tamilnadu

img

கல்வி உதவித்தொகை தேர்வு  200 மீனவ மாணவர்கள் எழுதினர்  

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கடலோரக் கிராம மீனவ சமுதாய பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு திங்கட்கிழமை நடைபெற்றது.  இந்திய வன உயிர் நிறுவனம், வனத்துறை, மீன்வளத்துறை, கடலோரக் காவல் குழுமம், ஓம்கார்  தொண்டு நிறுவனம் மற்றும் மீனவ சமுதாய மக்கள் இணைந்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் வசிக்கும் கடல்பசு (ஆவுரியா) உள்ளிட்ட, அரசால் பிடிக்கத் தடை செய்யப்பட்ட அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, கடல்பசு (ஆவுரியா) உதவித்தொகை திட்டம், இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மாதம் ரூ 500 வீதம் 24 மாதங்களுக்கு ரூ 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான போட்டித் தேர்வை 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 200 பேர் எழுதினர்.  முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் லோகநாதன் தலைமை வகித்தார். இந்திய வன உயிரி நிறுவன ஆராய்ச்சியாளர் முனைவர் க. மது மகேஷ் வரவேற்றார், ஆராய்ச்சியாளர் ருக்மிணி சேகர், “கடல்பசு உதவித்தொகை திட்டம்” குறித்து விளக்கினார்.  மாவட்ட வனத்துறை வனச்சரகர் இக்பால், பட்டுக்கோட்டை கடலோரக் காவல் உதவி ஆய்வாளர் வீராசாமி, மீன் வளத்துறை ஆய்வாளர் காமராஜ், ஓம்கார் பவுண்டேஷன் அன்பு ஆகியோர் பேசினர். மீனவர் கிராமத்தலைவர் பேத்தையா, இந்திய வன உயிர் நிறுவனத்தை சேர்ந்த ஆன்ட்ரூஸ், ராஜேஸ்வரன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக இந்திய வன உயிரி நிறுவன ஆராய்ச்சியாளர் கரோலின் நன்றி கூறினார்.

;