tamilnadu

img

இந்தியாவின் சார்லஸ் டிக்கன்ஸ் முற்போக்கு எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த்- எஸ்.ஏ.பெருமாள்

12.12.1905-ல் பெஷாவரில் பிறந்த முல்க்ராஜ் ஆனந்த் லண்டன் கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையிலும், அமிர்தசரசில் கல்சா கல்லூரியில் ஆனர்சும் படித்தவர். லண்டனில் படிக்கும் போதே ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதத் துவங்கினார். அவரது கதாநாயகர்கள் இந்தியாவில் பாரம்பரியமாய் சூத்திர சாதி மக்கள்தான். அக்காலத்தில் இவரது தோழர்களான ஆர்.கே.நாராயண். அகமது அலி, ராஜாராவ் ஆகியோரும் ஆங்கிலத்திலேயே எழுதினர். ஆனந்த் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் இந்திய ஆங்கில வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டன. ஆனந்த் எழுதத் துவங்கியது முதலில் சாதிக் கொடுமைகள் பற்றித்தான். ஒரு முஸ்லிம் பெண்ணுடன் சேர்ந்து சாப்பிட்டது குற்றம் என்று கூறி ஆனந்தின் அத்தையை ஊரை விட்டு தள்ளி வைத்தனர். இதனால் மனமுடைந்த அத்தை தற்கொலை செய்து கொண்டார். கொடுமையான ஊர்முடிவை எதிர்த்து அவரது கட்டுரை வெளியானது. அவரது முதல் நாவல் “தீண்டாமை” 1935-ல் வெளியானது. அது ஒரு மலம் அள்ளும் தொழிலாளியின் வாழ்வு பற்றிய கதை. அந்த தொழிலாளியின் பெயர் பக்கா. பக்கா ஒருநாள் தற்செயலாக ஒரு மேல்சாதிக்காரனை சந்தித்து தங்கள் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி பேசுகிறான். அதற்கு அவன் இதெல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கிறது என்று பதிலளித்தான். பின்பு கிறிஸ்தவ மிஷனரியுடன் விவாதித்தும் இந்த இழிதொழிலை நீக்க அவர்களிடமும் வழியில்லை என்பதை பக்கா உணருகிறான். மகாத்மா காந்தி தீண்டாமைக் கொடுமைகள் ஒழிய வேண்டுமென்று கூறியதையும் கேள்விப்பட்டான்.

இதுகுறித்து படித்த மனிதர்களிடமும் விவாதிக்கிறான். நாவலின் இறுதியில் ஆனந்த் எல்லா வீடுகளிலும் பிளவுஸ்அவுட் கக்கூஸ் அமைத்தால் மலம் அள்ளும் வேலையை ஒழிக்கலாம் என்று கருதுகிறார்.  இந்த நாவல் தீண்டாமைக் கொடுமைகளையும் , மலம் அள்ளும் வேலையையும் அதனால் வரும் அருவருப்பான வாழ்வையும் சித்தரிக்கிறது. இந்த நாவலுக்காக ஆனந்தை அவரது ஐரோப்பிய நண்பர்கள் இந்தியாவின் சார்லஸ் டிக்கன்ஸ் என்று அழைத்தனர். இந்த நாவலுக்கு பிரபல ஆங்கில எழுத்தாளர் இ.எம்.பாஸ்டர் முன்னுரை எழுதினார். டி.எஸ்.இலியட்டின் பத்திரிகையில் நாவலைப் பாராட்டி பாஸ்டர் எழுதினார். லண்டனில் வாழ்ந்த போதே இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து நிறைய எழுதினர். அப்போது பின்னர் ராணுவ அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் பத்திரிகையாளராக, நாவலிஸ்டாக ஆனந்தின் நண்பராக இருந்தார். அவர் தீவிர இடதுசாரியாக இருந்தார். ஸ்பானிஷ் உள்நாட்டுப் போருக்கு மேனன் தொண்டராகப் போனார். மேனன் மூலம் ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் ஆனந்தின் நண்பரானார். ஆனந்தின் “வாளும் அரிவாளும்” நாவலைப் படித்து விட்டு ஆர்வெல் “ஆங்கிலேயரல்லாத ஒருவரின் ஆங்கில நாவல் அதன் சொந்தக் கலாச்சார விழுமியங்களைக் கொண்டதாக சிறப்பாக உள்ளது” என்று பாராட்டினார். ஆனந்த் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோவின் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரது ஓவியங்களை இறுதிவரை தன்னுடன் வைத்திருந்தார்.  1947-ல் அவர் இந்தியா திரும்பினார். இங்குவந்தபின்பும் கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறுகள், நாவல்கள், சிறுகதைகளை இந்தியில் எழுதினார்.

அவரது ஆங்கில நாவல்களில் “கிராமம்”, கறுப்பு நீரின் குறுக்கே, வாளும் அரிவாளும் முக்கியமானவை. “கூலி, ஒரு இந்திய இளவரசனின் தனிவாழ்க்கை” போன்ற நாவல்கள் இந்தியாவில் எழுதப்பட்டவை. ‘பாதை’ என்ற பத்திரிகையை நடத்தினார். பல்கலைக்கழகங்களில் சிறப்பு வகுப்புகள் எடுத்தார். 1970 -ல் அவர் சர்வதேச முன்னேற்ற அமைப்பில் இயங்கினார். கலாச்சாரம், சுய விழிப்புணர்வு நாடுகளுக்கிடையே வரவேண்டும் என வலியுறுத்தும் அமைப்பு அது. 1974-ல் ஆஸ்திரியாவில் நடந்த மாநாட்டில் “நாகரீகங்களுக்கிடையிலான உரையாடல்” என்ற தலைப்பில் பேசியதற்காக மாநாடு அவரைப் பாராட்டியது. மேலும் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, ரவீந்திர நாத் தாகூர் பற்றி பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவர்களது முக்கியத்துவம், சாதனைகள், மனிதாபிமானம் குறித்தவற்றை விளக்கிப்பேசினார்.  1953-ல் தனது சொந்த வாழ்வையே “இந்திய இளவரசனின் தனிவாழக்கை” என்ற நாவலாக எழுதினார். எஞ்சிய காலத்தில் அவர் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நாவலில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை ஏழு தொகுதிகளாக “மனிதனின் ஏழு சகாப்தங்கள்” என்று தலைப்பிட்டிருந்தார். ஆனால் அவரால் நான்கு சகாப்தங்களை மட்டுமே எழுத முடிந்தது. “காலை முகம், ஒரு காதலரின் வாக்குமூலம் , குமிழி” போன்றவற்றை இறுதிக் காலத்தில் எழுதிமுடித்தார். இவற்றில் ஆன்மீகம் குறித்த தனது கண்ணோட்டங்களை எழுதினார். ஆனந்த் வாழ்நாள் முழுவதும் சோசலிஸ்டாகவே வாழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருந்து ஏகாதிபத்தியத்தையும், இந்திய சமூகத்தின் அவலங்களையும் எதிர்த்தே எழுதினார். இலக்கியத்தையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். 1950-ல் மும்பையில் ஷிஜின் என்ற பார்சி பரதநாட்டியப் பெண்மணியை மணமுடித்தார். 98 வயது வரை வாழ்ந்து 28.9.2004 -ல் காலமானார். இந்திய இலக்கிய வரலாற்றி முல்க்ராஜ் ஆனந்தின் படைப்புகள் என்றும் நிலைத்திருக்கும்.

;