tamilnadu

img

பசு குண்டர்களின் அராஜகத்தை கண்டித்து முகநூலில் விமர்சித்த திவிக நிர்வாகி கைது

 கோவை, ஜூலை. 27 – 
நாகை அருகே மாட்டிறைச்சி சூப் குடித்தவரை பசு குண்டர்கள் தாக்கிய சம்பவத்தை கண்டித்து முகநூலில் கருத்து பதிவிட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 
நாகப்பட்டினம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் மாட்டிறைச்சி சூப் அருந்தினார் என்பதற்காக சில இந்து முன்னணியினரால் கடுமையாக தாக்கப்பட்டார். இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் காவல் நிலையம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி சம்பந்தப்பட்ட குண்டர்களை கைது செய்ய வைத்தனர். வடமாநிலங்களில் நடைபெறும் சம்பவத்தைபோல தமிழகத்திலும் பசு குண்டர்கள் தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்தது பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பலர் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். 
இதைப்போலவே திராவிடர் விடுதலை கழகத்தின்  கோவை மாநகர் மாவட்ட செயலாளரான  நிர்மல்குமாரும் இந்து முன்னணியினரின் தாக்குதலை கண்டித்து தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். 
இதுகுறித்து இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த  மணி என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கோவை காட்டூர் காவல்துறையினர் சனியன்று நிர்மல் குமாரை  விசாரணை என்கிற பெயரில் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு இருபிரிவினரிடையே விரோதம் ஏற்படுத்தும் விதமான கருத்துகளை பகிர்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நிர்மல்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிர்மல்குமாரை கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு முன்னிலையில் சனியன்று ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நிர்மல்குமாரை வரும் ஆகஸ்ட் 9 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பிரபு உத்திரவிட்டார். இதனையடுத்து திவிக மாநகர் மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு திக, திவிக, தபெதிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் மற்றும் தலித் அமைப்புகள் இணைந்து வலுவான போராட்டத்தை நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
 

;