tamilnadu

img

ஆசிய தடகள போட்டியில் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை 800மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து வென்றுள்ளார்.


இந்தாண்டின் ஆசிய தடகள போட்டிகள் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று துவங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாளான நேற்று இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. இந்நிலையில், இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக தடகள வீராங்கனை கோமதி வென்றுள்ளார். மேலும், தனது முந்தைய சாதனையாக இருந்த 2:03:21 நிமிட நேரத்தை விட குறைவாக 2:20:70 நிமிட நேரத்தில் இலக்கை கடந்து புதிய சாதனையையும் படைத்துள்ளார்.


தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தின் முடிகண்டம் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் கோமதி. இவர் முறையான பேருந்து வசதி கூட இல்லாத ஏழை விவசாயத் தொழிலாளர் மாரிமுத்துவின் மகள். சில வருடங்களுக்கு தந்தை மறைந்துவிட்டதால் தாயார் ராஜாத்தி விவசாயக்கூலியாக வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். தனது 20 வயது முதல் தடகளத்தில் பங்கேற்றுவரும் இவரின் 10 வருட கால உழைப்புக்கு பின்னர் இந்த சாதனையை அவர் பதித்துள்ளார். தற்போது கோமதி பெங்களூரிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை தேசிய அளவில் பல பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.


;