tamilnadu

img

விளையாட்டுக்கதிர் - தேசத்தை பெருமைபடுத்தும் வீராங்கனை!

“முஸ்லிம்கள் விளையாடக்கூடாது, அரைக்கால் சட்டை அணியக்கூடாது என்றெல்லாம் சொல்லி என்னைத் தடுக்கப்பார்த்தார்கள். ஆனால், நான் யார் சொல்வதையும் கேட்கவில்லை. இந்த நிலையை அடைவதற்கு அவர்களிடம் வாழ்க்கையில் மிகவும் போராடியுள்ளேன்”.  - இந்திய பெண்கள் கோ-கோ அணி கேப்டன் நஸ்ரீன் ஷேக். இது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு வீராங்கனைகளின் மனக்குமுறல்களும் கூட. அதிலும் மத ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்வது என்பது பெரும் சவாலாகும். அத்தகைய சவால்களை எதிர்கொண்டு சாதித்தவர்களில் ஒருவர்தான் நஸ்ரீன் ஷேக்.                  

எதிர் நீச்சல்...
அன்வாரி-முகமது கபூர் தம்பதிக்கு ஒரு மகன், ஏழு பெண் குழந்தைகள். நான்காவது குழந்தை நஸ்ரீன் ஷேக். மகளை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தனர். காரணம்,உறவினர்களால் வஞ்சிக்கப்பட்டு தனது 14வது வயதில் கிழக்கு தில்லி ஷாகுர்பூர் பகுதியில் தஞ்சமடைந்தவர் முகமது கபூர். ஆண்டுகள் பல உருண்டோடின. வாழ்க்கையை நகர்த்த பாத்திர கடையில் கூலி வேலை. சில மாதங்களுக்குப் பிறகு அந்த வேலையும் பறிபோனது. வாழ வழியின்றி அந்த இடத்தைவிட்டு வேறொரு பகுதிக்கு நகர்ந்தும் வேலை கிடைக்கவில்லை. வாரச் சந்தையின் தெருவோரம் குளிர்கால ஆடை பொருட்களை விற்பனையை துவக்கினார். மற்ற நாட்களில் துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களை தெருத்தெருவாக கொண்டு சென்று விற்பனை செய்தார்.
வாரச்சந்தையில் 50 ரூபாய் வருமானம் கிடைப்பதே அரிதிலும் அரிதானதாக இருந்தது. வசிக்க ஒரு குடிசைக் கூட கிடையாது. ஆங்காங்கே தெருவோரத்தில் படுத்துறங்குவதே வழக்கம். தெருவோர வியாபாரிகள் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளும் துயரங்களும் இவரையும் ஆட்டிப் படைத்தது. போலீசார் ஒருபுறம், நகராட்சி அதிகாரிகள் மறுபுறம் துரத்திக் கொண்டே வந்ததால் வருமானத்திற்கு வழியின்றி திண்டாடினர்.

‘அது ஒரு கனா காலம்’
தேசிய விடுமுறை நாட்களில் வாரச் சந்தைகள் மூடப்பட்டால் அன்றைய தினம் சாப்பாட்டுக்கு வழிகிடையாது. அத்தகைய சூழ்நிலையிலும் நகராட்சி அரசுப் பள்ளியில் மகளை சேர்த்தார். விளையாட்டிலும் ஆர்வம் காட்டிய மகள் நஸ்ரீனின் கனவை நிறைவேற்ற ஏறாதா மாடிப்படிகள் இல்லை. 1998 ஆம் ஆண்டு பிறந்த நஸ்ரீன், சிறுவயதில் இருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட நஸ்ரீன் தடகளம் மற்றும் கபடி விளையாடி வந்தார். இவரது திறமைகளை கண்ட பள்ளி ஆசிரியர்கள் கோ-கோ விளையாட்டில் சேர்த்தனர். சமூகத்தில் பலராலும் புறக்கணிக்கப்பட்ட  நஸ்ரீன் குடும்ப சூழ்நிலையோ, வறுமையிலிருந்து மீண்டு வருவதற்கு வழியில்லை.

