tamilnadu

img

சென்னையில் இயல்பை விட காற்றில் 5 மடங்கு அதிகமாக பாதரசம் அளவு

சென்னையில் இயல்பை விட 5 மடங்கு அதிகமாக வாயு வடிவிலான பாதரசம் காற்றில் கலந்திருப்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆராய்ச்சி படிப்புகள் தொடர்பான இன்ஸ்டியூட் ஆஃப் ஓசன் மேனேஜ்மெண்ட் (ஐஒஎம்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாதரசம் என்பது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் இருக்கும். வெப்பம் அதிகரிக்கும் போது அது வாயு நிலையில் காற்றில் கலந்துவிடும். பொதுவாக காற்றில் பாதரச வாயு, 1.5 நானோ கிராம்/ கியூபிக் மீட்டர் அளவில் காற்றில் கலந்திருக்கும். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐஒஎம், ”உலகளாவிய பாதரச கண்காணிப்பு முறை” என்ற திட்டத்தின் கீழ் பாதரச வாயு ஆய்வு 67 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் கொடைக்கானலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வில், பாதரச மாசுபாடு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கொடைக்கானலில் 1.53 நானோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவு பாதரச வாயு காற்றில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. சென்னையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இயல்பை விட 5 மடங்கு அதிகமாக 20 நானோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவு பாதரச வாயு காற்றில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. 

அதிகாலை 3 மணி முதல் 8 மணி வரை வளிமண்டலத்தின் கீழடுக்கு பூமிக்கு மிக நெருக்கமாக அமைவதால், அந்த நேரத்தில் பாதரச செறிவு அதிகமாக இருக்கலாம் என ஐஒஎம் இயக்குநர் எஸ்.ஸ்ரீநிவாசலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் காற்றில் பாதரச வாயு அதிகமாக இருப்பதற்கு, தொழிற்சாலை மாசுபாடுகள், கடலுக்கு நெருக்கமாக இருப்பது ஆகியவை காரணமாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, நிலக்கரி பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கழிவுகளை கொட்டும் இடங்கள் அமைந்திருப்பதால் வடசென்னையில், 250 பேரின் முடி, சிறுநீர், தொப்புள்கொடி ரத்தம் ஆகியவற்றின் மாதிரிகளை திரட்டி பாதரச வாயு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்கிறது.


;