இந்திய தடகள துறையின் இளம்புயல் ஹீமா தாஸ் (அசாம்) ஜூலை 2-ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் தொடரின் 200 மீட்டரில் (23.65 வினாடி) தங்கம் வென்றார். தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதி போலாந்தின் குட்னோ தடகள தொடரில் 200 மீட்டர் பந்தயத்திலும் தங்கம் வென்றார் ஹீமா. கிளாட்னோ தடகள தொடரிலும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கத்தை முத்தமிட்டு செக் குடியரசில் தபோர் அத்லெட்டிக் மீட் தொடரின் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டரில் 2 தங்கம் என 20 நாட்களுக்குள் ஐந்து தங்கம் வென்று இந்திய விளையாட்டு உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ஒரே மாதத்தில் தடகள உலகை மிரள வைத்த ஹீமா தாஸை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில்,” ஐரோப்பாவில் நீங்கள் செய்யும் சாதனை எனக்கு பிடித்திருக்கிறது. இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நீங்கள் இருக்கிறீர்கள்” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட் உட்பட விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள், ஆன்லைன் ஆர்மிகள் என பலரும் தங்களது வாழ்த்துக்கள் மூலம் ஹீமா தாஸின் உள்ளத்தை நனைய வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.