சென்னை, ஜூன் 17- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிகளை மேம்படுத்த, கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முன்னாள் துணை வேந்தர் வே.வசந்திதேவி, கல்வியாளர் ஜெ.கிருஷ்ண மூர்த்தி, அருணாராணி, இராதெ.முத்து ஆகியோர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களி டம் கூறியதாவது:
கட்டமைப்பு வசதிகள் எங்கே?
தமிழக அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான வற்றில் உள்கட்டமைப்பு மோசமாக இருக்கிறது. கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவ தில்லை. போதிய தண்ணீர் வசதி இல்லை. பல பள்ளிகளில் சுற்றுச் சுவர், கணினி, இணையதள வசதிகள் இல்லை. இவை அனைத்தும் சீர் செய்யப்பட்டு தனியார் பள்ளிகளை விட உயர்ந்த கட்டமைப்பு உள்ளவையாக அரசுப் பள்ளிகளை மாற்ற வேண்டும்.
ஆசிரியருக்கு வேலை கற்பிப்பதே
பல பள்ளிகளில் போதிய ஆசிரியர் இல்லை. தொடக்கப் பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு 2 ஆசிரியர் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. உயர் நிலை, மேல்நிலை பள்ளிகளில் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை இல்லை. கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவ தில்லை. பெரும்பாலான பழங்குடியினர் பள்ளி களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. கற்பித்தலுக்கு அப்பால் பல பணிகள் ஆசிரியர் தலையில் சுமத்தப்படுகின்றன. கற்பித்தல் தவிர வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு கொடுக்கக் கூடாது.
இருமொழிகள்
முன் பருவக் கல்வியை (பிரிகேஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி) மான்டேசொரி (ஆக்கப்பூர்வமான) முறையில் அமைக்க வேண்டும். புதிதாகத் தொடங்கப்படும் எல்கேஜி வகுப்புகளுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியரை நியமிக்க வேண்டும். புதிய பாடத் திட்டம் கற்றல் குறை பாடுள்ள மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் கற்றுத் தர ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்க வேண்டும். கல்வி மொழி தமி ழாகவும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாக வும் கற்பிக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண் மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாகப் பணி புரிய வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகத்தில் பெரும்பங்கு பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளிகள் புறக்கணிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையை மாற்றி, அவற்றை கல்வித் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் உயர் கல்வி சேர்க்கையின் போது எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதில் காட்டுங்கள் இரும்புக்கரத்தை…
தனியார் பள்ளிகள் அனைத்தும் மெட்ரிகுலே ஷன் பள்ளிகள் என்று அழைக்கப்படுவது கை விடப்பட வேண்டும். புதிய சி.பி.எஸ்.இ. பள்ளி களை திறக்க அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். தமிழக த்தில் தனியார் பள்ளிகள் விதிமுறைகளுக்கு கட்டு ப்படாமல் தாராளமாக மீறுகின்றன. ஏராளமான அங்கீகாரமற்ற பள்ளிகளின், அங்கீகாரம் பெறத் தகுதியற்ற பள்ளிகளின் காலக்கெடு ஆண்டுக்கு ஆண்டு நீட்டிக்கப்படுகிறது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும். தனி யார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகளை மாநில அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
மாநில ஆலோசனைக் குழு
கல்வி உரிமைச் சட்டம், 2009ன்படி ஒவ்வொரு மாநில அரசும் கல்வி உரிமைச் சட்டத்தின் விதி களை முறையாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்குவதற்காக மாநில ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். குழுவில் 15க்கு மேற்படாமல் ஆரம்பக் கல்வி மற்றும் குழந்தை வளர்ப்புத் த்துறை வல்லுநர்கள் சேர்க்கப்பட வேண்டும். தமிழக அரசு அத்தகைய ஆலோசனைக் குழுவை இதுவரை நியமிக்கவில்லை. மாநில ஆலோசனைக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும்.
அபாயகரமான கல்விக் கொள்கை
தேசியக் கல்விக் கொள்கை 2019 பல அபாயகரமான அம்சங்களைக் கொண்டிருக் கிறது. இதில் கருத்துக்கூற காலக்கெடுவை 6 மாதங்களாக நீட்டிக்கவும், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலி யுறுத்த வேண்டும். அறிக்கை குறித்த முடி வெடுக்க அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர் களும் கூடும் மாநாடு இம்மாதம் 22ஆம் தேதி தில்லியில் கூடுவதாக அறிவிக்கப்பட்டிருக் கிறது. மேற்சொன்ன இரண்டையும் செய்யாமல் மாநாட்டைக் கூட்டுவது பொருளற்றது என்பதை மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி, மாநாட்டை ரத்து செய்ய முயற்சி எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு பேசி, அவர்களையும் இதே நிலையில் ஒருங்கிணைக்க வேண்டும். மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, இந்த தேசியக் கொள்கை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால் மாநில அரசுகள் கல்வியில் அனைத்து அதிகாரங்களையும் இழக்கும். கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு மாறும் நிலை ஏற்படும்.
இதை அனுமதிக்கப் போகிறோமா?
இன்று நீட் கூடாது என்று போராடி தோற்று விட்டோம். இனி மருத்துவக் கல்விக்கு மட்டு மல்ல அனைத்து உயர் கல்விக்கும், அனைத்து இளநிலை வகுப்புகளுக்கும் மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகள் தேவையற்றவையாகி, மத்திய அரசு நடத்தும் தேசிய சோதனை நிறு வனம் (என்.டி.ஏ) மூலம்தான் சேர்க்கை நடை பெறும். இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? உயர் கல்வி முழுமையாக மத்திய அரசின் கைக்கு மாறும். பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் அனைத்தும் மத்திய நிறுவனங்களின் விதிமுறைகள் படி நடக்கும். புதிய தேசியக் கல்வி கொள்கை அமலுக்கு வந்தால் உலகில் எங்கும் இல்லாத வகையில் மத்திய அரசின் கையில் அதிகாரக் குவிப்பு இருக்கும். எனவே மாநில அரசு இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.