம்பாய் தோழர்களுடன் தொடர்பு கொண்டார் சுந்தரய்யா. தென்னிந்தியாவின் பிரதிநிதியாக கட்சியின் மத்திய கமிட்டியில் இணைக்கப்பட்டார். 1935 ஜனவரியில் அச்சுத் தொழிலாளர்களின் அகில இந்திய மாநாட்டினை சென்னையில் நடத்தினார். சுந்தரய்யா, போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவே கட்சிப் பணியாற்றினார். பின்னர் ஆந்திராவின் தனிப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவராய் வீரம்செறிந்த தெலுங்கானா போராட்டத்திற்கு தலைமையேற்றார். பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக திறம்பட பணியாற்றினார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதில் தோழர் பி.சுந்தரய்யாவின் பங்கு மகத்தானது. ஒரு சரியான நபரிடம் தத்துவார்த்த தெளிவையும் அர்ப்பணிப்பு உணர்வை உருவாக்கியதோடு பொருத்தமான நபரை அடையாளம் கண்டு மகத்தான தலைவராக உருவாக்கிய பெருமை தோழர் அமீர் ஹைதர்கானையே சாரும்.

;