கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால், தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் முதலிரண்டு செட்களை 7-5, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்களை 7-5, 6-4 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்ற ஆட்டம் சூடுபிடித்தது. வெற்றியை நிர்ணயிக்கும் டை பிரேக்கர் செட்டில் புள்ளிகளைக் குவிக்க இருவரும் கடுமையாகப் போராடினாலும், நடாலின் கை சற்று ஓங்கியது. டை பிரேக்கர் செட்டை நடால் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி, 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். சாம்பியன் பட்டம் வென்ற நடாலுக்கு கோப்பையுடன் ரூ. 27 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தோல்வியை ருசித்த மெத்வதேவ் கோப்பையுடன் ரூ.13 கோடி பரிசுத்தொகை பெற்றார். நடாலுக்கு இது 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முன்னணியில் இருக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை நடால் விரைவில் சேசிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.