tamilnadu

img

செய்யாமலே செய்தது போல் மக்களை அரசு வஞ்சிக்கலாமா? - ஏ.லாசர்

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் கிராமப்புற உழைப்பாளிகளை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. ஆனால் சட்டமன்றத்தில் பேசும் போதும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போதும், மக்கள் மத்தியில் பேசும்போதும் நடக்காததை செய்யாததை, திறம்பட செய்ததுபோல் ஆட்சியாளர்கள் பாவனை செய்து பேசுவதில் மகா வல்லவர்களாக இருக்கிறார்கள். ஒன்றுமே இல்லாததை பெரிய சாதனைபோல் இவர்களின் குருநாதர் மோடி எப்படி வாய்ப்பந்தல் போட்டு பேசி வருகிறாரோ அதையே தமிழ்நாட்டில் இவர்களும் செய்து வருகிறார்கள். 

மக்களின் பயம் விழிப்புணர்ச்சி போதாமை, அரசின் தவறுகளை எதிர்த்து போராடுவதில் உள்ள தயக்கம், இவர்களை எதிர்த்து போராடினால், கொடுத்து வருவதையும் நிறுத்தி விடுவார்களோ என்ற அச்சம், மீடியாக்களும் கணிசமான அளவு ஆளுங்கட்சியின் தவறை அம்பலப்படுத்துவதில் ஏதோ ஒரு காரணத்தினால் காட்டும் தயக்கம், இவை அனைத்தும் சேர்ந்து ஆளுங்கட்சியினர், மத்தியிலும், மாநிலத்திலும் வார்த்தை ஜாலத்தின் மூலம் மக்களை திசை திருப்புகிறார்கள். உண்மைக்கு மாறாக பேசி வருகிறார்கள். 

2013ல் தமிழ்நாடே கடுமையான வறட்சியைச் சந்தித்தது. வரலாறு காணாத வறட்சி என்று மீடியாக்களும் பத்திரிகைகளும் அதுகுறித்து செய்தி வெளியிட்டன. உண்மை நிலையும் அதுவே. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு அதுகுறித்து அக்கறையற்று இருந்தது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் சட்டமன்ற உறுப்பினர்களும் மாநிலம் முழுவதும் போராட்டக்களத்தில் இறங்கினார்கள். காவிரி டெல்டா பகுதியில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அனைத்தும் முற்றுகை யிடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வீதியில் இறங்கினார்கள். இந்த போராட்டத்தை காவல்துறையினரால் ஒடுக்க முடிய வில்லை. அந்தளவுக்கு கிராமப்புற மக்களின் எழுச்சி இருந்தது.  அதனால் அரசு இறங்கி வந்து தமிழகத்தில் வறட்சி என்று சட்டமன்றத்தில் அறிவித்தது. அதனால் விவ சாயிகளுக்கான நிவாரணம் போதுமானதாக இல்லை என்றாலும் ஓரளவாவது கிடைத்தது. ஆனால் பல லட்சக்க ணக்கான விவசாயத் தொழிலாளர்கள் பல மாதங்களாக வேலையில்லாமல் வறுமை நிலையில் இருந்தனர். அந்த மக்களுக்கு அரசு எந்த நிவாரணத்தையும் வழங்க வில்லை. குடும்பத்திற்கு  குறைந்தபட்சம் ரூ.5000 வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க தமிழ் மாநிலக்குழு கோரிக்கை விடுத்தது. சட்டமன்றத்திலும் இடதுசாரி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால்தமிழக அரசு கண்டு கொள்ளவே இல்லை. 

வறட்சி என்று அறிவித்தால் 150 நாள் வேலை வழங்க வேண்டும். அரசின் அறிவிப்பில் இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இது அமல்படுத்தப் படவில்லை. அரசிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது அந்த காலங்கள் முடிந்துவிட்டது என்று பதிலளித்தார்கள். அறி வித்ததை அமல்படுத்த வேண்டும் என்ற அக்கறையுடன் ஏழை மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற கவலையுடன் அரசு செயல்படவில்லை. ஆனால் பேச்சில் அம்மாவின் அரசு வறட்சியைப்போக்க போர்க்கால அடிப்படையில் தீர்வு கண்டது என்ற அலங்கார வார்த்தை கள் மட்டும் இருந்தன. 

2017ல் கஜா புயல் பல மாவட்டங்களை உலுக்கி எடுத்தது. டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டது. மக்களின் மொத்த வாழ்வாதாரங்களும் பறிபோனது. இப்படிப்பட்ட நிலையில் மொத்த தமிழக மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த போது, மக்களின் பாதிப்புகளை முழுமையாக கணக்கெடுத்து அறிவிப்பதற்கே சில மாதங்களே அரசு எடுத்துக் கொண்டது. பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பலன் தரக்கூடிய தென்னை, மா, பலா, வாழை போன்ற மரங்கள் முற்றாக அழிந்து போயின. அதற்கான முழு விவரங்களை இன்று வரை கூட அரசு அறிவிக்கவில்லை. 

