tamilnadu

img

நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், நெய்வாசல் மற்றும் கீழஉளூர் பகுதிகளில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், நெல் கொள்முதல் செய்யும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம், “இரண்டு கட்டமாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நெல்கொள்முதல் செய்ய வேண்டும்” என அறிவுறுத்தினார்.  தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை எடை போடும் பணி, ஈரப்பதம் பார்க்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்ட அவர், நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளின் விவரங்கள் குறித்த பதிவேட்டினை ஆய்வு செய்தார்.  நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் நிலத்தின் பட்டா, சிட்டா அல்லது பயிர் காப்பீட்டு அட்டை ஆகியவற்றை கொண்டுவருமாறு அறிவுறுத்திய அவர், விவசாயிகள் தங்களின் ஆவணங்களை எடுத்து வருவது குறித்து வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் அறிவுறுத்துமாறு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், கிடங்குகளுக்கு எடுத்து செல்கையில், மழைநீர் புகாதவாறு தார்பாலின் மூலம் நெல் மூட்டைகளை மறைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

;