கும்பகோணம், மார்ச் 4- நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மண்ணம்பந்தல் மூங்கில்தோட்டத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கணேசன்(35). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாபநாசம் அடுத்துள்ள ராஜகிரி மேலத்தெருவைச் சேர்ந்த பைரோஸ் பானு (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் மகாலட்சுமி என்ற பெண் குழந்தையும், 2 மாதத்தில் கமர்நிஷா என்ற பெண் குழந்தையும் இருந்தது. கணேசன் தனது மனைவி பைரோஸ்பானுவுடன் திருப்பாலத்துறையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கணேசன் மயிலாடுதுறையில் உள்ள தனது தாய் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதால் அவரை பார்க்க சென்று விட்டார். இதற்கிடையில் கடந்த மார்ச் 1 அன்று பைரோஸ்பானு கணவர் கணேசனுக்கு போன் செய்து, குழந்தை கமர்நிஷா இறந்துவிட்டதாக கூறினார். உடனடியாக கணேசன் திருப்பாலத்துறைக்கு வந்தார். அப்போது தனது குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக கூறி பாபநாசம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் குழந்தையின் உடலை உடற்கூராய்விற்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது குழந்தையின் கழுத்தில் காயங்கள் இருந்ததால் போலீசார் சந்தேகமடைந்து பைரோஸ்பானுவிடம் விசாரித்தனர். விசாரணையில், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்த முகமது தல்கா என்பவருக்கு பைரோஸ்பானுவை மறுமணம் செய்து கொடுக்க பைரோஸ் பானுவின் தந்தை அக்பர்அலி(50), அவரது தாய் மதீனாபீவி(47) திட்டமிட்டனர். இந்த மறுமணத்துக்கு 2 மாத குழந்தை இடையூறாக இருக்கும் என கருதி அதனை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கணேசன் ஊருக்கு சென்றுள்ள நேரத்தில், குழந்தையை அக்பர்அலி, மதீனாபீவி, பைரோஸ்பானு, முகமதுதல்கா(46), ஆகிய நான்கு பேரும் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் பாபாநாசம் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.