tamilnadu

தமிழக முதல்வர் அறிவித்த பந்தநல்லூர் துணை மின் நிலையம் எங்கே?

கும்பகோணம், ஏப்.14-தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் தமிழக முதல்வர் அறிவித்தபடி துணை மின் நிலையம் அமைக்காததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பந்தநல்லுாரை சுற்றிலும் சோழியவிளாகம், மரத்துறை, மண்டபம், நெய்குப்பை, அபிராமிபுரம், திட்டச்சேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாகும். இப்பகுதிக்கு ஆடுதுறை, திருப்பனந்தாள், மணல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் குறைந்த மின் அழுத்தத்தினால் விவசாயத்திற்கு போதிய மின்சாரம் இல்லாமல் பயிர்கள் கருகி வந்தன. மக்களும் அவதியடைந்தனர். இதைதொடர்ந்து அப்பகுதி விவசாய அமைப்புகள், அனைத்து அதிகாரிகளுக்கும் தாங்கள் படும் கஷ்டத்தை புகாராக அனுப்பினர்.இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2017 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பந்தநல்லுாரில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். முதல் கட்டமாக இடம் தேர்வு பணி தொடங்க இரண்டு கோடி ஒதுக்கப்பட்டது என அறிவித்தார். ஆனால் அதன் பிறகு அப்பணி கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் போராட்டம் செய்தனர். இதன்பின் மாவட்ட ஆட்சியர், துணை மின் நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்ய வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். ஆனால் இதன்பின் பல மாதங்கள் ஆன நிலையில், பந்தநல்லுாரில் துணை மின் நிலையப் பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு வீடுகளுக்கு இரவில் குறைந்த மின் அழுத்தம் அடிக்கடி ஏற்படுவதாலும், நெல் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்படுவதால், பந்தநல்லுார் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்து குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்டவை திரும்ப ஒப்படைக்கப் போவதாக பந்தநல்லுார் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

;