 மனதில் உறுதிவேண்டும்...
 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 70 விழுக்காடு மதிப்பெண் எடுத்ததால் விளையாட்டு ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர விரும்பினார் நஸ்ரீன். இதற்காக விண்ணப்பமும் செய்தார். இவரோடு 12 ஆயிரம் பேர் பட்டியலில் காத்திருந்ததால் தனக்கு இடம் கிடைக்காது என பள்ளிச்சான்றையே கிழித்தெறிந்து விளையாட்டுக்கும் முழுக்கு போட நினைத்தபோது, வீட்டிற்கு வந்த பள்ளி ஆசிரியர்கள் விமலா ரமணா, அஸ்வினி சர்மா ஆகியோர் நஸ்ரீனையும் பெற்றோரையும் சமாதானப்படுத்தி மீண்டும் களம் இறக்கினர்.  தில்லி பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. மகள் படிப்புக்காக யாரிடமும் உதவி கேட்கக் கூடாது என்பதில் பெற்றோர் உறுதியாக இருந்தனர். நஸ்ரீனை சுற்றியிருந்த உறவினர்கள் எதிர்த்தாலும், மகளின் வெற்றிக்கு அப்பாவும், அம்மாவும் பக்கபலம். ஒவ்வொரு முறையும் போட்டிக்கு வெளியூர் செல்லும்பொழுதும் நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருப்பதாக பொய் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும் பயிற்சிக்கு சென்று இரவு 8 மணிக்கு முன்னதாகவே வீட்டுக்கு வருவதையும் நஸ்ரீன் உறுதி செய்து வந்ததால் உறவினர்களுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை.

பதக்க மழை...
உள்ளூரில் மிக சிறப்பாக விளையாடி தேசிய அணியில் இடம் பிடித்து மண்டல அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டார். ஆறாம் வகுப்பில் பள்ளி மாணவர்களுக்கான சீனியர் அணியில் மாநில போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிக்கு தூணாக நின்றவர். மூன்று சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கும் நஸ்ரீன், தேசிய அளவில் 40க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிகடின உழைப்பால் இந்திய அணிக்கு கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இவரது தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்று முத்திரை பதித்தது. இந்த போட்டியில் பங்கேற்கும் முன்பு “நீ இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் வென்றால் நாடு எங்களைப் பற்றி சிந்திக்கும்” என தந்தை கபூர் கூறியதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. கொண்டாட்டம்! மகள் நஸ்ரீனுக்கு தில்லி காவல் துறையில் வேலை கிடைக்கும் என்று தந்தை காத்திருந்தாலும், இந்திய விமான நிலைய ஆணையத்தில் மாதம் சம்பளம் 26 ஆயிரம் ரூபாய்க்கு வேலை கிடைத்தது. ‘மகள் தெம்பாக விளையாட வேண்டும் என்பதற்காக, பல வேளைகள் சாப்பிடாமல் பட்டினி கிடந்த தந்தைக்கு, இப்ப மகளுக்கு கிடைக்கும் இந்த தொகை குடும்ப செலவுக்கு உதவியாக உள்ளது. 1998 ஆம் ஆண்டு பிறந்த நஸ்ரீன் மிக இளம் வயதில் ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளில் வயதில் மூத்தவர்களோடு ஒரே நேரத்தில் விளையாடி அனைத்து நிலைகளிலும் பிரகாசித்த நஸ்ரீன், ஒரு விளையாட்டு வீரராக, எப்போதும் பசியுடன் இருந்ததையும், விடுமுறை நாட்களே வரக்கூடாது. அப்படி வந்தால் அதைப்பார்த்து பயந்த நாட்களையும் நினைத்து பார்க்கிறார். இப்போதுதான் மற்றவர்களைப் போலவே விடுமுறையை கொண்டாடுகிறார். முகமது கபூருக்கு பணக்கஷ்டம் இருந்தபோதிலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மகளுக்காக நேபாளத்திலிருந்து புதிய ஆடை ஒன்று வாங்கி வந்து கொடுத்ததும் பல ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ஊரான பீகார் மாநிலம் அரேரியா மாவட்டம் ஃபார் பகுதியிலுள்ள சொந்த கிராமத்திற்கு சென்ற ஊரே ஒன்று திரண்டு விழா எடுத்ததும் நஸ்ரீனின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வானது. சாப்பாட்டிற்கு வழியில்லை என்றாலும் கடினமான மண் பரப்புகளில் பயிற்சியை மேற்கொண்டு பசி, பட்டினியுடன் விளையாடிய நஸ்ரீன் தனது கனவுகளுக்கு சிறகுகளை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி பரிசு, கோப்பைகளை அள்ளி வந்த அவரை பாராட்ட மனமில்லை. முஸ்லீம்கள் ஹர்ட் அணியக்கூடாது, அரைக்கால் சட்டை அணியக்கூடாது எனக் கூறியுள்ளனர். இவை அனைத்தையும் மீறி “முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்” என தேசத்தை பெருமைப்படுத்தி வருவதால் சமூகத்தின் இகழ்ச்சி, மத ரீதியாக உறவினர்கள் விதித்த கட்டுப்பாடுகள், வறுமை என எதுவுமே இவரது வளர்ச்சியை தடுக்க முடியவில்லை!

;