சாய்ந்த மரங்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் அறிவித்துள்ள நஷ்டஈடையாவது வழங்க வேண்டும் என்று  இன்று வரை கோரிக்கை தொடர்கிறது. ஆனால் அரசு கண்துடைப்பு நடவடிக்கை தான் செய்தது. வீடு இழந்த மக்களுக்கு இன்று வரை முழு மையாக கணக்கெடுத்து வீடுகள் கட்டித் தரப்படவில்லை. ஆனால் லட்சக்கணக்கான மக்களுக்கு நாங்கள் வீடுகளை கட்டித் தருவோம் என்ற அறிவிப்பு மட்டும் ஓங்கி ஒலித்தது.  விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எல்லாம் 150 நாள் வேலை வழங்குவோம் என்று அரசு அறிவித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் 150 நாள் வேலைகள் வழங்கப்படவே இல்லை. விவசாயத் தொழிலாளிகளுக்கு இழந்த வீடுகளும் கட்டித்தரப்படவில்லை. அன்றாட வாழ்க்கையின் தேவை களை ஈடுகட்ட 100 நாள் வேலைத்திட்டத்தையும் அரசு அறி வித்தபடி அமல்படுத்தவில்லை. பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத நிலையே இதிலேயும் நடந்தது. 

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, கிராமப்புற உழைப்பாளிகளான விவசாயத் தொழிலாளிக்கு அரை வயிற்றுக் கஞ்சிக்காக வது வழிகாட்டக்கூடிய 100 நாள் வேலைத்திட்டங்கள் முறையாக எங்கும் நடக்கவில்லை. கேரளம் போன்ற ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர இதே நிலைதான் இந்தியா முழுக்க நீடிக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய 100 நாள் வேலைத்திட்டத் பணத்தை முழுமை யாக கொடுக்காமல் இழுத்தடித்து நிலுவையாக வைத்துக் கொண்டது. மத்திய அரசு பணம் தரவில்லை என்ற காரணத்தை மாநில அரசுகள் சொல்லி 100 நாள் வேலையை ஜாப் கார்டு வைத்திருக்கக்கூடிய அனைவருக்கும் வேலை தராமல் வேலை நாட்களை முடக்கியது. 

300 பேர் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் 30 பேருக்கு மட்டும் வேலைதருவது என்ற நிலையை மேற்கொண்டது. அதுவும் எங்கே தொழிலாளிகள் போராடுகிறார்களோ அங்கே மட்டும் இந்த நடைமுறையை பின்பற்றியது. மற்ற இடங்களில் அரசோ, அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வேலை நாட்களும் குறைந்தன. செய்த வேலைகளுக்கான சம்பளத்தையும் மூன்று மாதம், ஆறுமாதங்கள் பாக்கி வைத்தது. இதை எங்கே, விவசாயத் தொழிலாளர் சங்கம் அமைப்பு ரீதியாக போராடியதோ அங்கே மட்டும் அந்த மக்களுக்கு கொடுக்கிறேன் என்ற வாக்குறுதியை அளித்து விட்டு அதையும் எந்தளவுக்கு செயல்படுத்தாமல் இருக்க முடியுமோ அப்படிப்பட்ட காரியத்தை தான் அரசும், அதிகாரிகளும் செய்தார்கள்.  இவைகளில் கடந்த மூன்றாண்டுகளில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று தணிக்கை குழுக்களின் மூலமாக (ஆடிட் குழு) விவரங்கள் வெளியே வந்தன. ஏறத்தாழ தமிழ்நாட்டில் ரூ.4600 கோடி மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று மாவட்ட வாரியான விபரங்களை தணிக்கைகுழு வெளியிட்டது. இந்த முறைகேடுகளில் வேலை செய்யாமலேயே வேலை செய்ததாக பதிவு செய்தது. வேலைகளை எந்திரங்களை வைத்து காண்ட்ராக்ட் மூலமாக செய்து பல லட்சக்கணக்கான ரூபாய்கள் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது. 

பண்ணைக்குட்டைகள் அமைப்பதில் சிறிய குட்டை களை அமைத்துவிட்டு பெரிய பண்ணைக்குட்டைகளை அமைத்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. 100 பேர் வேலை செய்திருந்தால் 1000 பேர் வேலை செய்தார்கள் என்று ஜாப்கார்டுகளிலேயே முறைகேடு செய்து தொழி லாளிகளிடம் வெறும் கையெழுத்துக்களை மட்டும் வாங்கிக் கொண்டு அவர்களிடம் கார்டுக்கு 50, 100 ரூபாய் என்று பணத்தை கொடுத்து ஏமாற்றிய மிகப் பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன என்ற விவரங்கள் வந்துள்ளன. இது சம்பந்தமான முறைகேடுகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆடிட் குழு தமிழக அரசை கேட்டுக் கொண்டும் தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எந்த இடத்திலும் எடுக்கவில்லை. 

