tamilnadu

img

பதக்கம் அள்ளும் பவர் லிஃப்டர்! - சி.ஸ்ரீராமுலு

“ஒரு மருத்துவர், விளையாட்டுத் துறையில் கால் பதிப்பது மிகவும் அரிது.  அதுவும் ஒரு தொடரில் ஐந்து தங்கப் பதக்கம் வென்று தேசத்தை பெருமைப்படுத்துவது அரிதிலும் அரிதாகும்.  அப்படி ஒரு நிகழ்வு அண்மையில் நடந்தது”.

தொட்டதெல்லாம்...

பல் மருத்துவரும் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்த்தி அருண் சற்று வித்தியாசமானவர். திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு, 40 வயதில்  விளையாட்டுத் துறைக்கு அறிமுகமாகி வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார். அவர் தேர்வு செய்தது பவர் லிஃப்டிங். மாவட்ட, மாநிலம், தேசியம் என பதக்கங்களை குவித்து வருகிறார். கோழிக்கோட்டில் மாஸ்டர்ஸ், புதுச்சேரியில் தென்னிந்திய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும் கொல்கத்தாவில் தங்கப் பதக்கமும் குவித்தார். பயிற்சியை துவக்கி மிகக் குறுகிய காலத்திலேயே ஆசிய அளவில் ‘பெஸ்ட் பவர் லிஃப்ட்டர்’விருது பெற்ற முதல் மாஸ்டர் பெண் இவர். ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர். 

கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கனடா நாட்டில் நடந்த காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப் பதக்கம் வென்றது ஆர்த்தி மட்டுமே. இந்தியாவிலிருந்து 27 பேர் கலந்து கொண்டாலும் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையும் இவரே. சர்வதேசப் போட்டிகளில் 6 தங்கப் பதக்கம் வென்ற ஆர்த்திக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன் எம்பி, பவர் லிஃப்டிங் சென்னை மாவட்ட நிர்வாகி மாயகிருஷ்ணனா உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டின் முதல் பெண் பவர் லிஃப்ட்டரும் தேசிய அளவிலும் பவர்லிஃப்டிங் முதல் பெண் நடுவரும் கனடாவில் தங்கப் பதக்கம் வென்றதோடு‘பெஸ்ட் பவர் லிஃப்ட்டர்’ விருதையும் தட்டிக் கொண்டு தாயகம் திரும்பிய மருத்துவர் ஆர்த்தியை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது, தாய் நாட்டுக்காக விளையாடி தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறிய சந்தோசம்,  நமது தேசிய கீதத்துக்கு மற்ற நாடுகள் மரியாதை செலுத்திய அந்த தருணத்தை தன்னால் இன்னமும் மறக்க முடியவில்லை என நினைவுபடுத்திய அவரிடம், சில நிமிடம் உரையாடினோம்.

கனவு...

எங்களது பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் ஆற்காடு. ஆனாலும் குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டோம். சிறு வயதில் பி.டி. உஷாவை போன்று வரவேண்டும் என்று கனவு கண்டாலும் எங்கள் குடும்பம் ஒரு மருத்துவர் குடும்பம் என்பதால் மருத்துவம் படிக்க சென்றுவிட்டேன். ஆனாலும் விளையாட்டு வீராங்கனையாக வரவேண்டும் என்ற ஆசை அப்படியே இருந்தது.

விளையாட்டாக...

இரண்டாவது குழந்தை பிறந்த போது எடை அதிகரித்துவிட்டேன். அதை குறைக்க ஜிம்முக்கு சென்றேன். அதுவரைக்கும் பவர் லிஃப்ட்டிங் என்றால் என்னவென்றே தெரியாது. நானும் பயிற்சி பெற விரும்புகிறேன் என்றேன். ஆண்களைப் போன்று உங்களால் ‘வெயிட்’தூக்க முடியாது. இது உங்களுக்கு தேவையில்லாத வேலை என்றனர். ஆணா? பெண்ணா? திருமணம் நடந்ததா? இல்லையா? குழந்தை பிறந்ததா? இல்லையா? என்பது முக்கியமல்ல. பெண்களால் ஏன் வெயிட் தூக்க முடியாது என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பினேன். சிறிது சிறிதாக வெயிட்டை அதிகரித்தேன். வெற்றியும் கிடைத்தது. சாதிக்கவும் முடிந்தது.

அங்கீகாரம்....

குடும்பம், மருத்துவப் பணிகளுக்கிடையே பவர் லிஃப்டிங் பயிற்சி, போட்டிகளில் பங்கேற்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. கிளினிக், உடற்பயிற்சி, போட்டிகளில் என தனித் தனியாக நேரத்தை பிரித்துக் கொண்டதால் சிரமங்கள் குறைந்தன. சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் கணவர் அருண், கிக் பாஸ் சர்வதேச வீரரான மகன் தனிஷ்க், மகள் உள்ளிட்ட அனைவரும் ஆரம்பத்தில் பயந்தனர். போகப் போக ஊக்கப்படுத்தி முழு ஒத்துழைப்பை கொடுத்தனர். பவர்லிஃப்டிங் மிக காஸ்ட்லியான விளையாட்டு என்பது உண்மைதான். முதல் முதலாக  ஹாங்காங்கில் நான் தங்கம் வென்ற போது போதுமான பாராட்டு கிடைக்கவில்லை. அதற்காக சோர்ந்து போகவில்லை. ஒவ்வொரு முறையும் வெளி நாடுகளுக்கு சென்று வர குறைந்தது இரண்டு முதல் நான்கு லட்ச ரூபாய் வரை செலவு செய்திருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல; பவர் லிஃப்ட்டர்களின் நிலை இதுதான். 

சம உரிமை...

ஒரு மருத்துவரான நானே நிதிக்காக போராட வேண்டியிருக்கிறது. மற்றவர்களின் நிலைமையை சொல்லவே தேவையில்லை. எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அது சுலபமானது கிடையாது. அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் கிரிக்கெட், டென்னிஸ் என ஒரு சில விளையாட்டுகளை மட்டும் அடையாளப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்தையும் சமமாக பார்க்க வேண்டும். சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும். எந்த விளையாட்டாக இருந்தாலும் பதக்கம் வெல்லும் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதைப் பார்க்கும் மற்றவர்களும் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள்.

தடைகளை தகர்த்து... 

பெண்கள் சிறு வயதில் ஆசைப்பட்டதை எந்த வயதிலும் சாதிக்க முடியும். இத்துடன் முடிந்து விட்டது என முடங்கி விடக் கூடாது?  கனவு காணவேண்டும். அதை நிறைவேற்ற என்ன செய்ய முடியுமோ அதை செய்து முடிக்க வேண்டும். இடையில் தடைகள் வரும் விட்டுவிடக் கூடாது. “எத்தனை முறை கீழே விழுகிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு வேகமாக எழுந்து நிற்கிறோம் என்பது தான் முக்கியம்” என்றார். தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப், பென்ச் பிரஸ் சாம்பியன்ஷிப், அதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே அவரது அடுத்த இலக்காகும். அதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.