100 நாள் வேலைத்திட்டம் என்கிற இந்த சட்டம் வேலை வாய்ப்புகளை கிராமங்களில் உருவாக்கித் தரக்கூடியது. இந்தத் திட்டம் ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால், போராட்டங்களை நடத்தினால், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், போராட்டம் நடத்துகிற இடங்களில் மட்டும் ஏதாவது சில வேலை வழங்கல், நிலுவையில் உள்ள சம்பளத்தை திருப்பி தருதல் போன்ற நடவடிக்கைகளை செய்து செயல்படுவது போன்ற ஒரு தோற்றத்தை காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் முற்றாக தவறை களைவதற்கோ, முறையாக சட்டத்தை அமல்படுத்தி முழுமையாக வேலை வாய்ப்பையும் சம்பளத்தையும் தொழிலாளிக்கு வழங்குவதற்கோ நடவடிக்கை எங்கும் இல்லை.

இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மார்ச் முதல் வாரத்தில் விளக்கப் பிரச்சாரங்கள் நடத்துவது என்றும், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களை திரட்டி மனுக்கள் கொடுத்து தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்து கள நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தங்களுடைய ஆளுங்கட்சியினரையும், சமீபத்தில் உள்ளாட்சி மன்றத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளை பயன்படுத்தி கிராம மக்களிடம் மூன்று மாதம், ஆறு மாதம் தரப்படாத சம்பளத்தை உடனே தருகிறோம், நீங்கள் உடனே வேலைக்கு வாருங்கள். நாங்கள் வேலையும் தருகிறோம், 10ஆம் தேதி போராட்டத்தி ற்கு போகாதீர்கள். போனால் வேலை தரமாட்டோம் என்று சாதாரண மக்களை மிரட்டுகிறார்கள். வேலை தர மாட்டோம் என்கிற அச்சுறுத்தலின் மூலமாக அந்த மக்களை போராட்டக் களத்திற்கு போக விடாமல் நிறுத்தி வைத்திருக்கிற ஒரு சகுனித்தனமான வேலைகளை செய்து கொண்டிருப்ப தாக தமிழ்நாடு முழுவதுமிருந்து தகவல்கள் வருகின்றன. அந்த வேலைகளும் கூட கிராமப்புறத்தில் 30 பேருக்குத்தான்  தருகிறார்கள். அதை சுழற்சி முறையில் தருவோம், மற்ற வர்களும் அடுத்து வேலை கிடைக்கும் என்ற நப்பாசையை ஏற்படுத்தி அந்த மக்களிடம் உண்மையை மறைத்து போராட்டங்களுக்கு போக விடாமல் தடுக்கக்கூடிய காரியத்தை அரசும் கீழிருக்கும் அதிகாரிகளும் செய்தால் இந்த மாநில அரசும் மத்திய அரசும் சட்டத்தை அமல் படுத்துவார்களா? அல்லது சட்டத்தை சிதைப்பார் களா? என்ற கேள்விதான் மக்களிடம் எழுந்துள்ளது. 

ஏற்கெனவே மத்திய அரசு 2019 -20 பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு 71 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ஏறத்தாழ 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மாநிலங்களுக்கு தர வேண்டிய பணத்தை நிலுவையில் வைத்துக் கொண்டது. இப்பொழுது 2020-21ஆம் பட்ஜெட்டிற்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ரூ.61ஆயிரத்து 500 கோடியை மாத்திரம் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்தாண்டு ஒதுக்கிய பட்ஜெட்டிலிருந்து 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயை குறைத்துள்ளது.  மாநில அரககளோ வந்த நிதிகளை சட்டப்பூர்வமாக கொடுப்பதற்கான முயற்சிகளை செய்வதில்லை. அந்த நிதிகளிலும் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன என்று அரசின் அதிகாரப்பூர்வமான (ஆடிட் குழு) தணிக்கை குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. அந்த தவறுகளை செய்த குற்றவாளிகளின் மீது நடவடிக்கை வரும் என்ற அச்சம் இல்லாத நிலையில் எப்படி இந்த தவறுகள் கலையப்படும் என்ற கேள்விதான் நமக்கு முன் இருக்கிறது. 

எனவே இதற்கு எதிரான வலுவான மக்கள் போராட்டங் கள்தான் இந்த சட்டத்தை பாதுகாக்கும், சாமானிய மக்களை யும் பாதுகாக்கும். இதற்கான போராட்டங்களை நடத்துகிற போது திசை திருப்பும் வேலைகளை மாநிலஅரசு சாமர்த்திய மான பேச்சுகளின் மூலம் திசை திருப்பி விடலாம் என்று கருதுகிறது. அது தோல்வியில்தான் முடியும். உண்மைதான் வெற்றி பெறும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்கள்.

கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், அகில இந்திய 
விவசாயத் தொழிலாளர் சங்கம்

;